திருநெல்வேலியில் ஒரு சிலிக்கான்வேலி: பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முனையும் தமிழர்!

11

அமெரிக்காவில் ‘சிலிக்கான் வேலி’ சென்று பணிபுரியவேண்டும் என்பது பல இந்தியர்களின் கனவாக இருந்தது ஒரு காலம். ஐடி துறை உலகெங்கிலும் பரவ, இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இங்கே பல இடங்களில் ஐடி பூங்காங்கள் உருவாகியது. டெக்பார்க், ஐடி காரிடர் என்று ஐடி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் குடி கொண்டுள்ள பிரமாண்ட இடங்கள் தற்போது சகஜமாகிவிட்டது. இந்திய மெட்ரோ மற்றும் பெரிய நகரங்களை மட்டுமே குறிவைத்து தொடங்கப்பட்ட ஐடி பார்க்குகளுக்கு இடையில், சிலிக்கான் வேலி போன்ற ஒரு இடத்தை தமிழ்நாட்டில் சென்னை அல்லாத ஒரு ஊரில் கொண்டுவர எண்ணிய தொழில்முனைவரின் கனவாய் பிறந்ததே ‘திலிகான்வேலி’. அது என்ன திலிக்கான்வேலி? திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள ஐடி பார்கின் பெயரே அது. 

இதை தொடங்கியது யார்? இந்த எண்ணம் அவருக்கு எப்படி வந்தது? 

’TechFetch’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகரன் முருகைய்யா. இவர் 1993-ம் ஆண்டு கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் எலட்க்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். சென்னை மற்றும் பெங்களுருவில் சில வருட சாஃப்ட்வேர் பணி அனுபவத்துக்கு பின், 1998-ல் அமெரிக்கா சென்று பணிபுரிந்து வந்தார். பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு பத்தாண்டுகள் கழித்து 2008-ல் அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

”தொழில்முனைவர் ஆகவேண்டும் என்கிற எண்ணம்  அவரவரது டிஎன்ஏ-விலும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணம் படிக்கும்போது ஆரம்பித்து பணிக்கு சென்றதும் அதிகரிக்கும். அனுபவம் சேர்ந்ததும் அந்த எண்ணம் அதிக வலுப்பெறும்,”

என்று சுவாரசியமாக தன் தொழில் பயணத்தைப் பற்றி தொடங்கினார் பிரபாகரன். திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் அருகே கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர். கிராமத்தில் இவர்களுக்கு விவசாயமே முக்கியத் தொழில். ஒரு வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே வேலை இருக்கும், மீதி நாட்களில் இந்த ஊர் மக்கள் சுற்றித்திரிந்து கள், பழரசம் போன்றவற்றை அருந்திவிட்டு ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்கிறார். 

”அப்போது எனக்கு கிட்டத்தட்ட 10 அல்லது 12 வயதிருக்கும். அவர்களுக்கு வேலை எதுவும் இல்லாததுதான் இப்படி சண்டையிடுவதற்கு முக்கியக் காரணம் என்ற எண்ணம் தோன்றியது. இவர்களுக்கு சரியான வேலையும் அதற்காக வாய்ப்பையும் உருவாக்கினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று யோசித்தேன்.”

மாறிய வாழ்க்கை பயணம் - வாழ்வளித்த தொழில்முனைவர்

சிறு வயதில் தோன்றிய எண்ணம்தான் பிரபாகரனுடைய வாழ்க்கைப்பாதையை தீர்மானித்தது. இவர் அமெரிக்காவில் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் TechFetch.com. இது ஒரு வேலை வாய்ப்புத் தளம். இதன் வாயிலாக நிறுவனங்கள் பயோடேட்டாக்களை பார்த்து ஊழியர்களை தேர்வு செய்து பணியிலமர்த்துவார்கள். அதே போல வேலை தேடுபவர்களும் இந்த தளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 6000 நிறுவனங்கள் இவர்களது தளத்தை பயன்படுத்தி வருகிறது. ஒரு வருடத்திற்கு 20 முதல் 30 லட்சம் பேர் இவர்களது வலைதளம் மூலமாக வேலை தேடுகிறார்கள். பத்தாண்டுகளில் லட்சக்கணக்கானோருக்கு இந்த தளம் வாயிலாக அமெரிக்காவில் பணி கிடைத்துள்ளது.

இந்தியாவின் தனது நிறுவனத்துக்கு கிளை அமைக்க நினைத்த பிரபாகரன் புதிய ஒரு முடிவை எடுத்தார். பொதுவாக அமெரிக்காவில் நிறுவனம் உள்ள பலரும் சென்னை அல்லது பெங்களூரு போன்ற நகரங்களைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இவர் சிறப்பான வளங்கள் மற்றும் வேலைவாய்ப்பு இருப்பதால் திருநெல்வேலியில்தான் தன் சாப்ட்வேர் நிறுவன கிளை இயங்கவேண்டும் என்று ஆணித்தரமாக முடிவெடுத்தார். வாடிக்கையாளர்கள் சப்போர்ட், தொழில்நுட்ப சப்போர்ட் என்று அனைத்திலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டலும் மட்டுமே தேவைப்பட்டது என்றார்.

“நான் முழுமையான முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இவ்வாறு செயல்பட்டால் அது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.” 

