தில்லியில் ஒற்றை-இரட்டை முறை வெற்றி கற்றுத்தரும் பாடம் என்ன?

0

பிரச்சார நோக்கம் கொண்டவர்களும், கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்களும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பேசமால் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்த மட்டும் ஏற்ற கட்சி, ஆட்சி நிர்வாகத்திற்கு தகுதியான கட்சி அல்ல எனும் தோற்றத்தை சிலர் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அசந்துபோகும் வகையில் ஆம் ஆத்மி கட்சி அரசு சமீப காலத்தில் லட்சிய நோக்கு மிக்க பொது நல திட்டத்தை மக்கள் நலன் கருதி அமல் செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசை தடுக்க ஆம் ஆத்மி கட்சி ஒற்றை-இரட்டை திட்டத்தை கொண்டு வந்த போது நாங்களே கூட தில்லி மக்களிடமிருந்து இத்தகையை ஏகோபித்த ஆதரவை எதிர்பார்க்கவில்லை. கடந்த சில நாட்களில் நான் பலமுறை மெட்ரோவில் மேற்கொண்ட பயணங்களின் போது மக்கள் இந்த திட்டம் குறித்து மிகவும் மகிழ்ச்சி கொண்டிருத்தை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் வெளிப்படையாக பாராட்டி நன்றியும் தெரிவித்தனர். ஆனால் தில்லி மக்களின் ஆதரவு இல்லாமல் இது வெற்றி பெற்றிருக்க முடியாது என குறிப்பிட விரும்புகிறேன். தில்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாதந்தோறும் 22 ம் தேதி கார் இல்லா தினத்தை கடைப்பிடிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் கூட, தில்லி உயர்நீதிமன்றம் தில்லியை கேஸ் அறை என்று குறிப்பிட்ட போது மாநில அரசு இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தில்லியை மாசில்லா நகரமாக்க உறுதி கொண்டது. ஆனால் இது அவசர நிலை சூழல் என்பதால் அரசு சில கடினாமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டி வந்தது. இது மிகவும் சவாலான செயலாகும். துணிச்சலான நடவடிக்கைகள் தேவை. மென் அணுகுமுறையை கடைப்பிடிக்கலாம் என்றாலும் அது நம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதாகவும், எதிர்கால தலைமுறைக்கு செய்யும் தூரோகமுமாகிவிடும். எனவே கடினமான பாதையை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒற்றை-இரட்டை முறை அறிவிக்கப்பட்ட போது பலரும் என்னிடம் இது மிகவும் அபாயகரமான முயற்சி என்றும், இது தோல்வி அடைந்தால் எங்கள் நல்ல நிர்வாகத்தின் மீது களங்கமாக அமையும் என்றும் கூறினர். ஆனால் தனது திறமை மீது கட்சி நம்பிக்கை கொண்டிருந்தது. மக்களின் ஆதரவை பெற முடியும் என்றால் இதை நிறைவேற்றலாம் என நம்பினோம்.

ஒற்றை-இரட்டை முறையில் வெற்றி பல மாயைகளை உடைத்தெறிந்து நிர்வாகத்தில் புதிய அளவுகோளை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற அறிவார்ந்த கொள்கைத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தக்கூடிய ஆற்றல் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு இருப்பதை உணர்த்தியிருக்கிறது. ஒரு மகத்தான திட்டத்தை நுணுக்கமாக உருவாக்கி அதை நிறைவேற்றும் ஆற்றல் இருப்பதையும் உணர்த்தியிருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்திய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது கொள்கை முடிவுகளை நிறைவேற்றும் தன்மையே ஆகும். அரசுகள் பல மகத்தான திட்டங்களை உருவாக்கி இருக்கின்றன. ஆனால் அவை சரியாக நிறைவேற்றப்படமால் போனதால் பலன் அளிக்கவில்லை. இந்த மாயையை ஒற்றை-இரட்டை முறை தகர்த்திருக்கிறது. இந்த முறையை அமல் செய்ய தீர்மானிக்கப்பட்ட போது, இதை செயலுக்கு கொண்டு வர அனைத்து துறைகளுக்கு இடையிலும் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு தேவை என அனைவரும் உணர்ந்திருந்தனர். அரசு ஒவ்வொரு துறையையும் இதில் ஈடுபடுத்தியது. பல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லோரும் நம்பிக்கை மனநிலையில் ஒரு குழுவாக செயல்பட்டனர்.

