கீழ்தட்டு குழந்தைகளை கலை மூலம் செம்மைப்படுத்தும் ஸ்ரீராம் ஐயர்!

கலைப்பயிற்சி வாயிலாக மாற்றத்தை வித்திட்டவர்

0

இண்டோ டச் நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பா மற்றும் அமரிக்க கண்டத்தில் முக்கிய பொறுப்பு வகித்த ஸ்ரீராம் ஐயர், 2002 ஆம் வருடம் பணி நிமித்தமாக குஜராத் மாநிலத்தில் இருந்த சமயம், அங்கு நிகழ்ந்த வன்முறை சம்பவம் தன் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி அமைத்துவிட்டது என்கிறார். அப்பொழுது வரை வன்முறை பற்றி செய்திகள் வாயிலாக கேட்டும், படித்தும் இருந்த அவருக்கு, அருகாமையில் அத்தகைய நிகழ்வுகளை பார்த்தது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ஸ்ரீராம்.

பத்து ஆண்டுகளுக்கு முன் "நலந்தாவே" (Nalandaway) என்ற சமூக அமைப்பை நிறுவிய ஸ்ரீராமிடம் தமிழ் யுவர்ஸ்டோரி பிரேத்தியேக நேர்காணலை நடத்தியது.

"குஜராத் நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தது, மக்கள் ஏன் எதனால் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்; அரசியல் போன்ற காரணத்தை புறம் தள்ளி, எதனால் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு, மற்றவர்களை காயப்படுத்திகிறார்கள் என்ற தேடல் எனக்குள் விதைத்தது". 

"எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் பயமே மூலக் காரணம் "

சமூகப் பணிக்கான ஆரம்பம்

2004 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் வாடிக்கையாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியான ஒரு சூழ்நிலையை கையாண்டுக் கொண்டிருந்தோம். அந்த தாமதமான மாலை நேரத்தில் எங்கள் அலுவலகத்திற்கு பத்து வயது நிரம்பிய பையன் ஒருவன் ஊதுவத்தி விற்க வந்தான். நேர்த்தியாக உடை அணிந்திருந்த போதிலும் காலணி இல்லை, முதுகில் பையுடன் வசப்படுத்தக்கூடிய பேச்சு, அவனிடம் ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அச்சிறுவனை பற்றி விசாரித்ததில் தந்தையை இழந்து, இரண்டு சகோதரிகளை கொண்ட வறுமையான குடும்பப் பின்னணியில், பள்ளிக் கூடம் நேரம் முடிந்த பின் ஊதுவத்தி விற்று வருவதாக சொன்னான்.

அந்த நிமிடம் எனக்கு தோன்றியதெல்லாம் "சரியான வழிகாட்டுதல் (mentoring) இருந்தால் இவர்களால் நிச்சயமாக மேலும் சாதிக்க முடியும்". அதுவும் வேற்று சமூகத்திலிருந்து வழிகாட்டாளர்கள் அமைத்துக் கொடுத்தால் பரஸ்பரம் இருக்கும் பாரபட்சம் மற்றும் வெறுப்பை களையவும் உதவும் என்று எனக்கு தோன்றியது என்கிறார் ஸ்ரீராம்.

இது நடந்த ஒரு வாரத்தில் என் வேலையை விடுத்தேன், அந்நாள் வரை, தத்துவார்த்த நிலையில் இருந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

கலை மூலம் பயிற்சி

மாற்றம் உண்டு பண்ண வேண்டும் என்றால் அந்த சிந்தனையை இளம் பருவத்தினரிடம் விதைப்பது எளிது. ஆதலால் எங்களின் பணியை சிறுவர்களை முன்படுத்தியே செய்ய விரும்பினோம். சமூக வேலையில் பின்னணி இல்லாத போதும், தன்னார்வ இளைஞர்களை கொண்டு வழிகாட்டுதல் திட்டத்தை தொடங்கினோம்.

