உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஒரு முடிவை சொல்கிறேன் கேளுங்கள்! 

1

அன்பான மாணவர்களே,

உங்கள் கைகளில் பல்வேறு நிறுவனங்களின் ஆஃபர் லெட்டர் இருக்கலாம். எந்த நிறுவனத்தில் சேருவது என நீங்கள் தடுமாறிக்கொண்டிருக்கலாம். அது போன்ற சிறப்பான ஒன்றை என்னால் கொடுக்க முடியுமா என தெரியவில்லை. நான் உங்கள் பணியை விரும்புகிறேன், உங்கள் டிசைன் மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் எண்ணம், தொடர்புகொள்ளும் திறமை எல்லாமே என்னை கவர்கிறது. நீங்கள் என்னிடம் சேருவதையே விரும்புகிறேன். எங்கள் நிறுவனம் யாருமே கேள்விப்படாத, மிக வேகமாக வளர்ந்துவரும் புதிய நிறுவனம். ஆனால் உங்கள் கைகளில் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு என்னிடம் வாருங்கள் என்று ஏன் சொல்கிறேன் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

பெரு நிறுவனங்களின் சம்பளம் :

உங்களுக்கு மைக்ரோசாஃப்டில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள். எனக்கு மட்டும் அது போல ஒரு வேலை கிடைத்திருந்தால், நான் ஒரு நிறுவனம் துவங்கியிருக்க மாட்டேன்.

என் அறிவுரை : கார்பரேட் நிறுவனங்களின் சம்பளத்தில் பாதுகாப்பு அடைந்துவிடாதீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கக்கூடிய ஒருவர். எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கு சிலவற்றை எடுத்து கூற விரும்புகிறேன்.

பெரு நிறுவனங்களில் நீங்கள் வாங்கும் சம்பளம் என்பது அந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் ஒரு துளி தான். ஆனால் நாங்கள் உங்களுக்கு அதைவிட மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறோம். நிறுவனத்தில் உங்களுக்கும் பங்கு அளிக்கிறோம். நாளை நிறுவனம் வளர, வளர பங்குப்பணம் வளரும். அது நீங்கள் கற்பனையே செய்ய முடியாத அளவு பணமாக இருக்கும்.

நாங்கள், உங்களை நம்புவதைப் போல, நீங்களும் எங்களை நம்ப வேண்டும்.

மார்க் ட்வெயின் ஒரு முறை சொன்னார், “இன்று உங்கள் பலத்தை யாருக்காகவோ பிரயோகித்தீர்கள் என்றால், இதையெல்லாம் நாம் செய்யவில்லையே என்று இருபது ஆண்டுகள் கழித்து நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள்” என்றார்.

ரெஸ்யூமில் இருக்கும் ப்ராண்ட் பெயர்கள்

உங்கள் ரெஸ்யூமில் கூகிள், ஃபேஸ்புக், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் பெயர்களை போட்டுக்கொள்ள விரும்புகிறீர்கள். அது ஏன் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று லட்சகணக்கானோர் அதே தகுதியோடு வெளியில் இருக்கிறார்கள். உண்மையில் அது ஒரு பிரச்சினையே அல்ல. உங்கள் ரெஸ்யூமில் இருக்கிற வார்த்தைகளை விட, உங்கள் வேலையும் உங்கள் திறமையும் தான் அதிகம் பேசும்.


ஒரு நிறுவனம் துவங்கப்பட்ட காலத்தில், அதில் பணிக்கு சேர்ந்து அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு தான் இங்கே மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உதாரணமாக அன்கித் நகோரியை எடுத்துக்கொள்ளலாம். இவர் முன்பு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை தொழில் அதிகாரியாக இருந்தவர். இன்று பலருக்கும் முன்மாதிரியான ஒருவராக இருக்கிறார்.

உங்களுக்கு பிடித்த ஊரில் பணியாற்றலாம்

நாங்கள் இப்பொழுது இந்தியா முழுமையிலும் அலுவலகம் வைத்திருக்கவில்லை. அதனால் உங்கள் ஊரிலேயே உங்களுக்கு வேலை கொடுக்கும் நிலையில் இல்லை. ஆனால் நிச்சயமாக உங்கள் ஊரிலும் ஒரு நாள், நாங்கள் கால் பதிப்போம். எங்கள் நிறுவனத்தின் கிளையை உலகம் முழுவதும் பரப்பப்போகும் ஒருவராக கூட நீங்கள் இருக்கலாம். நிச்சயமாக அந்த காலம் வரும்.

