'உத்வேக வெள்ளி'த்திரை- அறிமுகம்!

0

04/02/16

"இசை எங்கிருந்து வருது தெரியுமா?"

"இசை... இயற்கையில இருந்து வருது. அது எங்கேயும் இருக்கும்..."

இந்தக் கேள்வி - பதிலைப் பார்த்ததும், நம்மில் பலருக்கும் வடிவேலு அடிவாங்கும் அந்த நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வரலாம். எனக்கும் இப்படித்தான்.

ஆனால், நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் 'ஆகஸ்ட் ரஷ்' என்ற படத்தைப் பார்த்த பிறகு, இதே கேள்வியும் பதிலும் புதிய பார்வையையும் அனுபவத்தையும் தந்தன. என் அன்றாட வாழ்க்கையை இன்னும் அணுஅணுவாக ரசிக்கவைத்தது.

நம்ப முடிகிறதா?

ஹாலிவுட் விமர்சகர்கள் கோணத்தில் பார்த்தால் 'ஆகஸ்ட் ரஷ்' ஒரு ஆவரேஜான படம்தான். ஆனால், அந்தப் படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்திய தாக்கம் எளிதில் விவரிக்க முடியாதது.

இதோ இப்போது கணினியில் டைப் செய்யும்போது எழுகின்ற ஒலி, ஃபேன் சுற்றும்போது கேட்கும் ஓசை, என் செல்லக்குட்டி ஓட்டும் பொம்மை ரயிலின் சத்தம், வெளியே இருந்து வாகன சத்தங்களுடன் கலந்து வீட்டுக்குள் வருகின்ற காக்கைகளின் குரல்கள்... இவை எல்லாமே எனக்கு இசையாகவே என் காதுகளில் இனிக்கின்றன. அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு இவையெல்லாம் வெறும் ஓசைகளாகவும் இரைச்சல்களாகவும் மட்டுமே கடந்து போயின. ஆனால் இப்போது நிலையே வேறு.

ஆம், என் காதுகளுக்குள் புகும் எல்லாவிதமான ஓசைகளையும் இசையாக உள்வாங்கக் கூடிய ஒருவித பக்குவத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது 'ஆகஸ்ட் ரஷ்'.

இதுதான் 'உத்வேக வெள்ளி'த்திரை' சினிமா!

நம் அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் நமக்கு உத்வேகத்தை ஊட்டும் படங்களைத்தான் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் கலை வடிவம் மட்டுமல்ல. உணர்வுகளைத் தட்டியெழுப்புதல், நெகிழவைத்து இதயம் வருடுதல், வாழ்க்கைப் பாடங்களைப் புகட்டுதல் என வெவ்வேறு அனுபவத்தையும் நல்ல திரைப்படங்கள் தருவது உண்டு.

இந்த வரிசையில் பல திரைப்படங்கள் நமக்கு உத்வேகத்தைத் தரவல்லவை. மாணவர்கள் தொடங்கி தொழில் ரீதியாகவும், தொழில்முனைவு ரீதியாகவும் நமக்கு ஒரு வழிகாட்டி வடிவில் உறுதுணைபுரியக் கூடிய எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளன, வந்தவண்ணம் உள்ளன.

அத்தகைய படங்கள் தரும் அனுபவங்களைப் பகிரும் தொடர்தான் இதுதான். தமிழ் தவிர்த்து வேறு மொழிப் படங்களை இங்கே மேற்கோள்காட்டி விவரிக்கும்போது, திரைக்கதையின் முக்கியப் பகுதிகளை அப்படியே சொல்ல வேண்டியதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு என்பது விரும்பும் அனைவருக்கும் கிடைக்குமா என்ற கேள்விதான் இதற்குக் காரணம். அதேவேளையில், தமிழ்ப் படங்களை எடுத்துக்கொள்ளும்போது, ஸ்பாய்லர்கள் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இனி வெள்ளிக்கிழமை தோறும் இந்தத் தொடரை வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் உத்வேகம் தந்த சினிமாவை சிறு குறிப்புடன் எனக்கு keatsavan@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அந்தச் சிறுகுறிப்பையும் நம் அத்தியாயங்களில் ஐக்கியமாக்கி இன்னும் பல நண்பர்களுக்கு அந்த அற்புத அனுபவத்தைக் கடத்துவோம்.

பேரன்புடன்,

கீட்சவன்

| படம் உதவி: லூசியா - கன்னட திரைப்படம் |

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்