மேற்தட்டு நிலையில் வளர்ந்த எனக்கு, நான் பார்த்த முதல் குப்பம் சென்னையில் உள்ள அயோத்யா குப்பம். ரோட்டரி அங்குள்ள குழந்தைகளுக்கு ஒரு திட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தது. அப்பிள்ளைகளுக்கு சரித்திர பாடம் பிடிக்கவில்லை என்று அறிந்து கொண்டோம். என் நாடக நடிக நண்பனின் உதவியோடு, சரித்திர பாடத்தின் ஒரு அத்தியாயத்தை நாடக வடிவில் நடத்தினோம். நாடகத்தின் இறுதியில் பிள்ளைகள் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வையும், பெயர்களையும் அருமையாக நினைவு கூர்ந்தனர்.

"கற்றல் என்பது அனுபவ பூர்வமாகவும் எளிதான நடையிலும் இருத்தல் வேண்டும்" என்று அந்த நிகழ்வு தெளிவாக காட்டியது. கற்றலுக்கான ஒரு தகுந்த திட்டத்தை உருவாக்க இதுவே உந்துதலாக அமைந்தது என்கிறார்.

கலை என்றுமே என்னை ஈர்த்தது, கலை மூலமாக அருமையான ஒரு அனுபவத்தை உருவாக்க இயலும் என்று ஆணித்தரமாக நம்பினேன். ஆகையால் கலை வாயிலாக கீழ்தட்டில் இருக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கற்றல் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தோம்.

முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலமகாவும், நன்கொடையாக பெற்ற நிதி மூலமாகவும் செயல் படுகிறது நலந்தாவே.

2005-06 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள குழந்தை தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தை கொண்டு சென்றோம். பின்னர் 2007-08 ஆம் ஆண்டு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மற்றும் இத்தொழிலில் தள்ளப்பட்ட இளம் சிறுவர்களுக்கு தட்டல் குழுவின் உதவியோடு (percussion troupe), ட்ரம்ஸ் மூலமாக அவர்களின் துயரை களைந்து நற்சிந்தனைகள் ஏற்படுத்திக்கொள்ள உதவினோம். பீகார், காஷ்மீர், டெல்லி என்று எங்களின் சேவை விரிந்தது.

2008-2012 முதல் தொடர்ச்சியாக "கலை, அரட்டை, ஆர்ப்பாட்டம்" என்ற பெரிய அளவிலான விழாவை நடத்தினோம். ஒவ்வொரு வார இறுதியிலும் பல்வேறு வகையான போட்டிகள், கலைப் பயிற்சி மற்றும் கலை கண்காட்சி ஆகியவற்றை நடத்தினோம். மூவாயிரம் கிராமத்தில் இந்த விழாவை ஒரு மாதம் நடக்கும் படியாக ஒரே நேரத்தில் மேற்கொண்டோம். பெரும் வரவேற்பை இது பெற்றிருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் இது போன்ற குறுகிய கால நிகழ்வுகளை விட நீண்ட கால திட்டங்களே உகந்தவை என்று எண்ணியதால் இந்த விழாவை மேற்கொண்டு தொடர வில்லை.

சீர்த்திருத்த பள்ளிகளில் இருக்கும் பிள்ளைகளுக்கும், கலை மூலமாக பயிற்சி அளித்துள்ளோம். இதன் மூலமாக அவர்களின் நடத்தையில் வெகுவான முன்னேற்றத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது என்கிறார் ஸ்ரீராம்.

வலுவடையும் முயற்சி

கடந்த நான்கைந்து வருடங்களாக எங்களின் திட்டத்தை மேலும் வலுவடையச் செய்து, இன்னும் ஆழமாக செயல்பட தொடங்கினோம்.

1. கலை மூலமாக மன ரணங்களை போக்கும் முயற்சி : மன அழுத்தம், தற்கொலை சிந்தனை உடையவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்களுக்கு முகாம்கள் நடத்துகிறோம். கலை சார்ந்த நுட்பங்களை கொண்டு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் இதில் இடம்பெறும். சென்னையில் இரண்டு மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு என்று மாதத்தில் நான்கு முகாம்கள் நடத்துகிறோம்.

2. கலை பயிற்சி மூலமாக கற்றல் : ஆரம்ப பள்ளிகளில், முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கலை நுட்பத்தை கொண்டு எவ்வாறு கற்பிக்கலாம் என்று பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சி ஆசிரியர்களின் படைப்பு திறன்களை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்லாமல் வகுப்புகளையும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது. தற்போது சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் உள்ள எழுபத்தி நான்கு பள்ளிகளில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

3. சென்னையில் பத்து ஸ்டூடியோக்கள் மூலம் பயிற்சி : சென்னையில் உள்ள பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்டூடியோக்கள் அமைத்துள்ளோம். இங்கு இசை, நடனம், நாடகம் மற்றும் நுண்கலை பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் அவர்களின் திறன்களை அறிய உதவுவதோடு சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு  கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் பயிற்சிகளை தொடர உதவுகிறோம்.

