மின்னூல்களை உருவாக்க உதவும் 'Papyrus Editor' நிறுவனத்தை கையகப்படுத்தியது YourStory!

0

யுவர்ஸ்டோரி மீடியா நிறுவனம் (YourStory Media Pvt Ltd) எல்லோரும் தங்கள் கதைகளை எளிதாகவும், புதுமையான முறையிலும் சொல்ல வழி செய்யும் தொழில்நுட்ப சேவைகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்திய மொழிகளில் பயனாளிகள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கான (UGC) சேவை 2016 ஜனவரியில் அறிமுகமாக உள்ள நிலையில், மின்னூல்களை ( இ-புக்ஸ்) உருவாக்க உதவும் ஆன்லைன் எடிட்டரான பேபிரஸ் எடிட்டரை (Papyrus Editor) நிறுவனத்தை யுவர்ஸ்டோரி கையகப்படுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதற்கான ஒப்பந்தம் பற்றி யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷ்ரத்தா சர்மா கூறியுள்ளதாவது:

“செயல்படுபவர்களின் கதைகளை, தங்களது உலகத்தையும் தங்களைச்சுற்றியுள்ள உலகையும் மாற்றிக்கொண்டிருக்கும் மக்களின் கதைகளை சொல்வதற்கான வாய்ப்பே யுவர்ஸ்டோரியில் உள்ள எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் தங்கள் கதையை பகிர வாய்ப்பு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்த நோக்கத்தை நோக்கிய முக்கிய அடியாக பேபிரஸ் நிறுவன கையகப்படுத்தல் அமைகிறது”.

ஷ்ரத்தா, இந்தியாவில் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக 2008 ல் யுவர்ஸ்டோரியை துவக்கினார்.

“முன்னோடி தொழில்முனைவோரான கவுரவ் திவாரியை கடந்த ஆண்டு சந்தித்தேன். அப்போது இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை பற்றி புரிந்தது. தங்கள் கதைகளை பகிர்ந்து கொண்டு அவற்றின் மூலம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை எல்லோருக்கும் உருவாக்கித்தருவதில் இருவரும் ஒரே விதமான தொலைநோக்கு கொண்டிருப்பதும் புரிந்தது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கையகப்படுத்தல் பங்குகள் மற்றும் ரொக்கத்தை உள்ளடக்கியது.

பேபிரஸ் எடிட்டர்

பேபிரஸ் எளிமையான ஆன்லைன் எடிட்டராகும். பயன்படுத்த எளிமையான இடைமுகம் மூலமாக நூலாசிரியர்கள் மின்னூல்களை உருவாக்க இது வழிசெய்கிறது. எளிதாக டிராக் செய்து வரும் முறை மூலமாக அட்டையை வடிவமைக்கவும், இணையத்தில் இருந்து உள்ளடக்கத்தை கொண்டு வர அல்லது புதிய பதிவு எழுதுவது போல உள்ளடக்கத்தை உருவாக்கவும் உதவுகிறது. நூலாசிரியர் அல்லது பயனாளிகள் தங்கள் புத்தகத்திற்கு விலையை நிர்ணயித்து அதை வெளியிடலாம்.

2012 ல் பேபிரஸை நிறுவிய கவுரவ் திவாரி இது பற்றி கூறியுள்ளது:

"மின்னூல்களை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கத்துடன் பேபிரஸ் துவக்கப்பட்டது. இது பெருமளவுக்கு சுயபதிப்பை பயனாளிகளுக்கு மேலும் எளிதாக்கியுள்ளது. யுவர்ஸ்டோரியின் அங்கமாவது மூலம் பேபிரஸால் பெரிய அளவில் பயனாளிகளை சென்றடைவதுடன், இந்தச் சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்”.

கவுரவ், யுவர்ஸ்டோரியில் அதன் தொழில்நுட்ப தலைவராக இணைகிறார். தகுதி வாய்ந்த பொறியியல் வல்லுனர்கள் குழுவுடன் இணைந்து செயல்படுவார். யுவர்ஸ்டோரி உருவாக்கி வரும் புதிய தொழுல்நுட்ப சேவைகளில் அவர் கவனம் செலுத்துவார். இவற்றில், பயனாளிகள் உருவாக்கும் உள்ளடக்கம் முக்கியமானது.

ஒவ்வொரு இந்தியருக்கும் அவர்கள் மொழியில் கதைகளை சொல்வதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் உள்ளடக்கத்தை ஜனநாயகமயமாக்குவதில் யுவர்ஸ்டோர் நம்பிக்கை கொண்டுள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்கள் எழுத்து, குரல் மற்றும் வீடியோ வாயிலாக தங்கள் கதைகளை சொல்லலாம். இந்திய மொழிகளுக்கான மேடையை அறிமுகம் செய்வது இதன் முதல் படி. 21,000 தொழில்முனைவோர்களின் கதைகளை சொல்லியிருக்கும் யுவர்ஸ்டோரி ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், மராத்தி, கன்னடம், மளையாலம், குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, அசாமிஸ் மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் வெளியாகிறது.

”எப்போதும் போலவே எங்களை நேசிப்பதையும், விமர்சிப்பதையும் தொடரவும். 2016 ல் பல சேவைகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். உங்கள் ஆதரவு மற்றும் கருத்துக்கள் தேவை” என்கிறார் ஷ்ரத்தா.

யுவர்ஸ்டோரி

யுவர்ஸ்டோரி தொழில்முனைவோருக்கான இந்தியாவின் முன்னணி மீடியா தொழில்நுட்ப மேடையாகும். இந்தியாவின் தொழில்முனைவு சூழலை முன்னிறுத்துவது மற்றும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. தொழில்முனைவோரின் கனவுகள், தோல்விகள் மற்றும் வெற்றிகளை கதைகளாக முன்வைப்பதில் முன்னோடியான யுவர்ஸ்டோரி இந்தியாவில் ஸ்டார்ட் அப் போக்குகளின் தீர்மானமான குரலாகவும், மிகவும் நாடப்படும் மேடையாகவும் இருக்கிறது.

2008 முதல் யுவர்ஸ்டோரி.காம் 21,000 க்கு மேற்பட்ட தொழில்முனைவோர், புதுமையாளர்கள் மற்றும் மாற்றத்திற்கான மனிதர்களின் கதைகளை பதிவு செய்துள்ளது. டெக் ஸ்பார்க்ஸ், மொபைல் ஸ்பார்க்ஸ் போன்ற பல்வேறு மாநாடுகள் மற்றும் மீட் அப் சந்திப்புகள் மூலம் 50,000 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கான வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இன்று மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான தேசத்தின் வேட்கையின் கூட்டு குரலாக இது விளங்குகிறது. இந்த அடையாளம் தான் யுவர்ஸ்டோரியை இந்தியாவில் ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர் மற்றும் புதுமையாளர்கள் நம்பிக்கையுடன் நாடும் மேடையாக உருவாக்கியுள்ளது.

ஆக்கம்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில் சைபர்சிம்மன்