அன்று மெக்கானிக் இன்று உலகின் உயரிய கட்டிடம் ’பூர்ஜ் கலிஃபா’வில் 22 குடியிருப்புகளின் சொந்தக்காரர்: கேரள தொழிலதிபரின் வளர்ச்சி! 

4

கேரளாவில் பிறந்த மெக்கானிக் இன்று உலகின் மிகப்பெறிய கட்டிடமான துபாயில் உள்ள பூர்ஜ் கலிஃபா’ வில் உள்ள 22 குடியிருப்புகளின் சொந்தக்காரர் என்றால் நம்பவா முடிகிறது. இந்திய தொழிலதிபரான ஜார்ஜ் வி நெரியபரம்பில், ”வாய்ப்பு கிடைத்தால் மேலும் சில குடியிருப்புகளை அங்கே வாங்குவேன். நான் கனவு காண்பவன், கனவு காண்பதை நிறுத்த மாட்டேன்,” என்று கலீஜ் டைம்ஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நன்றி: khaleejtimes
நன்றி: khaleejtimes

“உன்னை போன்ற குள்ளமான ஒருவன், இந்த உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டிடத்துக்குள் நுழைவது என்ன?  கட்டிடத்தை முழுமையாக நிமிர்ந்து கூட பார்க்கமுடியாது...” என்று ஜார்ஜின் நண்பர் அவரை கேலி செய்தார். 

அன்று ஜார்ஜின் மனதில் உருவான வைராக்கியம், அதே கட்டிடத்தினுள் ஒரு குடியிருப்பையாவது வாங்கவேண்டும் என்ற வெறியில் உழைத்து, இன்று 22 ப்ளாட்டுகளின் சொந்தக்காரர் ஆகியுள்ளார் என்றால் அவரை மெச்சாமல் இருக்கமுடியாது.  

கேரள மாநில திருச்சூரை சேர்ந்த ஜார்ஜ், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஷார்ஜாவுக்கு வந்தடைந்தவர். மெக்கானிக் ஆக தனது பணிவாழ்க்கையை அங்கே தொடங்கி இன்று பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி ஆகியுள்ளார்.  

1976 ஆம் ஆண்டுகளில் தனது தந்தையின் தொழிலில் உதவியாக இருந்தார் 11 வயதான ஜார்ஜ். “என் சொந்த ஊரான கேரளா மக்கள், காட்டன் துணியை வணிகம் செய்துவந்தனர், ஆனால் பருத்தி கொட்டையை தூக்கி எரிந்துவிடுவர். அந்த கொட்டையில் இருந்து பசை அதாவது கம் தயாரிக்க முடியும் என்று பலருக்கு தெரியாது.” 

தூக்கி எறியப்பட்ட குப்பைகளில் இருந்து நான் பருத்தி கொட்டைகளை சேகரித்து விற்பேன். எனக்கு அதில் 90 சதவீதம் லாபம் கிடைத்தது. அதேபோல் புளியங்கொட்டைகளை சேகரித்து, மேல் ஓட்டை கால்நடை மையங்களுக்கு விற்பேன். அந்த கொட்டைகள் கால்நடைகளின் உணவாக பயன்படுத்தப்பட்டது,” என்றார். 

இப்படி பல புதிய எண்ணங்களுடன் பல தொழில்களை சிறுவயது முதலே செய்துவந்தவர் ஜார்ஜ். ஷார்ஜாவில் மெக்கானிக்காக பணிபுரிந்து கொண்டே தொழிலை பற்றியும் யோசித்துவந்தார். மிகவும் வெப்பம் நிறைந்த நாடான ஷார்ஜாவில், ஏசி தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை கண்டார். பின்னர் மெல்ல மெல்ல தானே சொந்தமாக தொழிலில் இறங்கி ‘GEO’ நிறுவனங்களின் குழுமத்தை உருவாக்கி பெரும் தொழிலதிபர் ஆனார்.

“ஒரு மனிதனின் உள்ளம் அவனது செல்வம் இருக்கும் இடத்தில் தான் உள்ளது. எனது உள்ளம் என் குடும்பம், சொத்து மற்றும் தொழிலில் அடங்கியுள்ளது,” என்கிறார். 

வெற்றிகரமான தொழிலதிபர் ஆன ஜார்ஜ், முதலில் பூர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கினார். துபாய் மெட்ரோ பணியில் கிடைத்த லாபத்தில், தனது முதல் குடியிருப்பை அங்கே வாங்கினார். அதுவே தொடர்ந்து இரண்டு, மூன்று, நான்கு என்று... 22 வரை சென்றுள்ளது. 

துபாயில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆகியுள்ள ஜார்ஜுக்கு, பூர்ஜ் கலிஃபா’வில் வீடு என்பது ஒரு சிறந்த முதலீடாக தோன்றியது. ஆனால் அவர் தனது இடத்தை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை ஏனெனில் அவரது முதல் வாடகைக்காரர், சுவர்களில் கீறல்கள் போட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்த வீடுகளை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3மில்லியன் தினார் அளவிற்கு செலவு செய்கிறார் ஜார்ஜ். வருங்காலத்தில் நிலம் மற்றும் மனையின் மதிப்பு அதிகரிக்கவே செய்யும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். 

நன்றி: motivateme.in
நன்றி: motivateme.in

தினமும் 10 விருந்தாளிகளை தனது வீடுகளை காண்பிக்க அழைத்துச்செல்கிறார் ஜார்ஜ். ஒருமுறை பத்து இந்திய தொழிலாளிகளை இந்த உலகின் உயரிய கட்டிடத்துக்குள் அழைத்து சென்று காட்டியது, அவர்களுக்கு சொர்கத்துக்கு சென்ற மகிழ்வை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

துபாயிலிருந்து கொச்சிக்கு நேரடி விமானம் இல்லாததால தனது தந்தையில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது ஜார்ஜுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. கொச்சியில் சர்வதேச விமான நிலையம் இல்லாத குறையை நீக்க, ஜார்ஜ் கொச்சி சர்வதேச விமான ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்து அதிகபட்ச பங்குகளை வகித்து வருகிறார். 

“என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான கேரள மக்களுக்கு இந்த விமான நிலையம் தேவையாக உள்ளது. வெளிநாடுகளில் வாழும் பலர் தங்களின் குடும்பங்களை காண வந்துசெல்ல இந்த சர்வதேச விமான நிலையம் பேருதவியாக இருக்கும்,” என்கிறார். 

வெளிநாட்டில் சம்பாதிப்பதை தன் சொந்த மண்ணில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக உள்ள ஜார்ஜ், கேரளாவில் உள்ள தியேட்டர் குழுமம் ஒன்றையும் மறுசீறமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஜார்ஜின் பல்வேறு நிறுவனங்களில் சுமார் 1000 பேர் வரை பணிபுரிகின்றனர். 1984 இல் தொடங்கப்பட்ட Geo Electricals Trading and Contracting Co, இன்று Geo குழுமமாக மாறி அதன் கீழ் 16 நிறுவனங்கள் கொண்டு இயங்கி வருகிறது. 

தகவல்கள் உதவி: கலீஜ் டைம்ஸ்