இது உங்கள் பேட்டைக்கான சமூக வலைப்பின்னல் சேவை!

0

இது சமூக வலைப்பின்னல் யுகம். எங்கோ இருப்பவர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது. ஆனால் அருகாமையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்வதில் இடைவெளி இருக்கிறது. நண்பர்களான விஷால் மற்றும் சுதீர் இதை உணர்ந்ததோடு , இதற்கு தீர்வு காணும் வகையில் சுற்றுப்புறத்திற்கான சமூக வலைப்பின்னல் சேவையான "தாலுக்" கை(TALLUK ) உருவாக்கினர். இதை உங்கள் பேட்டைக்கான சமூல வலைப்பின்னல் என்றும் குறிப்பிடலாம். இணையத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சேவை சுற்றுப்புற பகுதியில் சமூக இணக்கத்தையும், தகவல் தொடர்பையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

"சமூகம் தொடர்பு கொள்ளும் விதத்தில் இடைவெளி அதிகரித்து வருவதையும், இதன் காரணமாக சுற்றுப்புற பகுதியில் சமூக இணக்கம் குறைந்து அதன் விளைவாக குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை பார்க்க முடிந்தது. பாலியல் வன்செயல் போன்ற குற்றங்களும், சுற்றுப்புறம் கண்காணித்த படி இருப்பதையும், எப்போது தேவையோ அப்போது உதவிக்கு வரக்கூடிய வகையிலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி யோசிக்க வைத்தது” என்கிறார் விஷால்.

இதுபற்றி, ஓரளவு ஆய்வு செய்த போது சமூக மூலதனத்திற்கும் குற்றங்களின் விகித்ததிற்கும் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டனர். அதோடு சமூக வலைப்பின்னல் உறவுகள் நிஜ வாழ்க்கை தொடர்புகளை குறைத்திருப்பதையும் கவனித்தனர். அதைவிட முக்கியமாக இணைய உலகில் சந்தித்துக்கொள்பவர்கள் உண்மையில் தேவைப்படும் போது சந்திக்கவோ, உதவவோ முடியாமல் இருப்பதையும் கவனித்தனர்.

இடைவெளிக்கு தீர்வு

இந்த நவீன கால பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வீட்டைச்சுற்றி இருப்பவர்களுடன் சமூக உறவை பலப்படுத்திக்கொள்ள உதவும் சேவையை உருவாக்க முடியுமா என இருவரும் யோசிக்கத்துவங்கினர். இதன் மூலம் பாதுகாப்பையும் அதிகரிக்கச்செய்யலாம் என நம்பினர்.

இந்த எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்த போது ஒரு நாள் அவர்கள் வீட்டில் இருந்து தொலைபேசி வந்தது. அவர்களின் பிள்ளைகள் வெளியே சென்று விளையாடாமல் லேப்டாப்பிலேயே மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் மேலும் ஊக்கமாக அமைந்து குழந்தைகளும் தங்களுக்கான விளையாட்டுத்தோழர்களை தேடிக்கொள்ளும் வகையில் சுற்றுப்புற தொடர்பிற்கான சாஃப்ட்வேரை உருவாக்க உத்வேகம் தந்தது.

அக்கம்பக்கத்தில் தொடர்பு

தாலுக், பிரைவட் சோஷியல் நெட்வொர்க் என்படும் தனியார் சமூக வலைப்பின்னல் கருத்தாகக்த்தை ஒரு படி மேலே கொண்டுச்சென்று சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி தருவதுடன் சிறு வர்த்தகங்கள் மற்றும் சேவை வழங்குபவர்களையும் இணைக்கிறது.

குடியிருப்போர் நலச்சங்கம், சந்தை நலச்சங்கம், சமூகக் குழுக்கள் மற்றும் இதர குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், தகவல்களை பகிரவும் உதவும் தளமாக இருக்கிறது.

இந்த எண்ணம் பற்றி அறிந்த விஷாலின் நண்பர்கள் அபிஷேக் சவ்ஹான் மற்றும் ருனால் தாஹிவாடே ஆகிய இருவரும் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.

“நான்கு பேர் கொண்ட மையக் குழுவுடன், ஒரு மக்கள் தொடர்பில் வல்ல ஒருவர், நிதி விஷயங்களை அறிந்தவர், மூன்று விற்பனை பிரதிநிதிகள் மற்றும் சாப்ட்வேர் குழு ஆகியோரை எங்கள் குழு பெற்றுள்ளது” என்கிறார் விஷால்.

தொழில்நுட்ப உருவாக்கம்

தொழில்நுட்பத்துறையில் அனுபவம் இருந்தாலும் ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கான மூல வரைபடத்தை உருவாக்குவது எளிதானது அல்ல என இந்தக் குழு உணர்ந்திருந்தது. ஆனால் தொழில்நுட்பப் பின்னணி கொண்ட நிறுவனர்களை பெற்றிருந்ததால் அவர்கள் இதற்குத் தேவையான நடைமுறை மற்றும் தொழில்நுட்பச் சூழலை புரிந்து கொண்டனர்.

இது தவிர சேவையை பயனாளிகளிடம் கொண்டு செல்வது மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் உத்திகளை வெற்றிகரமாக நிறைவேற்ற ஆலோசனைக்குழு உதவியது.

தாலுக், 100 சதவீதம் கிளவுட் அடிப்படையில் செயல்படும் வலைவாசலாக இருக்கிறது. குடியிருப்பு நலச்சங்கம் உள்ளிட்ட குழுக்கள் செயல்பாட்டில் உதவுகிறது. இது செலவை குறைத்து, செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

சேவையின் முக்கிய அம்சங்கள்

தகவல் தொடர்பு அமைப்பு, குடியிருப்போர் இணைய கையேடு, சங்க நிகழ்வுகள், இணைய தேர்தல்கள், அருகாமையில் உள்ள சப்ளையர்கள் உள்ளிட்ட வசதிகளை தாலுக் வழங்குகிறது. இந்தச் சேவையை மொபைல் மூலம் அணுகலாம் என்பதால் எந்த இடத்தில் இருந்தும் இதை பயன்படுத்தலாம்.

குடியிருப்போர் சங்கத்திற்கான நிர்வாக வசதி மற்றும் உள்ளூர் சேவை பற்றிய தகவல் கொண்ட ஒரே தனியார் இணைய சமூக வலைப்பின்னல் சேவை தங்களுடையது என்கிறார் விஷால்.

இந்தச் சேவை சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கான சந்தா சேவை, பில் கட்டணம் செலுத்தும் வசதி, உள்ளூர் சேவைகள், பாதுகாப்பிற்கான கட்டண செயலி ஆகிய வருவாய் முறைகளை கொண்டுள்ளது.

துவங்கிய சில மாதங்களில், இந்த சேவை 44 குடியிருப்பு நலச்சங்கங்கள், 7 சந்தை நல சங்கங்கள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன என்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் விஷால் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

நிதி திரட்டும் வாய்ப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும், அதன் பிறகு மேலும் வளர்ச்சி சாத்தியமாகி ஓராண்டுக்குள் பத்து லட்சம் வீடுகளை சென்றடையும் இலக்குடன் இக்குழு செயல்பட்டு வருகிறது.

இணையதள முகவரி: Talluk

ஆக்கம்: சிந்து கஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்