மக்கள் ஆதரவு இல்லாமல் இது போன்ற பெரிய திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காது என அறிந்திருந்தோம். இந்த ஒற்றை-இரட்டை முறையானது மக்களுக்கானது, அவர்கள் சொந்த ஆரோக்கியம் மற்றும் நலனுக்கானது, அவர்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் எதிர்கால தலைமுறைக்கானது என்பதை மக்களுக்கு புரியவைப்பது அவசியமானது. சுற்றுழ்ச்சூழல் மாசு எல்லோரையும் பாதிக்கிறது. வயதானவரோ, இளைஞர்களோ, ஆண்களோ பெண்களோ அது எல்லோரையும் பாதிக்கிறது. ஏழை, பணக்காரர் என எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். மீடியாவின் உதவியால் இந்த செய்தி நகரின் மூலை முடுக்குகளில் உள்ளவர்களுக்கு எல்லாம் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு விவாதத்திலும் இது பேச்சுப்பொருளானது. இது தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. எல்லோரும் இது பற்றி பேசினர். இந்த முறையில் ஒவ்வொரு அம்சமும் அலசி ஆராயப்பட்டன.

நான் உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர விரும்புகிறேன். கடந்த மாதம் அரசு அதிகார்கள் மற்றும அமைச்சர்களுடான கூட்டத்தில் இந்த திட்டத்தின் நுணுக்கமான அம்சங்கள் குறித்து முதலிலேயே முடிவு செய்து விட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு மாறுபட்டார். "அவர் என்ன அவசரம், இந்த விவாதம் தொடர்ந்து நடைபெறட்டும், அரசுக்கு யோசனைகளை வரட்டும்” என்று கூறினார். இந்த விவாதம் மூலம் ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பு, அரசு மக்கள் நலனுக்காக தான் செயல்படுகிறது எனும் புரிதலாக மாற்றியது. மேலும் இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் பிரச்சனைகளையும் அரசு புரிந்து கொள்ள உதவியது. நான்காவது வாரத்தில் அரசு ஒற்றை-இரட்டை முறை பற்றிய இறுதி விவரங்களை வெளியிட்ட போது பரவலாக ஒரு மித்த கருத்து உண்டாகியிருந்தது. மக்கள் மனதளவில் தயாராக இருந்தனர். தில்லி அரசுக்கு பதிலாக மக்கள் இந்த முறைக்கு பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் எல்லா அரசுகளுக்கான பாடம் அடங்கியிருக்கிறது. கொள்கை முடிவு வகுப்பதில் மக்களை பங்கேற்கச்செய்தால் மகத்தான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது சாத்தியமே எனும் பாடம் தான் அது.

ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் நேர்மையானது என்பதால் நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவோம் என்பதை இது மீண்டும் நிருபித்துள்ளது. மக்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை. செய்யக்கூடியவற்றை மட்டுமே சொல்கிறோம். நான் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால் கடந்த 20 மாதங்களிம் மோடி அரசு அறிவித்த பளபளப்பான திட்டங்கள் மற்றும் அவற்றின் கதியை பாருங்கள். தூய்மை இந்தியா திட்டம் நல்ல முயற்சி என்பதால் அதை ஆதரித்தோம். ஆனால் அது பலன் தரவில்லை. அது மீடியாவுக்கான ஸ்டண்டாக மாறியது. மக்களை இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. எந்த பலனும் இல்லாமல் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டது. டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களை பாருங்கள். அவை எங்கே செல்கின்றன என்று யாருக்கும் தெரியாது. மக்கள் நம்பிக்கை பெற முயற்சிக்கப்படவில்லை. இந்த திட்டங்கள் வெற்று கோஷங்களாகி விட்டன.

ஒரு நல்ல துவக்கம் இது என்றாலும் கடினமான நீண்ட பாதை காத்திருக்கிறது என அறிவேன். ஜனவரி 15 ம் தேதிக்குப்பிறகு தில்லி மாநில அரசு ஒற்றை-இரட்டை முறை குறித்து ஆய்வு செய்யும். தேவை எனில் நம்முடைய நலன் மற்றும் ஆரோக்கியத்திற்காக மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவை கடினமாகவும் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் நலனுக்காக இது மிகவும் அவசியம். தூய்மையான காற்று என்பது அரிதாக இல்லாத, குழந்தைகள் சுவாச பிரச்சனைக்கு இலக்காகாத மற்றும் மூத்த குடிமகன்கள் பாதிக்கப்படாத ஒரு சமூகத்தை உருவாக்க இது அவசியம். ஒற்றை –இரட்டை முறை புதிய நம்பிக்கையை, மக்கள் புரட்சியை, புதிய நிர்வாக முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. கொள்கை முடிவில் மக்களை பங்கேற்கச்செய்து அவர்கள் நம்பிக்கை பெற்று, அவர்களை பொறுப்பேற்க வைத்தால் எதுவும் முடியாதது அல்ல எனும் நம்பிக்கையை இது அளிக்கிறது. இந்த புதிய நம்பிக்கையின் பலனாக உலகின் மாசு அதிகமான நகரமாக இருக்கும் தில்லி இந்தியாவின் முதல் தூய்மையான நகரமாக மாறும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தில்லி மக்களுக்கு கோடி நன்றிகள்.

ஆக்கம்ள் அசுடோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)