நெல்லையின் சிலிக்கான்வேலி- ’திலிகான்வேலி’

திருநெல்வேலியில் அனுபவமிக்க நபர்கள் இல்லாததால் அவர்களை உருவாக்கவேண்டிய சூழல் இருந்தததால் முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அதிக சிரமத்தை சந்தித்தார் பிரபாகரன். அதன் பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து அனுபவம் கிடைத்ததும் அடுத்தவர்களை அவர்கள் முறையாக பயிற்சியளித்து வழிநடத்தத் துவங்கினர்.

திருநெல்வேலியில் கிளையைத் தொடங்கி பத்து வருடங்கள் கடந்த நிலையில் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெற்றிகரமாக ஒரு தொழில்நுட்ப பூங்காவாகவே தற்போது அதை உருவாக்கியுள்ளார். ‘திலிகான்வேலி’ என பெயரிட்டுள்ள இப்பூங்கா சுமார் 1000 ஊழியர்களைக் கொண்டு இரண்டு ஷிப்ட்களில் இயக்க திட்டமிட்டுள்ளார். ஹை எண்ட் தொழில்நுட்ப நிபுணர்கள், காலிங், டெஸ்டர்ஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அட்மின் என அனைத்து விதமான வளங்களும் அங்கே உள்ளதாகக் கூறினார்.

தற்போது 100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளனர். இந்த தொழில்நுட்பப் பூங்காவில் மற்ற நிறுவனங்களைக் கொண்டுவருவதன் மூலம் 10,000 முதல் 20,000 நபர்கள் வரை வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் பிரபாகரன்.

”இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. குறிப்பாக நெல்லை மாவட்டம் விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ளது. இவர்கள் வெளியில் சென்று பணிபுரியவோ இவர்களுக்கு வழிகாட்டவோ யாரும் இல்லை. அங்கே வேலை வாய்ப்பு உருவாக்குவதால் அவர்கள் குடும்பம் மற்றும் விவசாயம் இரண்டையும் கவனித்துக் கொள்ளலாம். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டலாம். இப்படிப்பட்ட நன்மைகளுக்காகவே திருநெல்வேலியில் இதை உருவாக்க நினைத்தேன்.”

சமுதாயத்தில் வாடும் மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் திருநெல்வேயியை விட்டு வெளியே சென்று வேலைசெய்ய இயலாததால் அங்கிருந்தே இயங்கும் வகையில் வேலை வாய்ப்புகளை அளிப்பதும் இவரது நோக்கம். தற்போது இவரின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் உடலளவிலோ, சமூக ரீதியாகவோ அல்லது நிதிசார்ந்த நிலையிலோ பின்தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருநெல்வேலி இளைஞர்கள் தங்களது ஊரில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மெட்ரோ நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவம் பெறுவதில் தவறில்லை. அதே சமயம் அதைக்கொண்டு அவர்கள் சொந்த மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி உதவவேண்டும் என்கிறார்.

”எங்கள் ப்ராஜெக்டிற்கு தேவையானவர்கள், மற்ற நிறுவனங்களுக்கு தேவையான வளங்களையும் உள்ளூரில் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளித்து உதவுகிறோம். தொழில்நுட்பம் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டிருப்பதால் உலகளவில் இருக்கும் அனுபவமிக்க தன்னார்வல வழிகாட்டிகளை அணுகி தளத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உயர் தர தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்து திறமைசாலிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.”

சாஃப்ட்வேர் தொழ்ல்நுட்பம் மட்டுமல்லாது IOT, எம்பெடட் சிஸ்டம்ஸ், எனர்ஜி ஐடி, ஹெல்த்கேர், ஐடி போன்ற மற்ற தொழில்நுட்ப வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி துணை வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபாகரன் தெரிவித்தார்.

சிறு நகரங்களில் இவ்வாறான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இந்திய பொருளாதாரத்திற்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் அதிகளவில் பயனளிக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் வாடுகின்ற மக்கள் பயன்பெறுவார்கள். உள்ளூர் பொருளாதாரம் உலக தொழில்நுட்ப பொருளாதாரத்தை பாதிக்காது. இன்றைய தொழில்நுட்ப வசதி காரணமாக யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் அல்லது வாய்ப்புகளை உருவாக்கி அடுத்தவருக்கு உதவலாம்.

தொழில்முனைவோருக்கு அறிவுரை

”படிப்பை முடித்ததும் தொழில்முனைவு தொடங்கியவர்களில் வெகு சிலரே வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆகையால் ஒன்றிரண்டு ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்ற பின்னர் நிறுவனம் தொடங்குவதே சிறந்தது என்கிறார் பிரபாகரன். ஏனெனில் லீகல், கார்ப்பரேட், நிதி மேலாண்மை ஆகியவை குறித்த அறிவு தொழில்முனைவிற்கு அவசியம்.

”தேடிச் சோறு நிதம் தின்று…” என்னும் பாரதியார் பாடல் வரிகளுக்கு ஏற்ப படித்தோம், சம்பாதித்தோம், ஓய்வுபெற்றோம் என்றில்லாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி மற்றவருக்கும் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே எனக்கு ஊக்கம்,” என்கிறார். 

ஒரு சிறந்த யோசனையை உருவாக்கி அதையே சர்வமுமாக நினைப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கேற்ப திருநெல்வேலியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருக்கிறது. இது பலரது உதவியுடனும் ஆதரவுடனும் நிறைவேறியும் வருகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பெரு நிறுவனங்கள் மட்டுமே முன்வரவேண்டும் என்ற நிலையை மாற்றி தான் பிறந்த மண்ணுக்கு வாய்ப்புகளை உருவாக்க பிரபாகரன் முருகைய்யாவை போல பலரும் முன்வரவேண்டும்.