'தானத்தில் சிறந்தது தாய்பால் தானம்'- லென்சு வழி விழிப்புணர்வு செய்யும் அமிர்தா...

உலகெங்கும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் தாய்பால் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டுவர, அந்த வாரத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் போட்டோகிராபர் புகைப்படங்கள் வழியே தாய்பால் தானம் விழிப்புணர்வை செய்துள்ளார். 

0

ஒவ்வொரு மாதத்துக்கு ஒவ்வொன்று ஸ்பெஷல். அப்படி, ஆகஸ்ட் மாதத்தின் சிறப்பாய், மாதத்தின் முதல் வாரம் ’தாய்பால் வாரமாக’ உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், தாய்பால் அளிக்கவேண்டியதின் அவசியம், பொது வெளிகளில் தாய்பால் கொடுப்பதில் தாய்மார்களுக்கு உள்ள தயக்கம் என்று பலவித கோணங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தபடுகின்றன. இங்கும் நடக்கின்றன. அதில் தன் பங்காய் அமையட்டும் என்று “தாய்பால் தானம்” குறித்து புகைப்படங்கள் வழியே விழிப்புணர்வு செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞி அமிர்தா சமன்ட்.

போட்டோகிராபர் அமிர்தா (இடது), அவர் எடுத்த புகைப்பட (வலது)
போட்டோகிராபர் அமிர்தா (இடது), அவர் எடுத்த புகைப்பட (வலது)

நியூபார்ன் பேபி, தவழும் குழந்தை, தத்தித் தத்தி நடைப்போடும் குழந்தை என குட்டித்தேவதைகளின் உலகத்துக்குள் சென்று அழகு குட்டிச் செல்லங்களின் சிறு அசைவையும் அழகியலோடு படம் பிடிக்க பயன்படுத்திய லென்சை இப்போது அக்குட்டி தேவதைகளின் நலனுக்காகவும் பயன்படுத்தியுள்ளார் அமிர்தா. 

தாய்பால் கிடைக்காத குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவித்து அனைத்து தாய்மார்களும் ‘தாய்பால் தானம்’ செய்யவேண்டும் என்பதை வலியுறுத்த, தாய்பால் கொடுக்கும் அம்மாக்களை புகைப்படம் பிடித்து விழிப்புணர்வு செய்ய முடிவெடுத்துள்ளார்.

“குழந்தைகளை படம்பிடிக்கத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்பது என் மனதுக்குள் இருந்த நெடுநாள் எண்ணம். என் திறனை பயன்படுத்தி எவ்வகையில் உதவலாம் என்று எண்ணி எண்ணி, மனம் அமைதியற்று போனது. இறுதியாய், இந்த ஆண்டு தொடக்கத்தில் என் தோழி மூலம் தாய்பால் தானம் குறித்து அறிய வந்தேன்,” 

எனும் அமிர்தா தாய்பால் தானத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்துள்ளார்.

அந்தவகையில், குழந்தைகள் நல மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஷோபனா ராஜேந்திரனிடம் தகவல்களை திரட்டியிருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் மூலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 75சதவீதமாக அதிகரிக்கிறது என்பதை அறிந்த அமிர்தா, உடனே தாய்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார். 

அவருடைய தோழிகள், தெரிந்தவர்கள் என தாயாகியுள்ள பெண்களிடம் அவருடைய முயற்சியை பற்றி எடுத்துரைத்துள்ளார். பலரும் நன்செயலுக்கு தன் பங்கும் இருக்கட்டும் என்று விருப்பதுடன், ஓகே சொல்ல பிப்ரவரி மாதம் போட்டோஷூட்டை தொடங்கியுள்ளார். 

வீடு, டிராபிக் சிக்னல், ரயில்வே ஸ்டேஷன் என்று அன்றாட பயன்பாட்டு இடங்களிலே, அழகிய ஆறு புகைப்படங்களை எடுத்ததுடன், அவற்றை தாய்பால் வாரத்தில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார். அமிர்தா சமண்ட் என்ற அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு புகைப்படத்தை வெளியிட, ஹார்டின்கள் குவிய தொடங்கின. 

ஒன் ஆப் தி போட்டோவுக்கு அவர் குறிப்பிட்டிருந்த கேப்ஷன் ’ஒரு அவுன்ஸ் (6 ஸ்பூன்) தாய்பாலை கொண்டு ஒரு குழந்தைக்கு நாள் முழுவதும் பசியாற்றலாம்’.

ஐதராபாத்தில் உள்ள லாக்டஷன் கன்சல்டன்ட் காமனாவிடம் கூடுதல் தகவலை திரட்டினேன். அவர் கூறுகையில், ‘கடவுளின் அனைத்து படைப்புகளிலும் சிறந்தது குழந்தை பிறப்பு. ஒரு தாய் அவளது குழந்தையை கையில் முதன் முறை ஏந்தும்போது அவள் உணரும் சந்தோஷம் வேறு எதிலும் தொடர்புபடுத்தி பார்க்ககூட முடியாது. ஆனால், பத்து மாதத்துக்கு முன்பே குழந்தையை பெற்றெடுக்கும் அம்மாக்களை அவசர சிகிச்சையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள குழந்தையை பார்க்க அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகளை பற்றி அதிக கவலையுற்று, அவர்களுடைய குழந்தைக்கு பாலூட்ட முடியாத நிலைக்கு சென்று விடுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் பத்துமாத முன்னதாக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களது உடல் ஒரு அவுன்ஸ் தாய்பாலைக்கூட சுரக்க முடியாமல் இருக்கும். இதனாலே, பல நோய் தாக்குதலுக்கு குழந்தை ஆளாகி இறக்கும் நிலை ஏற்படுகிறது’ என்று காமனா கூறினார்” என்றா அமிர்தா. 

இதை முன்னிட்டு செய்த அமிர்தாவின், முயற்சி திருவினையாகியுள்ளது. ஏனெனில், அவருடைய இன்ஸ்டா பதிவுகளின்கீழ் அத்தனை பாராட்டுகளும், உறுதி மொழி கமெண்ட்களும் நிரம்பியுள்ளது. அமிர்தா எதிர்பார்த்ததும் அதுவே!!

(சென்னையில் உள்ள தாய்மார்கள் தாய்பால் தானம் கொடுக்க விரும்பினால், குழந்தைகள் நல மருத்துவர் ஷோபனா ராஜேந்திரனை அணுகவும். தொலைபேசி எண் : 9962252104)

படங்கள் உதவி: புகைப்படக்கலைஞர் அமிர்தா இன்ஸ்டா பக்கம்