ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் சந்திக்கும் தோல்விகள் மற்றும் மன அழுத்தம் குறித்த ஒரு அலசல்...

0

’தோல்வி என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல.’ பெரும்பாலும் இந்த வாக்கியம் மக்களை ஊக்கப்படுத்தவே கூறப்படும். ஆனால் அது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் பொருந்தாது.

Apollo 13 ஹாலிவுட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வாக்கியம் NASA போன்ற விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் குழுக்களுக்கு மட்டுமல்லாமல் தனிநபரான தொழில்முனைவோருக்கும் பொருந்தும்.

எதிர்ப்பார்ப்புகளால் ஏமாற்றம்

இப்படிப்பட்ட வாக்கியங்களால் பலர் ஸ்டார்ட் அப் உலகிற்கு ஈர்க்கப்பட்டாலும் இறுதியில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

சிலிக்கான் வேலியைப் போன்ற மாதிரிகளைக் கொண்ட இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவுகள் துரதிர்ஷ்டவசமாக முதிர்ச்சி அடையவில்லை. வென்ச்சர் கேப்பிடல் முதலீடு செய்யப்பட்டு அதிக பங்கு வகிப்பதால் ஒரு புதிய கலாச்சரம் உருவாக்கியுள்ளது. இதனால் நீங்கள் சாதனை படைக்கவோ அல்லது தோல்வியுறும் நிலையோ ஏற்படுகிறது.

வேலியின் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கும் மார்க் ஆண்டர்சன் போன்றோர் குறிப்பிடுகையில், 

“ஸ்டார்ட் அப் உலகைப் பொருத்தவரை நீங்கள் ஒரு மேதை அல்லது முட்டாள். நீங்கள் முயற்சித்து பார்க்கும் ஒரு சாதாரண நபராக எப்போதும் இருக்கமுடியாது,” என்கின்றனர். 

இதனால் ஸ்டார்ட் அப் பலவீனமானர்களுக்கானதல்ல என்பது தெளிவாகிறது. இருப்பினும் பலர் ஸ்டார்ட் அப்பால் கவரப்பட்டு தொடர்ந்து ஈர்க்கப்படுகின்றனர். தொல்வியடைகின்றனர். தோல்வி என்பது மறுக்கமுடியாதது.

“நான் என்னுடைய வென்ச்சரை துவங்கும்போது ஒரு நிலையான வணிகத்தை உருவாக்கவே விரும்பினேன். தோல்விகளைக் கையாளத் தயாராக இருந்தேன்.” என்றார் யாப்பிலி நிறுவனத்தின் நிறுவனர் ராஷ்மி ஆர்.பதி. இந்நிறுவனம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. Thoughtworks இந்தியாவில் ப்ராடக்ட் ப்ராக்டீஸை இணைந்து வழிநடத்துகிறார்.

ராஷ்மி கூறுகையில், “சிலிக்கான் வேலியின் அணுகுமுறையை நாம் தவறாக புரிந்துகொள்கிறோம். விரைவாக தொல்வியுற வேண்டும் என்றால் நிறுவனத்தை கீழ்நிலைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது. விரைவாக சோதனைகளை முயற்சித்து எது சரியானது என்பதைக் கண்டறியவேண்டும் என்பதே பொருள் என்று நான் நினைக்கிறேன்.”

உங்களது ஏமாற்றம், கோபம், பதற்றம் ஆகியவை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றார் தோல்வி மனநிலையை அனுபவித்துள்ள ராஷ்மி. கடினமான காலகட்டங்களை எதிர்கொள்ளும்போது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆதரித்ததால் மட்டுமே தன்னால் சிறப்பான மனநிலையில் இருக்க முடிந்தது என்றார். ”உங்களது பயணத்தை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய ஒத்த சிந்தனையுடைய நபர்கள் எப்போதும் உடனிருப்பது அவசியம்” என்கிறார் ராஷ்மி.

சமீபத்தில் இவர் சந்தித்த பல்வேறு தொழில்முனைவோர் தனிமையான உணர்வுடனும் விரக்தி மனநிலையிலும் இருப்பதாக ஒப்புக்கொண்டதாக ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.

மேலும் ”மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த தொழில்முனைவோர் தங்களது தோல்விகளுக்கு தங்களை காரணமாக்கிக்கொண்டு வெற்றிக்கு மட்டும் அதிர்ஷ்ட்டத்தை காரணம் காட்டுவார்கள்.” என்றார்.