"இந்த முயற்சி நல்ல பலன்களை அளிக்கிறது. ஆசிரியர்களின் மன அழுத்தம் குறைந்துள்ளது, அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான அணுகுமுறை வெகுவாக மாறியுள்ளது. ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான கருவிகள் மேம்பட்டுள்ளன. மாணவர்களின் சிந்தனை திறன் மட்டுமல்லாமல் படிப்பில் அவர்களது கவனமும் அதிகரித்துள்ளது. கலை மூலமாக கற்பிக்கும் பயிற்சி பள்ளிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது".

சந்தித்த சவால்கள்

நமது இலட்சியத்தை பொறுத்தே சவால்கள் அமையும் என்கிறார் ஸ்ரீராம். அதிர்ஷ்டவசமாக அவருடைய பயணம் பெரும் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருக்கவில்லை. நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் எதற்காக செய்கிறோம் என்று பல கேள்விகளுக்கு உட்படுத்துவோம்.

எந்த முறை, சரியான எதிர்பார்க்கிற பலனை தரும் என்பதை தீர்மானிப்பது சில சமயங்களில் சவாலாக இருக்கும். சரியான உள்ளடக்கம் கொண்ட பயிற்சி திட்டம் மற்றும் நிதி என்றுமே சவால் தான்.

அவருடைய இந்த முயற்சிகளுக்கு, பல நண்பர்களும், நல்லுள்ளங்களும் தொடர்ந்து ஆதரவும் உறுதுணையும் அளித்து வருகின்றன என்கிறார்.

இதையெல்லாம் கடந்து "நம்மை சுற்றியிருக்கும் மனிதர்கள் நல்லவர்கள், கேட்டால் நிச்சயம் உதவி கிட்டும்" என்கிறார்.

ஊக்கம் தரும் சக்தி

நாங்கள் மேற்கொள்ளும் செயலே எங்களை உற்சாகமாக வைக்கிறது. கண் முன்னே மாற்றத்தை காண்பதே மிகுந்த மன நிறைவை தந்து மேலும் சாதிக்க உந்துதலாக இருக்கிறது.

தனக்கு உந்துதல் அளிக்கும் தலைவர் மகாத்மா காந்தி; கல்வி துறையில் தாகூர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வால்டோல்ப் பள்ளி முறை; தன்னார்வ துறையில் அன்னை தெரேசா.

எதிர்காலத் திட்டங்கள்

நலந்தாவே அமைப்பை நிறுவி 10 ஆண்டுகள் நிறைவுற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் ஸ்ரீராம் தங்கள் அமைப்பு பல எதிர்காலத்திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார். டெல்லி மாநில அரசுடன் பணி புரிய ஆரம்பித்துள்ளோம். ஆந்திரா மற்றும் டில்லியில் பெரிய அளவில் கலைப் பயிற்சியினை கொண்டு செல்ல எண்ணம் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுக்குள் இந்தியாவின் மாணவர்களுக்கான மிகப் பெரிய கலைப் பயிற்சி நிறுவனம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

ஸ்ரீராம் ஐயருக்கு உள்ள பெரிய ஆதங்கம் இன்றைய தலைமுறையின் போக்கு தான். தன் நலனை தவிர தன்னை சுற்றி நடக்கும் செயல்களை பற்றிய அறியாமையை விலக்க வேண்டும் என்கிறார். மாற்றம் உண்டு பண்ண தன்னார்வ தொண்டுகள் தேவையில்லை, அது தேவைக்கு அதிகமாகவே உள்ளன.

"ஒவ்வொரு இளைஞனும் அநீதி நடக்கும் போது கோபம் கொள்ள வேண்டும், அதை முறையாக வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குங்கள், நன்றி பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்" என்பதே அவரின் கூற்றாக இருக்கிறது. 

இணையதள முகவரி: Nalandaway