மகள்களின் கல்விக்காக பரம்பரை வீட்டை விற்ற பீஹாரைச் சேர்ந்த  ஊதுபத்தி விற்பனையாளர்! 

0

இன்றளவும் பெண்களுக்கு பள்ளிக் கல்வி மறுக்கப்படும் நிலையில் 52 வயதான பைத்யநாத் பிரசாத் ஷாவின் கதை மில்லியன் கணக்கானோருக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது. பீஹாரின் மோதிஹாரி பகுதியைச் சேர்ந்த இந்த ஊதுபத்தி விற்பனையாளர் தனது மூன்று மகள்களின் கல்விக்காக வீட்டை விற்பனை செய்தார்.


பைத்யநாத் தனது வீட்டை விற்றபோது அவரது மூத்த மகள் ரூபாவின் வயது 14. ரூபா தற்போது சிவில் நீதிபதியாவதற்கான படிப்பை மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையைத் தேர்வில் 173-வது ரேங்க் பெற்றார். இவர் 29வது பீஹார் நீதித்துறைக்கான போட்டித் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற ஒரே பெண் என்கிற பெருமைக்குரியவர். இவர் புதுடெல்லியின் கேந்திரிய வித்யாலயா சாதிக் நகர் மாணவியாவார்.

பைத்யநாத்தின் இளைய மகள்களான ருசி மற்றும் லஷ்மி ஆகியோரும் அவரை பெருமைப்பட வைத்துள்ளனர். அவரது இரண்டாவது மகள் ருசி 2014-ம் ஆண்டு சீனாவில் மருத்துவரானார். அவரது மூன்றாவது மகளான லஷ்மி புதுடெல்லியின் பீஹார் பவனில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பேராசிரியராக நியமனமாவதற்கு தகுதி பெற்றுள்ளார்.

பைத்யநாத் ஊதுபத்தி விற்பனை செய்து மாதத்திற்கு 15,000 ரூபாய் வருமானம் ஈட்டிவந்தார். 2014-ம் ஆண்டு வரை புது டெல்லியில் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரது மகள்களின் மேல்படிப்பிறகாக நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் அவரது பரம்பரை வீட்டை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

மகள்களின் கல்விக்காக தனது சொத்துக்களைத் துறந்த அப்பா தனக்குக் கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார் ரூபா. தனக்கு ஆதரவாக இருந்த அப்பாவிற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய விரும்புகிறார் இவர். அத்துடன் அவர் விற்பனை செய்த அந்த பரம்பரை சொத்தை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளர்.

பைத்யநாத்தின் தியாகமும் அவரது மகள்களின் வெற்றியும் பெண் குழந்தைகளை பாரமாக நினைப்போருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்.

கட்டுரை : Think Change India