தொழில்முனைவுப் பயணத்தில் பல நம்பிக்கைகள் உள்ளது. புதுமை என்கிற பெயரில் தொழில்நுட்ப சூப்பர்ஹீரோக்கள் ப்ராடக்ட் வாயிலாக உலகத்தை மாற்றும் முயற்சியில் உள்ளனர். எனவே இந்த வழிமுறைகள் பின்பற்றப்படவில்லையெனில் அவை சாதாரணமாக முயற்சியாகவே கருதப்படுகிறது. அதுதான் விரக்திக்கு காரணமாகிறது.

மாறுபட்ட சூழல்

2014 மற்றும் 2015-ம் ஆண்டு மறக்கமுடியாத காலகட்டமாக இருந்தது. இந்த சமயத்தில் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்தில் அதிகளவிலான நிதி புழக்கம் காணப்பட்டது. ’ஏதாவது ஒன்றை உருவாக்கலாம்’ என்பதே பொறியாளர்கள் மற்றும் கோடர்களின் தாரக மந்திரமாக இருந்தது. முதலீட்டாளர்கள் அவர்களைத் தழுவிக்கொள்ள இருகரம் நீட்டி அழைத்தனர்.

அனைவருக்கும் நிதி வழங்கப்பட்டது. “ப்ராடக்டை சந்தைக்கு ஏற்றவாறு உருவாக்க முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து பெருமளவு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களின் தேவையுடன் ஒப்பிடுகையில் தகுந்த ப்ராடக்டை வழங்குதில் சிரமம் காணப்பட்டது,” என்றார் ராஷ்மி.

”உச்சியில் இருக்கும் வேகம் மயக்கத்தையளிக்கும்,” என்றார் நவ்நீத் சிங். இவர் இணை நிறுவனராக செயல்பட்ட பெப்பர்டேப் என்கிற ஸ்டார்ட் அப் 40 மில்லியன் டாலர் Series B சுற்று நிதி உயர்த்தியது.

அதன் பிறகு 2016-ம் ஆண்டு அவர்கள் நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. நவ்நீத் கூறுகையில், 

“நிதி சூழல் உலகளவில் அவநம்பிக்கையுடன் காணப்படத் துவங்கியுள்ளது. அதிகளவு கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் சூழல் உருவாகி வருவதால் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

டெல்லியிலிருந்து தொலைபேசி வாயிலாக உரையாடுகையில் நிலைமை சற்று இறுக்கமாக இருக்கையில் இணை நிறுவனர்கள் ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாக இருந்ததால் சிறப்பான மனநிலையை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்றும் “எங்களது லாஜிஸ்டிக்ஸ் வணிகம் சிறப்பாக இருந்ததால் நிதி பிரச்சனை இல்லை,” என்றும் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் நிதிதான் ஒருவருக்கு பிரச்சனையாக இருக்கும். “இந்தியாவில் வணிகத்தை உருவாக்க சுயநிதியில் செயல்படும் வணிக மாதிரியைப் பின்பற்றாமல் VC மாதிரியில் செயல்படத் துவங்கியுள்ளது.” என்றார்

2017-ம் ஆண்டில் நிறுவனர்கள் தங்களது சேமிப்பைக் கொண்டு ஸ்டார்ட் அப் துவங்கி VC நிதி உயர்த்தலாம் என்கிற நம்பிக்கையில் இருப்பர்வகள் கடினமான காலகட்டத்தையே சந்தித்து வருகின்றனர். அதே சமயம் சுயநிதியில் இயங்கி வருபவர்களால் இந்நிலையை எதிர்கொள்ள முடியும்.

”முதலீட்டாளர்களும் நிறுவனர்களும் எச்சரிக்கை உணர்வுடன் காணப்படுகின்றனர். ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் அதிக பணப்புழக்கம் இல்லாததால் ஒரு விரக்தி உணர்வு காணப்படுகிறது,” என்று ஒப்புக்கொண்டார் நவ்நீத்.

மன அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு இளம் தொழில்முனைவோருக்கு பணியிடத்தில் காணப்படும் கீழ்கண்ட சவால்கள் அவரது நிலையை மேலும் மோசமாக்குவதாக தெரிவித்தார் மனநிலை சார்ந்த பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்பான YourDost நிறுவனத்தைச் சேர்ந்த சுயஷ் குமார்.

• ஒருங்கிணைப்பு, குழுவாக செயல்படுதல், ஊழியர்களிடையே புரிதல் ஆகியவை இல்லாத சூழல்.

