தொழில்முனைவில் நினைவில் கொள்ள வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்!

1

18 வருடங்களுக்கு முன்னால், எனது குடும்பத் தொழில் ஆன, பருப்பு வியாபரத்தில் இணைந்த போது, பல இன்னல்களை சந்தித்தேன். தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை, அவற்றை சேமித்து வைக்கையில், அதிகபடியான நஷ்டம், பயிர்களுக்கு பாதுகாப்பின்மை, மற்றும் சரியான நிதியுதவி கிடைக்காது போவது. இப்படி நான் சந்தித்த இன்னல்கள் என்னை இவற்றை போக்குவதற்கான உத்தியை தேட வைத்தன. அப்படிதான் 'எஸ்எல்சிஎம் குழுமம்' (Sohanlal Commodity Management) உருவாகியது.

தற்போது இக்குழுமம் நன்றாக இயங்கி வருகின்றது. மேலும் வளர்சிக்கான வாய்ப்புகள் கண்ணில் தெரிகின்றது. ஆனால் இந்த வளர்ச்சியை அடைவதற்கான பாதை அவ்வளவு எளிதானது அல்ல. எனது சரியான முடிவுகள் மூலமும் தவறான முடிவுகள் மூலமும் எனக்கு பாடங்கள் பல கற்பித்தது. அப்பாடங்களை தற்போது மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்திற்கு இது தீனியாக அமையும் என்று எண்ணுகிறேன்.

1. உன்னை நம்பு

நம்மை நாம் நம்பினால் தான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். மற்றவர்களை சமாளித்து, நம் யோசனையை செயல்படுத்த, அந்த யோசனையை நாம் முழுமையாக நம்ப வேண்டும். இராப்பகல் பாராது உழைக்க வேண்டும். ஆனால் அது நம் நம்பிக்கையை குலைக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். நான் எஸ்எல்எம்சி ஆரம்பிக்கலாம் என்று கூறிய போது மற்றவர்கள் எனக்கு துணையாக இல்லை. அதை பற்றிய அச்சங்கள், குடுபத்தினர் மற்றும் நண்பர்களை தாண்டி, இத்துறையில் சில காலமாக இயங்கி வரும் நிறுவனகளிடமிருந்தும் வெளிப்பட்டது. ஆனால் எனது யோசனையில் புதுமை இருந்தது. அது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றவர்கள் தயங்கி நின்ற போது நான் எனது செயல்முறையில் புதுமைகளை புகுத்தி வந்தேன். எனது மிகப்பெரிய சவாலாக, இந்த துறையின் மீது இருந்த அச்சத்தை போக்குவதாக இருந்தது. மேலும் இத்துறையின் கொள்கைகளிலும் அசாதாரனமான மாற்றங்களை கொணர நான் முயன்று வந்தேன். தற்போது இந்நிறுவனம் இத்துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நான் நினைத்ததை நடத்தி முடிக்க முடிந்தது எனக்கு மகிழ்ச்சி.

2. தவறான முடிவுகள் தவறல்ல

தவறுகள் செய்வது மனித இயல்பு. சில முடிவுகளை சரியாக எடுப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். பல மணிநேரங்கள் விவாதங்கள் முடிவில், விடைகள் கிடைக்காது போகும். சில முடிவுகள் தவறானதாகவும் அர்த்தமற்றதாகவும் அமையும். ஆனால் இந்த பயணத்தின் போது தவறுகளை புறக்கணித்து, சரியான விடைகளை தேடுவது அவசியமாகும். அப்படி ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால், எனது நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதில் சிக்கனமாக இருக்க முயற்சித்தேன். ஆனால் அது தவறான முடிவாக அமைந்தது. ஏன் என்றால் மற்றவர்களின் மனநிலையை மாற்றி அமைக்க விளம்பரங்கள் வேண்டியதாக இருந்தது. அது செலவல்ல முதலீடே. தற்போது திரும்பி பார்க்கையில், அந்த தவறு, என்னை மற்றவர்கள் கருத்தை ஒருங்கிணைப்பதை பற்றி புரியவைத்து, என்னை சரியான பாதையில் திருப்பியதை உணர்கின்றேன்.

