பாரம்பரிய செக்கு எண்ணைய் முறையை அறிமுகப்படுத்தி ஆரோக்கிய வாழவிற்கு உதவும் ’கன்யா ஆக்ரோ

குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளை விற்பனை செய்து வரும் ’கன்யா ஆக்ரோ’ மேலும் விரிவடைந்து ஆர்கானிக் உணவு மற்றும் எண்ணெய் பிரிவுகளில் செயல்பட உள்ளது...

4
”கன்யா எண்ணெய்’ (Ganya oils) வகைகளுக்கு மாறி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது நான் அதற்கு அடிமையாகிவிட்டேன். அதன் மணம் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் என் பாட்டியின் சமையலையும் நினைவிற்கு கொண்டுவருகிறது...”

என்றார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசியான பிருந்தா. மேலும் பேசிய அவர், ”பல ஆய்வுகள் செய்துள்ளேன். இதைப் பயன்படுத்திய பிறகு குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயின் ஆரோக்கியம் தொடர்பான பலன்களை உணர்ந்தேன். இப்போது மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். என்னுடைய குடும்பத்திற்கு இனி ரீஃபைண்ட் எண்ணெய் நிச்சயமாக பயன்படுத்த மாட்டேன்,” என்கிறார். 

பிருந்தாவைப் போன்ற பலர் சந்தையில் கிடைக்கும் ரசாயன முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை விடுத்து, குளிர் அழுத்தத்தினால் தயாரிக்கப்படும் சமையலுக்கு பயன்படுத்த உகந்த தரமான எண்ணெய்க்கு மாறி அதன் பலன்களைப் பெற உதவுகிறார் 37 வயதான தாரகேஸ்வரி பழனிச்சாமி.

அவரது சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான ’கன்யா ஆக்ரோ’ சிறப்பான ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குளிர் அழுத்த முறையில் எண்ணெய் வகைகளை விற்பனை செய்கிறது. இந்த எண்ணெய் வகைகள் தோல் மற்றும் உடலுக்கு சிறப்பான பலனளிக்கக்கூடியது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு பலரும் மாற விரும்பும் சூழலில் தமிழ்நாட்டில் இந்த ப்ராண்ட் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

துவக்கம்

தாரகேஸ்வரி சுயமாக தொழில் துவங்க விரும்பினார். நண்பர்களிடமிருந்து வந்த கருத்தைக் கொண்டு குளிர் அழுத்த முறையில் எண்ணெய் உற்பத்தி செய்யும் யோசனை தோன்றியது. இவ்வாறு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் கன்யா ஆக்ரோ துவங்கப்பட்டது.

தாரகேஸ்வரி தனது எண்ணெய் தயாரிப்பை முயற்சித்து பார்ப்பதற்காக நண்பர்களிடம் வழங்கினார். பலர் அதைப் பயன்படுத்திய பிறகு ரீஃபைண்ட் ஆயில் பயன்பாட்டிலிருந்து மாற விரும்பினர். இதனால் குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்பட்டு உடனடியாக பயன்படுத்தும் விதத்தில் கிடைக்கும் எண்ணெய்க்கான தேவை இருப்பதை உணர்ந்தார்.

”எந்த ஒரு தொழில் திட்டமாக இருப்பினும் அதை அறநெறியிலும் சமூகத்தில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதில் நானும் என்னுடைய கணவரும் தெளிவாக இருந்தோம். நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் எங்களுள் வேரூன்றி இருப்பதால் சூழலுக்கு உகந்ததாகவும், அதிகளவு சத்துக்கள் நிறைந்ததாகவும், நிரூபிக்கப்பட்டதாகவும் உள்ள குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் விற்பனையில் ஈடுபடலாம் என்று தீர்மானித்தோம்,” என்றார் கன்யா ஆக்ரோ நிறுவனத்தின் நிறுவனர் தாரகேஸ்வரி பழனிச்சாமி.

ஆரோக்கியம் மற்றும் இயற்கையின் நலன்களை உணவில் கொண்டு சேர்க்கும் பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்கிறது இந்த ஸ்டார்ட் அப். கன்யா ஆக்ரோ பாரம்பரியமான ரசாயனங்களற்ற முறையில் மர செக்கின் உதவியுடன் குளிர் அழுத்த முறையில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வகைகளை தயாரிக்கிறது. 

விதைகள் மற்றும் கொட்டைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படும் முறையில் கசப்புத்தன்மையை நீக்குவதற்காக பனை வெல்லம் உள்ளிட்ட இயற்கையான பொருட்களே இந்த ப்ராண்ட் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழலின் நலனுக்கு பங்களிக்கும் வகையில் இந்நிறுவனம் அதற்கு உகந்த செயல்முறைகளையே பின்பற்றுகிறது. தயாரிப்பு முறையில் காணப்படும் மக்கக்கூடிய துணைப் பொருட்கள் கால்நடைகளுக்கு உணவாகவும் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

குளிர் அழுத்த முறை என்றால் என்ன?