• நிறுவனத்தின் நோக்கமும் ஊழியரின் விருப்பமும் ஒன்றிணைவது கடினமாக இருக்கும் சூழல்.

• குடும்பம் மற்றும் சமூகத்தின் ஆதரவு கிடைக்காமல் போகும் சூழல்.

• எரிச்சல் மற்றும் விரக்திநிலையுடன் எப்போதும் காணப்படுதல்.

• சமூகத்துடன் ஒன்றிணையாமல் ஒதுங்கியிருக்கும் மனப்பாங்கு.

• இந்தக் காரணங்களால் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் பணிகளை முடிக்கமுடிவதில்லை. இதனால் ROI தாமதமாகிறது.

• தங்களது உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவதில் சிரமம்.

நிலைமை சரியில்லாமல் ஒரு இறுக்கமான நிலை நிலவுகையில் இத்துடன் எரிச்சல், தூக்கமின்மை, முறையற்ற உணவு உட்கொள்ளுதல் என பல்வேறு பிரச்சனைகள் கூடுதலாக இணைந்து நிலையை மோசமாக்குகிறது. Moz, SEO குரு மற்றும் நிறுவனர் ராண்ட் ஃபிஷ்கின் இமெயில் வாயிலாக என்னுடன் தொடர்ப்புகொள்கையில், 

“உங்களது நிறுவனத்தைக் காட்டிலும் மனம் மற்றும் உணர்வு சார்ந்த ஆரோக்கியம் முக்கியம். இவை நிறுவனத்தின் வெற்றியுடன் தொடர்புடையவை. மன அழுத்தத்தை நிறுவனத்தின் கட்டமைப்பில் இருக்கும் பிரச்சனையாக சிந்தித்துப் பாருங்கள். அதற்கான தீர்வை முழுமையாக கண்டறியவில்லையெனில் உங்களது நிறுவனத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். முதலில் உங்களை சரிசெய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம்.”

ராண்ட் 2014-ம் ஆண்டு மன அழுத்தம் காரணமாக தன்னுடைய நிலையிலிருந்து சிஇஓவாக பதவியிறங்கினார்.

”குடும்பத்தினரின் ஆதரவு, அடிப்படை செலவுகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நிதி பின்னணி, வழிகாட்டுதல், சக தொழில்முனைவோரின் நட்பு, கற்றல் மற்றும் பரிசோதித்தலுக்கான முயற்சிகள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் ஆகியவையே அவர் மீண்டு எழ உதவியதாக தெரிவித்தார் பர்தீப் கோயல்.

விரக்தியடைந்து எதிர்பார்த்த விதத்தில் செயல்பட இயலாமல் தவிப்பவர்களுக்கு உந்துதலளிக்கும் விதமான தனது ஆண்டு வருமான அறிக்கையை அவர் பகிர்ந்துகொண்டார்.

மன அழுத்தம் உடல் நலக் குறைவு மற்றும் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதாகவும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2017-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

2005-ம் ஆண்டு முதல் மன அழுத்தத்தால் பாதிக்க்படுவர்களின் விகிதம் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது,” என்றும் தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உளவியல் அல்லது மனநலம் சார்ந்த ஆலோசனை தேவைப்படுவதாக தெரிவிக்கிறது YourDost.

மன அழுத்தம் ஸ்டார்ட் அப் உலகில் ரகசியமாகவே வைத்துக்கொள்ளப்படுகிறது என்பது குறித்து நான் 2015-ம் ஆண்டு எழுதியபோது மன அழுத்தம் தீவிர பிரச்சனைதான் என்று பலர் இமெயில் வாயிலாக ஒப்புக்கொண்டனர். நாம் 2017-ம் ஆண்டு இறுதியில் இருக்கிறோம். இன்றும் மன நலம் குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் பேசுவதற்கு தயக்கம் காட்டப்படுகிறது.

பராஸ் போன்ற தொழில்முனைவோர் வெளிப்படையாக பேசத் துவங்கினால் மட்டுமே ஸ்டார்ட் அப் உலகில் காணப்படும் மன அழுத்ததிற்கு தீர்வு காண முடியும். அதுவரை அவர் குறிப்பிடது போல்,

“நீங்கள் ஒரு தொழில்முனைவோரை சந்தித்தால் உங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள். தொழில்முனைவோரின் பணிச்சூழல் தனிமை உணர்வுவை ஏற்படுத்தும். ஆனால் அவர்கள்தான் உலகை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கின்றனர்.”

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்