விவசாயிகள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவம்பர் 30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுகோள்!

0

தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டிற்கான பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) கீழ் காப்பீடு செய்ய நவம்பர் 30-ந்தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பரத்துறை தனது கள விளம்பர அலுவலர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் பயிலரங்கை தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையரும் முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி  தொடங்கிவைத்துப் பேசியபோது, 

"பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டு சேர்ந்த விவசாயிகள் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிகரித்து 15லட்சம் ஆக இருந்தது," என்றும் அவர் கூறினார். 

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மிகவும் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது என்றும், பயிர்களின் சேத மதிப்பீடு கிராம அளவில் மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் காப்பீடு பெறுவது  எளிதாகிறது என்றார். தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை வரலாறு காணாத அளவு பொய்த்ததால் இந்த பயிர்க் காப்பீடு மூலம் விவசாயிகள் பெரிதும் பலனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நெல்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் இந்த ஆண்டு நவம்பர் 30ந்தேதிக்குள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குப்பின் பணம் செலுத்துபவர்களுக்கு காப்பீடு கிடைக்காது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசு நுண்ணீர் பாசனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசன வசதிக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுவதாகவும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். 

1200 கோடி செலவில் 7 லட்சம் ஏக்கர் நிலம் சொட்டு நீர் பாசன வசதி பெற்றுள்ளதாகவும் விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் 67 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 10 ஏக்கர் புஞ்சை நிலத்திலும் மண் வளப் பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை விவசாயம்  செய்யும்போதும் இந்த மண் வள அட்டையை வேளாண் அலுவலர்களிடம் காட்டி தங்களுக்கு தேவையான உரம் பற்றிய ஆலோசனைகளை பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மாநில அளவில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக மின்னணு விற்பனை மையத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தலா ரூ. 30 லட்சம் செலவில் தமிழகம் எங்கும் 15 சந்தைகள் ஏற்படுத்த பணிகள் வேகமாக  நடைபெற்று வருவதாகவும், வேலூர் மாவட்டம் அம்மூரில் இந்த சந்தை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண்மை குறித்த திட்டங்களை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு பிரசார முகாம்களை நடத்தும் பொறுப்பு வேளாண்மை அமைச்சகத்தால் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  கள விளம்பரத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கள விளம்பரத்துறையின் தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலம் சார்பில் இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து நடத்தப்பட உள்ளன.