ஆதரவற்ற 500 பேருக்காக மழை நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கிய 15 வயது சிறுமி!

0

15 வயது தவிஷி சிங் தனது மழை நீர் சேமிப்பு திட்டம் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட 500 பேரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறார். ’எண்ட்லெஸ் ரிவர்’ என பெயரிடப்பட்டுள்ள இவரது திட்டம் இருப்பிடமில்லாத, மனநலம் குன்றிய மக்களுக்கு தினமும் 10,000 லிட்டர் தண்ணீர் வழங்க விரும்புகிறது. 

குருகிராமில் உள்ள பாத்வேஸ் பள்ளி மாணவியான இவர் வீடில்லாத, கைவிடப்பட்ட மக்கள் பலர் ஆரோக்கியமற்ற சூழலில் வசிப்பதைக் கண்டார். இவர்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தார்.

தவிஷி நலிந்த பிரிவினருக்கு சேவையளிப்பதுடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் குருகிராமைச் சேர்ந்த ’எர்த் சர்வைவர்ஸ்’ என்கிற அரசு சாரா நிறுவனத்தை அணுகினார் என ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது. இந்த ஃபவுண்டேஷனின் வளாகத்திலேயே மழை நீரை சேமிக்கும் திட்டத்தை நிறுவ திட்டமிட்டுள்ளார்.

தவிஷி நிதி உயர்த்துவதற்காக கேட்டோ (Ketto) என்கிற ஆன்லைன் கூட்டுநிதி தளத்திலும் தனது திட்டத்தை பதிவு செய்தார். தனது நண்பர்களின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து 1.78 லட்ச ரூபாய் வரை சேகரித்தார்.

தனது திட்டம் குறித்து தவிஷி குறிப்பிடுகையில்,

”டெல்லியில் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. விரைவிலேயே தண்ணீருக்கான தட்டுப்பாடை அடுத்த மிகப்பெரிய பிரச்சனையாக ஃபவுண்டேஷன் கையிலெடுப்பதைக் காணலாம்,” என்றார்.

10,000 லிட்டர் தண்ணீர் வழங்கக்கூடிய, அதே சமயம் குறைவான விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மழை நீர் சேமிப்பு அமைப்பை நிறுவுவது அவருக்கு சுலபமாக இருக்கவில்லை. அந்த சமயத்தில்தான் திறன்மிக்க, விலை மலிவான மழை நீர் சேமிப்பு திட்டத்திற்காக விசாரித்தபோது ரெயின் மேன் ஆஃப் சென்னை என அழைக்கப்படும் சேகர் ராகவனுக்கு அறிமுகமானார் என ’தி பேட்ரியட்’ தெரிவிக்கிறது.

சேகரிடம் ஆதரவு பெற்றது குறித்து அவர் குறிப்பிடுகையில்,

“ஆரம்பகட்டத்தில் மழைநீர் சேமிப்பிற்கான திறன்மிக்க, விலை குறைவான வழிமுறைகளைத் தேர்வு செய்வதில் அவர் எனக்கு உதவினார்,” என தெரிவித்தார்.

நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்வதற்காக அரசு சாரா நிறுவனத்தின் வளாகத்தில் இரண்டு 20 அடி ஆழ போர்வெல்கள் அமைக்கப்பட்டது. போர்வெல்கள் மழைநீரால் ரீசார்ஜ் ஆன பின்னர் அவை கிணற்றை சுற்றியுள்ள பைப் வாயிலாக செலுத்தப்பட்டு நிலத்தடிநீர் மீண்டும் சுத்தமான தண்ணீராகும்.

தவிஷியின் ’எண்ட்லெஸ் ரிவர்’ திட்டம் மூன்று விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் தினசரி தேவையான 10,000 லிட்டர் குடிநீர் கிடைப்பதில் பங்களிக்கும். இரண்டாவதாக குறைந்து வரும் நீர் அட்டவணையை மீண்டும் பூர்த்தி செய்யும். நீர்நிலைகள் தேங்கியிருந்தால் அங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இவ்வாறு நீர்நிலைகள் தேங்குவது குறையும் என்பதால் அதுவே இந்த திட்டத்தின் மூன்றாவது பலனாகும். இந்த மழை நீர் சேமிப்பு அமைப்பு கடந்த மாதம் திறந்துவைக்கப்பட்டு தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது.

தேசிய அளவில் நீச்சல் வீராங்கானையான இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவற்காக தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA