50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருங்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் 'Open Door'

கோட்பாடுகள் மற்றும் அறிவியல்பூர்வமான சிந்தனைகளில் குழந்தைகள் கவனம் செலுத்தி கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது ’ஓபன் டோர்’ தளம்

1

30 வயதான அனீஷ் பாங்கியா முன்னாள் ஐஐடி சென்னை மாணவர். அசோக் லேலண்ட் பணியைத் துறந்த பிறகு மற்ற நாடுகளைப் போல தரமான விஞ்ஞானிகளை இந்தியாவால் ஏன் உருவாக்க முடியவில்லை என்று சிந்தித்தார். இது குறித்து ஆராய்கையில் பள்ளிகளில் பாடதிட்டத்தை (Content) கற்றுத் தருவதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் குழந்தைகள் சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதற்கான கால அவகாசத்தை நாம் அளிப்பதில்லை என்பதை உணர்ந்தார்.

அனீஷுடன் ஐஐடி சென்னையில் படித்த 29 வயது அபிஷேக் கரிவால் அவரது நண்பர். அவருடன் இணைந்து ‘ஓபன் டோர்’ என்கிற தளத்தை தொடங்கினார். கணிதம் மற்றும் அறிவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி குழந்தைகளும் இளம் வயதினரும் அறிவியல்பூர்வமான சிந்தனைகளை மேம்படுத்திக்கொள்ள அவர்களது பாடதிட்டம் உதவுகிறது.

குழந்தைகள் பாடதிட்டத்தை மட்டும் கற்றுக்கொள்ள உதவுவதில்லை. கூடுதலாக சிந்திக்கும் மற்றும் கேள்விகேட்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது. ஓபன் டோர் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மேம்பட்ட கற்றல் முறையை (Mastery Learning) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் திரும்பத் திரும்ப கேள்வி கேட்பதன் மூலம் ஆழமாக கற்றறியும் முறையை கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

வழக்கமான கற்றல் முறை போல அடுத்தடுத்த பாடங்களை (Chapter) கற்றுத்தருவதில்லை. ஆசிரியர்கள் ஒரு கருத்தை கற்றுத்தருவார்கள். ஓபன் டோரின் மாஸ்டரி ப்ரோக்ராம் பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட கருத்து ஆழமாக புரிந்துகொள்ளப்பட்டதை உறுதிசெய்த பின்னரே அடுத்த பாடத்தை கற்றுத்தருவார்கள். 80 சதவீத மாணவர்கள் பாடத்தொகுப்பின் ஒவ்வொரு முக்கிய கருத்தையும் மேம்பட்ட முறையில் ஆழமாக புரிந்துகொள்ள இது உதவுகிறது.


தொடக்கம்

ஒரு நாள் அனீஷ் அபிஷேக்கை தொடர்பு கொண்டார். அவரது திட்டம் குறித்து கேட்டார். அந்த நேரத்தில் கல்வித்துறையில் தொழில்முனைவில் ஈடுபட விரும்பி வெவ்வேறு திட்டங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார் அபிஷேக். இருவருக்குமிடையே பல சுற்று விவாதங்கள் நடந்தன. கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்த அவர்களது சிந்தனைகள் ஒத்திருந்தது. இவ்வாறுதான் ’ஓபன் டோர்’ உருவானது. அனீஷ் கூறுகையில்,

”முதலில் புனேவிலும் பெங்களூருவிலும் கற்றல் மையங்களை அமைத்தோம். இதில் பள்ளி நேரம் முடிந்த பிறகு மாணவர்களை சிறு குழுவாக அமைத்துக் கற்றுத்தந்தோம். அவர்களை கேள்வி கேட்கும் விதத்திலேயே கற்றுக்கொடுத்தோம். திரும்பத் திரும்ப குழந்தைகளை கேள்வி கேட்டால் கிரிட்டிகல் திங்கிங் அவர்களுக்கு பழகிவிடுவதை நாங்கள் உணர்ந்தோம். பல பெற்றோர்கள் இத்திட்டத்தை வரவேற்றனர். இருப்பினும் இறுதியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்பதை உணர்ந்தோம்.” 

2013-ம் ஆண்டு இறுதியில் புனேவில் உள்ள ஒரு பள்ளி அதன் கற்பிக்கும் முறையை மேம்படுத்த இவர்களது குழுவை அணுகினர். இவர்களது கற்பிக்கும் முறையை சோதித்துப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ”மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை பள்ளியில்தான் செலவிடுகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் பள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்பதை உணர்ந்தோம். சில மாதங்கள் இது குறித்து சிந்தித்து பள்ளிகளுக்கான மாஸ்டரி ப்ரோக்ராமை உருவாக்கினோம். மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதத்தின் வெவ்வேறு கோட்பாடுகளை ஆழமாக புரிந்துகொள்ள இந்த ப்ரோக்ராம் உதவுகிறது.” என்றார் அனீஷ்.

ப்ராடெக்டில் கவனம்

ஓபன் டோரின் தற்போதைய ப்ராடக்ட் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கருத்தை மேம்பட்ட முறையில் கற்றுக்கொண்டதை உறுதிசெய்த பிறகே அடுத்த கருத்திற்கு செல்லவேண்டும் என்பதை இந்த ஸ்டார்ட் அப்பின் மாஸ்டரி ப்ரோக்ராம் உறுதிசெய்கிறது. பள்ளியின் பாடத்தொகுப்பில் ஒரு பகுதியாக இந்த ப்ரோக்ராம் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்டார்ட் அப் போலவே ஓபன் டோரின் இணை நிறுவனர்களும் ப்ராடக்ட் டெவலப் செய்வது, பள்ளிகளுக்கு ப்ராடக்டை விற்பனை செய்வது, வெற்றிகரமான செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபட்டனர்.

“இந்த ப்ரோக்ராமை பள்ளிகளில் செயல்படுத்த உதவுவது, பள்ளிகளை அணுகுவது, மாலை முதல் அதிகாலை வரை ப்ராடக்டை உருவாக்குவதில் நேரம் செலவிடுவது என நாள் முழுவதும் எங்களது நேரத்தை எப்படி செலவிட்டோம் என்பது நினைவில் உள்ளது. பள்ளிகளிலுள்ள பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சரிசெய்யப்படுவதை உறுதிசெய்கிறோம்.” என்றார்

முதலில் தொடங்கப்பட்ட பள்ளிகள் வாயிலாக மிகவும் குறைவான பணத்தை மட்டுமே ஈட்ட முடிந்தது. இதனால் நிலைமையை சமாளிக்க பகுதி நேரமாகவும் கற்றுத்தரவேண்டிய சூழல் நிலவியது. சுய முதலீட்டில் துவங்கியது சவாலாக அமைந்தது. பலமுறை அவர்களது வங்கிக் கணக்கில் பணமே இல்லாத நிலையைக்கூட சந்திக்கவேண்டியிருந்தது.

லாபத்திற்காக கல்வித் துறையில் அவர்கள் செயல்படவில்லை என்றார் அனீஷ். நமது கல்வி முறையில் பல காலமாக நிலவிவரும் உண்மையான பிரச்சனைகளுக்கு யாரும் பெரிய அளவில் தீர்வுகாண இதுவரை முனையவில்லை. இதற்கான தீர்வை செயல்படுத்த விரும்பியே இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

”பிரச்சனைகளை திறம்பட தீர்க்கும் ப்ராடக்டை உருவாக்க முதலில் நினைத்தோம். பிறகு அதை மேம்படுத்தி அதற்குப் பின்னர் அதை வணிகமாக மாற்றவும் திட்டமிட்டோம். குழந்தைகள் எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளோம். எங்களது அடித்தளம் மிகவும் வலுவாக உள்ளது.” என்றார் அனீஷ்.

செயல்பட்டு வரும் பிரிவு மற்றும் எதிர்கால திட்டம்

இந்திய ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்தில் கல்வி தொழில்நுட்பம் (Edtech) மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். இந்தத் துறையினுள் பயிற்சி மற்றும் K12 ஆகியவை மிகப்பெரிய பிரிவாக விளங்குகிறது. வருடத்திற்கு அரசு தரப்பிலிருந்து 63 பில்லியன் டாலர்களும் தனியார் தரப்பிலிருந்து 56 பில்லியன் டாலர்களும் இதில் முதலீடு செய்யப்படுவதால் அதிக மூலதனம் கொண்ட பிரிவுகளில் ஒன்றாக விளங்குவதாக கேய்சன் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பிரிவில் Byju’s 140 மில்லியன் டாலருடனும் மும்பையைச் சார்ந்த டாப்பர் ஆகியவை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2007 முதல் கிட்டத்தட்ட 1.1 பில்லியன் டாலர்கள் இந்தப் பிரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

2016-17-ம் ஆண்டில் 32 பள்ளிகளில் பணிபுரிந்து 50 லட்ச ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வருடம் 100 பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு 3 கோடி ரூபாய் வருவாயை ஈட்டவுள்ளது. ஏஞ்சல் முதலீட்டாளரிடமிருந்து 150,000 டாலர் நிதியை உயர்த்தியுள்ளது. ”சரியான நேரத்தில் நிதியுதவு கிடைத்தது ’ஓபன் டோர்’ விரைவாக வளர்ச்சியடைய உதவியது.” என்றார் அனீஷ்.

தற்போது 10 நபர்களுடன் செயல்படும் ஓபன் டோர் குழு இந்த வருடம் ஜூன் மாதத்தில் 25 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் முன்னேற திட்டமிட்டுள்ளது. ”மாஸ்டரி ப்ரோக்ராமை 2019-20-ம் ஆண்டில் 1,000 பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் B2C பிரிவில் ஓபன் டோரின் முதல் ஆன்லைன் கற்றல் ப்ரோக்ராமை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.” என்றார் அனீஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்