3. வாடிக்கையாளர் தான் முதன்மை

வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக இருந்தால், வளர்ச்சி நிச்சயம். வெற்றி நம் காலுக்கடியில் கிடக்கும். எனவே நம் கவனம், வாடிக்கையாளர்க்கு சரியான பொருளை வழங்குவதில் இருக்க வேண்டும். மேலும் நம் சேவையும் தரமாக அமையவேண்டும். எஸ்எல்சிஎம், மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர் சேவை புரியவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு தொடங்கப்பட்டது. இதற்கு சரியான உதாரணம், 2009ல் எனது முதல் வாடிக்கையாளர் ஆனவர் இன்றும் எனது வாடிக்கையாளராக உள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்.

4. பரிந்துரைகளை ஏற்கவேண்டும்

மிக உயர்ந்த கல்லூரியில் நாம் மேலாண்மை பட்டம் பெற்று வந்திருந்தாலும், மற்றவர்கள் கூறும் கருத்திற்கு நாம் இடமளிக்க வேண்டும். நாம் இருக்கும் இடம் தரும் செருக்கு நம் தலையில் ஏறாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், நல்ல யோசனை யாரிடம் இருந்தும் வரலாம். நிறுவனத்திற்கு சற்றும் சம்மந்தம் இல்லாதவரிடம் இருந்தும் வரலாம். நமக்கு சந்தேகம் இருக்கையில் அனைவரின் கருத்தையும் கேட்பது தவறல்ல. ஆனால் ஒரு பொருப்பான தலைவராக, இறுதி முடிவெடுப்பது நம் கடமையாகும்.

5. அணியை முழுமையாக நம்பவேண்டும்

நிறுவனத்தில் உள்ளவர்களோடு தான் நாம் ஒரு நாளில் பலமணிநேரங்களை செலவிட போகிறோம். அவர்கள் நம் இரண்டாம் குடும்பம் போன்றவர்கள். நம்பிக்கை, சேர்ந்து அணியாக உழைப்பது, மற்றும் மற்றவர்களை புரிந்துகொள்வது, இவை தான் ஒரு நிறுவனம் வெற்றி பெற தேவையான விஷயங்கள். அணியில் இருப்பவர்களோடு பழக பழக, அவர்களை பற்றியும், அவர்கள் திறமை பற்றியும் நாம் உணர்வோம். மேலும் அவர்களோடு சேர்ந்து நாமும் வளர்ச்சி அடைவோம். சில நேரங்களில் நம் அணிக்கு சரிபடாதவர்களை விட்டு பிரியும் முடிவையும் எடுக்கும் படி இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது, நாம் தயங்கி நிற்க கூடாது.

6. நமக்காக சில மணிநேரம்

உங்கள் தொழில் முனைவு, உங்களது நேரம் மற்றும் அர்பணிப்பை; வேண்டும். இது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கிய சீர்கேட்டிற்கு உங்களை இட்டுச்செல்லும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தை காக்கும் வழி மற்றும் உங்கள் ஆற்றலை புதுபிக்கும் வழியை நீங்கள் கண்டறிய வேண்டும். உங்கள் தொழில் முனைவுக்கு ஆரோக்கியமான தலைவர் வேண்டும் அதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.

ஆசிரியரை பற்றி

திரு சந்தீப் சபர்வால், எஸ்எல்சிஎம் இன் தலைமை நிர்வாக அதிகாரி. அவரது நிறுவனம், வேளாண் தளவாடங்கள் துறையில் இயங்கி வருகின்றது. தற்போது இந்நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த 760 கிடங்குகள், 15 குளிர்கிடங்குகளை, 17 மாநிலங்களில் நிர்வாகித்து வருகின்றது. அவற்றின் மொத்த கொள்ளளவு, 1.76 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும்.

ஆக்கம் : திரு சந்தீப் சபர்வால் |தமிழில் : கெளதம் தவமணி