பணிப்பாதுகாப்பு

புதுநிறுவன உலகில் இருக்கும் 90 சதவீத நிறுவனங்கள் 2 ஆண்டுகள் கூட தாக்குபிடிப்பதில்லை. இதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் என்னை மீண்டும் ஒரு முறை நம்புங்கள் என கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் திட்டமிட்டபடியே எல்லாம் நடக்கவில்லை என்றாலும் கூட நாங்கள் உங்களோடு இருப்போம். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க ஏற்பாடு செய்வோம். நீங்கள் ஒன்றை நம்ப வேண்டும். இன்னும் ஒன்றிரண்டு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில் உங்கள் பெயர் மட்டுமல்ல.. எல்லோருக்கும் உங்களைப்பற்றி எல்லாமும் தெரியும் வாய்ப்பை உருவாக்குகிறோம்.

பெற்றோர்களின் நெருக்கடி

இதற்காகவே நான் உங்கள் அம்மாவை சந்திக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒரு நாள் காஃபி அருந்தும் பொழுது சொல்லுங்கள். நான் வருகிறேன். உங்கள் அம்மாவோடு பேசுகிறேன். இந்த கடிதத்தில் இருக்கும் சில வார்த்தைகளை அவருக்கும் சொல்கிறேன். அவரது 23 வயது குழந்தை பற்றி அவரிடம் விளக்குகிறேன். அந்த குழந்தை இந்த உலகத்தையே மாற்றப்போவதை, அவர் ஒரு போதும் தடுக்கமாட்டார். இந்த உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் தன் குழந்தையை எந்த அம்மாவாவது தடுப்பாரா?

ப்ரியன் அக்டான் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அவர் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர். அந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியது. அவர் நினைத்திருந்தால் ஃபேஸ்புக்கில் சென்று பணியாற்றிருக்கலாம். ஆனால் புதிய சவாலுக்குத் தயாரானார்.


எச்.ஆர் குழு

கூகிள் இந்தியாவில் இன்று இருக்கும் எச்.ஆர் டீமில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அளவுக்கு கூட எங்கள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இல்லை. ஆனால் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்கள் வீட்டில் எச்.ஆர் என்று யாராவது இருக்கிறார்களா? நானும் அது போல தான். உங்கள் அம்மா உங்களை எந்த அளவு நேசிப்பாரோ அப்படி நாங்கள் நேசிப்போம். அவர் உங்களை எப்படி அளவிடுவாரோ, அப்படியே மதிப்பிடுகிறோம். அவரோடு நீங்கள் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் வரை ஒரே ரயிலில் செல்வதை யோசித்து பாருங்கள். அந்த பயணம் எவ்வளவு இதமான ஒன்றாக இருக்கும். அது போல ஒரு பயணத்தை எங்களிடம் நீங்கள் பெறலாம்.

என் நண்பன் ராக்ஸ்டாராக இருக்கிறான். நான் பெங்களூரு வரப்போகிறேன் என்று தெரிந்ததும், கொல்கத்தாவிலிருக்கும் ஜாராவிலிருந்து அவனுக்கு ஷூ வாங்கிவரச்சொல்லி கேட்கிறான். நான் வேறு எங்காவது ஷூ வாங்கி அவனுக்கு அளிக்கலாம். ஆனால் ஜாரா மட்டுமே அவனை திருப்தி படுத்தும். ஆம். உங்களுக்கு சரியானது மட்டுமே உங்களை திருப்தி படுத்தும்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன்.வாழ்க்கையில் சில வாய்ப்புகள் எப்போதாவது தான் வரும். நாம் அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு காலத்தில் பிறப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இன்று தொழில்நுட்பம் நமக்கு அத்தகைய வாய்ப்பை கொடுத்திருக்கிறது. நமக்கு கல்வியும் திறமையும் கொடுக்கப்பட்டிருப்பதற்கு காரணமே நாம் அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். நிச்சயமாக நாம் அதை செய்ய வேண்டும்.

கடைசியா ராபர்ட் ஃப்ராஸ்ட் வரிகளை நினைவு படுத்துகிறேன். “இரண்டு பாதைகள் எனக்கு முன் விரிந்தது. நான் யாருமே செல்லாத பாதையை தேர்ந்தெடுத்தேன். அது எல்லா மாற்றத்தையும் கொடுத்தது

நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுத்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே!

வாழ்த்துக்கள். சக்சம் கர்வால்

(கட்டுரையாளர் சக்சம் கர்வால் Seenlt என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர்)

தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

'களத்தில் இறங்கி சந்தையின் இதயத்துடிப்பை அறிந்து கொள்வதே முக்கியம்': முதலீட்டாளர் சுமர் ஜுனேஜா

என்னுடைய முதல் தோல்வியிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்!