விதைகள் மற்றும் கொட்டைகள் சத்துக்களும் மணமும் நிறைந்தது. குளிர் அழுத்த முறை இதை அதிகளவு தக்கவைக்கிறது. அதிகளவில் வெப்பமூட்டுகையில் விதைகளும் கொட்டைகளும் அதன் இயற்கை மணம், நிறம் மற்றும் சத்துக்களை இழந்துவிடுகிறது.

நவீன முறையில் எண்ணெய் பிரித்தெடுக்கப்படும்போது 230 டிகிரி செல்ஷியல் வெப்பமூட்டப்படுகிறது. இதனால் எண்ணெயிலுள்ள மூலக்கூறுகளின் பண்புகளில் மாற்றமேற்பட்டு அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகிறது. முதலில் விதை நசுக்கப்பட்டு, கூழ் அழுத்தத்தின்கீழ் வெப்பமாக்கப்படும். அதிகபட்ச எண்ணெய் பிரித்தெடுப்பதற்காக ஹெக்சேன் (hexane) என்கிற கரைப்பான் சேர்க்கப்படும். இதன் அளவைப் பொருத்து தோலழற்சி CNS டிப்ரஷன் உள்ளிட்ட ஆபத்துகள் நேரும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குளிர் அழுத்த முறையில் எண்ணெயை பிரித்தெடுக்கும்போது வெப்பநிலை சமன்படுத்தப்படும். இதற்கு மரத்தினாலான பிரித்தெடுக்கும் சாதனம் அல்லது மர ப்ரெஸ் பயன்படுத்தப்படும். குளிர் அழுத்தத்தால் தயாரிக்கப்படும் எண்ணெயில் எந்தவித பாதுகாப்புப் பொருட்களோ கூடுதல் பொருட்களோ இருக்காது. குறைந்தது ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். 

இந்த பாரம்பரிய எண்ணெய் பிரித்தெடுக்கும் முறையில் ஹெக்சேன் சேர்க்கப்படாது. இந்த செயல்முறையில் ரசாயனங்கள் மற்றும் கரைப்பான்கள் இல்லாததால் ரசாயனங்களுடன் பிரித்தெடுக்கப்படும் எண்ணெயைக் காட்டிலும் விலை உயர்வாக இருக்கும்.

சவால்கள் மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள்

முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் தாரகேஸ்வரி பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. ஒன்றிணைவது, ஆதரவளிக்கும் பல்வேறு குழுக்களை அணுகுவது, ஸ்டார்ட் அப்களுக்காக வழங்கப்படும் கொள்கைகளை அறிந்துகொள்வது, வணிகத்தை முறையாகப் பதிவுசெய்வது போன்றவை ஆரம்பக்கட்ட சவால்களாக இருந்தது என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த ப்ராண்ட் மாதத்திற்கு 100 லிட்டர் எண்ணெய் விற்பனை செய்யத்துவங்கியது. இன்று ஒரு மாதத்திற்கு 800 லிட்டர் விற்பனை செய்கிறது.

தாரகேஸ்வரியுடன் செயல்பாடுகளை கவனித்து வரும் விஜயலஷ்மி மற்றும் இரண்டு பகுதி நேர ஊழியர்கள் என நான்கு பேர் அடங்கிய குழுவாக செயல்படுகிறது கன்யா ஆக்ரோ.

ப்ராண்ட் துவங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரீடெய்லர்களிடம் இந்த தயாரிப்புகள் வழங்கப்பட்டது. அப்போதிருந்து ப்ராண்டின் வருவாய் ஒரு மாதத்திற்கு 2.5 லட்ச ரூபாயாக உயர்ந்தது.

இந்தியா முழுவதும் செயல்படும் நோக்கத்தில் கன்யா ஆக்ரோ விரைவில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் ஏற்றுமதி வாயிலாக ஒரு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஈட்டவேண்டும் என்பதையும் உள்ளூர் சந்தை வாயிலாக ஒரு வருடத்திற்கு 1.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட் ஆக்ரோ ஸ்டார்ட் அப் தற்போது சுயநிதியில் செயல்பட்டு வருகிறது. ப்ராண்ட் மேலும் வளர்ச்சியடைய ஏஞ்சல் நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

”ஒருங்கிணைந்த தயாரிப்பு மற்றும் குளிர் அழுத்த முறையில் எண்ணெய் பேக்கிங் யூனிட் அமைக்க விரும்புகிறேன். ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு அதற்கான சர்வதேச தரங்களை உறுதிசெய்யும் விதத்தில் இது அமையும். மேலும் ஆர்கானிக் உணவு மற்றும் எண்ணெய் பிரிவிலும் விரிவடைய விரும்புகிறோம்,” என்றார் தாரகேஸ்வரி.


Related Stories

Stories by YS TEAM TAMIL