'தமக்கு தாமே’- 7 ஆயிரம் விதவைப் பெண்கள் துவங்கி இருக்கும் ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘

தமிழகத்தில் குடியினால் கணவனை இழந்த 12 மாவட்டங்களைச் சேர்ந்த 7000 விதவைப் பெண்கள் ஒன்று சேர்ந்து, நாகப்பட்டினத்தில்  இந்தச் சங்கத்தைத் துவங்கியிருக்கிறார்கள். 

1

தமிழ்நாட்டிலேயே விதவைகள் அதிகம் இருக்கும் பகுதி நாகப்பட்டினம் தானாம்!

இந்த ஆண்ட்ராய்டு யுகத்திலும் சாதி ஒழியவில்லை என அடிக்கடி நிரூபிக்கின்றன கௌரவக் கொலைகள். ‘விதவைகளின் துயரம், அவர்களுக்கு சமூகம் இழைக்கும் கொடுமை இதெல்லாமும் கூட அப்படித்தான்... இன்னும் மாறவேயில்லை’ எனச் சொல்ல வந்திருக்கிறது ’விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்’. தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரம் விதவைப் பெண்கள் ஒன்று சேர்ந்து, நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு இந்தச் சங்கத்தைத் துவங்கியிருக்கிறார்கள். 

‘‘முதல்ல இந்த அமைப்பையே குடியினால் கணவனை இழந்த பெண்களுக்காகத்தான் துவங்கினோம். பிறகு விதவைப் பெண்கள் எல்லாரும் பயனடையணும்னுதான் இப்படி மாத்தினோம். இப்பவும் எங்கள்ல 80 சதவீதம் பேர் குடியால் கணவனை இழந்தவங்கதான். அதனால எங்களோட முக்கியமான கோரிக்கையே பூரண மதுவிலக்கைக் கொண்டு வர்றதுதான்!’’

எனத் துவங்குகிறார் இந்தச் சங்கத்தின் செயலாளர் ஜே.புஷ்பா. இவரின் சொந்த ஊர் வேதாரண்யம். புஷ்பாவின் கணவர் குடியாலதான் இறந்தார். கூலி வேலை செய்து தினசரி சம்பாதிக்கும் பணத்தை முழுசா குடிச்சிடுவார். ”என்னைப் போல விதவையானவங்க நாகப்பட்டினத்தில் மட்டுமே இருபதாயிரம் பேர் இருப்பாங்க. அரசாங்கம் எங்களுக்கு ஆதரவற்றோர் பென்ஷனா மாசம் 1000 ரூபாய் தருது. ஆனா, அது வேணும்னா ரேஷன் கார்டைக் கொடுத்துடணும்,” என்கிறார் பரிதாபமாக.

விதவைகளுக்கு அந்த உரிமை இந்த உரிமைங்கறாங்க. எங்களுக்கெல்லாம் ரேஷன் கார்டே கிடையாதுன்னு எத்தனை பேருக்குத் தெரியும்?

எங்களை மாதிரி பெண்கள் மேல இந்த சமூகத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இருக்குற பார்வை மாறல. நாங்க மனு கொடுக்கவோ விதவை பென்ஷன் வாங்கவோ தாலுகா ஆபீஸ் போனா கிள்ளுக்கீரை மாதிரி பாக்கறாங்க, என்கிறார் ஆவேசமாக.

‘அனாதைப் பணம் வாங்க வந்திருக்கியா? அங்க ஓரமா போய் உக்காரு’ங்கறாங்க. இதுதான் நிதர்சனம்.

சங்கத்தின் செயலாளர் ஜே.புஷ்பா (இடது)
சங்கத்தின் செயலாளர் ஜே.புஷ்பா (இடது)

பல பெண்களுக்கு இதைக் கேட்டதுமே அழுகை வந்துடும். நாங்க அனாதையாக யார் காரணம்? நாகப்பட்டினத்தில் எங்க சங்கத்துல உறுப்பினர்கள் 2500 பெண்கள். அதில் 2000 பேருக்கு மேல கணவனை இழந்தது குடியாலதான் என்று தகவலை அடுக்கிறார்.

