ஒரு டெட்டனஸ் பாதிப்பு, 'ஜுவனைல் கேர்' தன்னார்வ அமைப்பை உருவாக்கிய கதை!

0

சமூக நலனில் அக்கறை மிகுந்த இளம் ஆர்வலர் ராகுல் பிரசாத், 2010-ல் தொடங்கிய சமூகநல அமைப்பு 'ஜுவனைல் கேர்' (Juvenile Care). இதில், குழந்தைகள் உரிமைகளுக்காகவும், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும் இளம் சமூக நிறுவனர்கள், ஆர்வலர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த 'ஜுவனைல் கேர்' (Juvenile Care) வேலூர், புனே, புதுடெல்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களிலும் பதிவு பெற்ற அறக்கட்டளை ஆகும். கார்ப்பரேஷன்ஸ் மற்றும் பணிக்குச் செல்லாத தனிபர்கள் தங்கள் நேரத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கான பயிலரங்குகள், பள்ளிகளில் மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் பயிலரங்குகள், குடிசைப் பகுதிகளிலும் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது ஜுவனைல் கேர் அமைப்பு. அதாவது, சமூகத்தில் பின்தங்கியவர்களை முன்னேறச் செய்வதற்கு அடித்தளம் அமைப்பதற்கு இளைஞர்களைத் தயார்படுத்துகிறது இந்த அமைப்பு.

ஜுவனைல் கேர் தொடங்க தாக்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னணி குறித்து ராகுல் கூறியது:

"2010-ல் கல்லூரிக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு சொந்த அனுபவம் என்னை சிந்திக்கவைத்தது. நான் தூக்கிப்போட்ட நகங்களால் என் வீட்டுப் பணியாளரின் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின், அந்தக் குழந்தைக்கு டெட்டனஸ் பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் வலியை நேரில் கண்டேன். அந்தக் குழந்தையைப் போலவே கவனிக்கப்படாமல் குழந்தைகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாவதை உணர்ந்தேன். ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானாலும் என்ன செய்வதற்கு என்று தெரியவில்லை".

"சில நாட்களுக்குப் பிறகு, புதுடெல்லியில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்றேன். உண்மையான பிரச்சனைகளை அறிந்தேன். வறுமை, சுகாதாரப் பிரச்சனைகள் மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் என பல சிக்கல்கள் நேரடியாகப் பார்த்தேன். ஆனால், இந்தப் பிரச்சனைகள் அனைத்துக்கும் முக்கியப் பொறுப்பு வகிப்பது கல்வியறிவின்மை என்பதுதான் என்ற உண்மை தெரிந்தது. இந்தப் பிரச்சனையைத் தெரிந்துகொண்ட பின் நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. சமூக நலன் என்ற பயிர்களில் பூச்சிகள் நாசத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சமூக நலன் எனும் பயிரைத் தழைத்தோங்கச் செய்ய அடித்தளம் அமைக்க எண்ணினேன். இந்த நோக்கத்துக்காக, எனக்கும் என்னைப் போன்றோருக்கும் அடித்தளம் அமைப்பதுதான் என் முக்கிய இலக்காக இருந்தது."

ஜுவனைல் கேர் திட்டங்கள்:

புராஜெக்ட் ஏசாஸ் (EHSAAS) என்பது குழந்தைத் தொழிலாளர் முறையும் வறுமையையும் ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது குறித்த திட்டம். காகிதத்தை மறுசுழற்சி செய்யவும், பள்ளியில் மாணவர் வருகையை உறுதி செய்யவும் வழிவகுக்கிறது புராஜகெட் காகஸ் (KAGAZ) திட்டம். புராஜெக்ட் யுனிஎட் (UNIED) என்ற திட்டத்தின் மூலம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகள் சொல்லித் தரப்படுகிறது. அத்துடன், பெண் குழந்தைகளைக் காப்பதற்காக ஸ்பிராஷ், வித்யா, முஸ்கான் ஆகிய திட்டங்களையும் இவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.

ஜுவனைல் கேர் - கடந்து வந்த பாதை

2010 - குழந்தைகள் நலனுக்கும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் இளைஞர்களுக்கு அடித்தளம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜுவனைல் கேர் உருவெடுத்தது.

2011 - பெங்களூருவின் கலாசிபாலயத்தில் ஜுவனைல் கேர் தனது முதல் குடிசைப்பகுதி திட்டமான ஸ்பார்ஷ்-ஐ செயல்படுத்தியது.

2012 - பெங்களூருவில் நிறுவப்பட்ட பிறகு, வேலூர் - விஐடி பல்கலைக்கழகத்துக்கு ஜுவனைல் கேர் விரிவாகம் மேற்கொண்டது. அங்குதான் குழந்தைகள் உரிமைக்கான அதிகாரபூர்வ மையம் அமைக்கப்பட்டது.

2013 - நாடு முழுவதும் சுமார் 3,000 தன்னார்வலர்களை எட்டியது.

2014 - நாடு முழுவதும் சுமார் 10,000 தன்னார்வலர்களை எட்டியது,

2015 - யுனிஎட் என்ற கல்வி நிகழ்ச்சிக்காக ஜுவனைல் கேர் தீவிரமாக ஈடுபட்டது.

சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) நிதி மற்றும் தங்களது நிகழ்ச்சிகள் மூலம் ஜுவனைல் கேர் அமைப்புக்கு நிதி கிடைக்கிறது. தங்கள் தன்னார்வலர்களுக்கு உறுப்பினருக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 - ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக, கல்லூரி மாணவர்களுக்கு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கள அனுபவத்தைத் தருகிறது ஜுவனைல் கேர். இதே மாணவர்கள் மக்கள் தொடர்பு, மார்க்கெட்டிங் மற்றும் கார்ப்பரேட் பார்ட்னர்ஷிப்ஸ் முதலான அனுபவங்களைப் பெற்று, சிஎஸ்ஆர் சார்ந்த பெரிய பட்ஜெட் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

தனியொரு பயணம்

ஜுவனைல் கேர் அமைப்பை 5 ஆண்டு காலமாக நடத்தி வருவதன் மூலம் தனிப்பட்ட முறையில் கண்டறிந்தவை குறித்து யுவர்ஸ்டோரி கேட்டதற்கு ராகு அளித்த பதில்:

"ஒரு சாதாரண நபராக இருந்த நான், கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராக வலம் வருகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சிஎஸ்ஆர் பார்ட்னர்ஷிப்புக்காக ஒரு எம்.என்.சி. நிறுவனத்தை நாடினேன். என் மோசமான தொடர்புகொள்ளும் திறனால் அந்த அலுவலகத்தைவிட்டு விரட்டப்பட்டேன். இன்று, 400-க்கும் மேற்பட்ட ஸ்பான்ஸர்ஷிப் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அந்த முதல் முயற்சியை பேரனுபவமாகவும், கற்றலில் ஒரு மைல்கல்லாகவும் பார்க்கிறேன்.

இன்றைய இளம் தலைமுறையினர் திசைகள் மாறி தவறான பாதைக்குச் செல்கின்றனர் என்ற வாதத்தை ஏற்க மாட்டேன். தங்களுக்காக அமைக்கப்பட்ட அடித்தளத்தையொட்டி, எல்லாருமே நல்லது செய்கிறார்கள். ஒலிம்பிக்ஸில் இந்தியா தரவரிசையில் 50 இடங்களுக்குப் பின்னால் இருப்பதற்கும், அமெரிக்கா 50 தங்கப் பதக்கங்களை வெல்வதற்கும் காரணம் இருக்கிறது. நான் சற்றே திரும்பிப் பார்க்கும்போது, நான் செய்த மிகப் பெரிய தவறாகக் கருதுவது, என் படிப்புக்கும் ஈடுபாடுக்கும் இடையே சமநிலையை மேற்கொள்ளாதது மட்டும்தான். அதை உணர்ந்த பிறகு, பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஜுவனைல் கேர் அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உதயமானது. மக்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதன் மூலம் என்னால் சிறப்பாக சமூகப் பணியாற்ற முடிகிறது."

அடுத்தடுத்த திட்டங்கள்

"இந்தியா முழுவதும் சமூக நலத்திட்ட நடவடிக்கைகளுடன், மார்ச் மாதம் முதல் புதிதாக களம் கண்ட யுனிஎட் (UniEd) திட்டம் மூலம் நாடு முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகளை சொல்லித்தர திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக, கர்நாடகத்தில் 10 முக்கிய கல்வியாளர்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறை பற்றிய அறிமுகம் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும்,'ஹவுஸ் ஒயிஃப் செல்' என்ற பெயரில் இல்லத்தரசிகள் மூலம் கிராமங்கள் மற்றும் குடிசைப்பகுதி பெண் குழந்தைகளுக்கு கல்வியும் சுகாதாரமும் கிடைத்திட வழிவகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்."

ராகுலுக்கு உத்வேகம் தருவது...

"புதிதாக கற்றுக்கொள்வதுதான் என்னை உற்சாகப்படுத்தும் முக்கிய அம்சம். ஒவ்வொரு தருணமும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அனுபவமும் நான் வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள துணைபுரிகின்றன. மக்களுடனுடனும் இளைஞர்களுடனும் உரையாடுவதை விரும்புகிறேன். மாணவர்களும் ஊழியர்களும் தங்களது தொடர்புத்திறனை மேம்படுத்த உறுதுணையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களிடம் இருந்தும் நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன். அவை எல்லாம் என்னை மேம்படுத்த உதவுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஜுவனைல் கேர் தொடங்கும்போது, இப்போது நான் மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது போல எனக்கு சொல்லித் தர யாருமே இல்லை. என் பயணத்தில் கிடைத்த அனுபவ அறிவை மற்றவர்களுடன் பகிரவே விரும்புகிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களிலும், கிராமங்களில் என் நேரத்தைச் செலவிடுகிறேன். நான் பார்க்கும் குழந்தைகளில் புன்சிரிப்புதான் அன்றைய நல்லிரவில் நல்லுறக்கத்துக்கு வகை செய்கிறது" என்கிறார் ராகுல்.

வலைதளம்: juvenilecare.org

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்