”டாஸ்மாக் மூலமா அரசாங்கமே விதவைகளை உருவாக்குது. அதுக்குப் பிறகு அவங்களுக்கே அனாதைப் பணம் கொடுக்குது. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. காலேஜ் படிக்கிறாங்க. 1000 ரூபாய் உதவித் தொகையை வச்சி என்ன செய்ய முடியும்? நான் கட்டிட வேலைக்குப் போறேன். என்னை மாதிரியே எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வாழுறாங்க.” 

அரசு இவர்களின் உதவித் தொகையை 3000 ரூபாயா உயர்த்தணும் என்பது கோரிக்கை. அதோட, பறிக்கப்பட்ட ரேஷன் கார்டையும் திருப்பித் தரணும் என்கின்றனர். 

”தமிழ்நாட்டுல 22,32,879 விதவைகள் இருக்காங்க. ஆனா, எங்களுக்காகப் பேச யாருமில்ல. அதனாலதான் நாங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து எங்களுக்கு நாங்களே ஆதரவா இருக்கத் தீர்மானிச்சிட்டோம்!’’

என்கிறார் புஷ்பா. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமீபத்தில் அனைத்துக் கட்சி அலுவலகங்களுக்கும் சென்று மனு கொடுத்திருக்கிறார்கள் இவர்கள்.

கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு இன்றும் நிகழும் கொடுமைகளைத் தன் அனுபவத்தில் இருந்து பேசுகிறார் சங்க உறுப்பினரான ஜோதி.

‘‘என் கணவர் இறந்து ரெண்டு வருஷம் ஆகுதுங்க. எனக்கு ஒரு பொண்ணு. காலேஜ் படிக்கிறா. கணவர் இறந்த பிறகு அவரோட அண்ணனுங்க எல்லாம் சொத்துக்களை எழுதி வாங்க முயற்சி பண்ணினாங்க. தனி ஒருத்தியா என்னால அவங்களை எதிர்க்க முடியலை. போலீஸ் ஸ்டேஷன் போற அளவுக்குத் துணிச்சல் இல்லை. அப்போ இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவங்கதான் உதவி செஞ்சாங்க. குடும்ப வன்கொடுமைச் சட்டம்னு ஒண்ணு இருக்கு. ஆனா, அது சும்மா பேருக்குத்தான். கல்யாணம், காதுகுத்துனு முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போனா எங்களை அபசகுனமா நினைக்கிறது இன்னும் மாறல. பல கிராமங்கள்ல காலை, மாலை நேரங்கள்ல விதவைப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாதுனு சொல்றாங்க, என இன்றைய நிலையை அடுக்கிறார் ஜோதி.

‘நல்லது கெட்டதுக்கு நாலு பேரு ரோட்டுல போவாங்க... நீ போய் வழியில நிக்காதே’னு விதவைகளைத் தனிமைப்படுத்துறாங்க. இது எல்லாம் மாறணும். அதுக்கான முதல் முயற்சிதான் இந்தச் சங்கம்!’’

என்கிறார் அவர் நம்பிக்கையாக!

விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க கோரிக்கைகள்...

* பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 

* உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி ரேஷன் கார்டுகளையும் வழங்க வேண்டும்.

* மதுவினால் கணவனை இழந்த பெண்களுக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்க வேண்டும். 

* கணவனை இழந்த இளம் விதவைப் பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தர வேண்டும். 

* மறுமணம் செய்யும் விதவைகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். 

* விதவைகள் சிறு தொழில் துவங்க வங்கிகளில் 5 லட்சம் வரை கடன் உதவி செய்ய வேண்டும். 

* தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளி வரை இலவசக் கல்வி மற்றும் மேற்படிப்புக்கான கல்விக் கடனில் சலுகை வழங்க வேண்டும்.

 விதவைப் பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து பாலியல் தொல்லைகள் வருகின்றன. எனவே, மகளிர் காவல் நிலையங்கள் தனிக் கவனம் எடுத்து இந்தப் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும்.

ஒரு பெண் தனியாக வாழ்வதே இன்றைய காலகட்டத்திலும் கடினமாக உள்ள சூழ்நிலையில், கணவனை இழந்து குழந்தைகளுடன் அதுவும் சிறிய கிராமங்களில் வாழும் இப்பெண்களுக்கு ஆதரவு வேறெங்கும் இல்லை தங்களைப்போன்றோரிடமே என்ற நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக விதவைகளின் கோரிக்கைகள் நிறைவேற சமூகத்தில் பலரும் உதவிட முன்வரவேண்டும்.