தன் வலைப்பக்கத்தால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்த இளைஞர்!

0

கடந்த கோடைக்காலத்தின்போதுதான் சுமித்தை முதல் முறையாக சந்தித்தேன். ஆன்லைன் வர்த்தகத்தில் வளர்ச்சியடைய நான் உதவிய சில உறுப்பினர்களுடன் ஒரு சிறிய சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. இவர்களுடனான நேரடி சந்திப்பு அதுவே முதல் முறையாகும். நான்கு பேர் வந்திருந்தனர். கன்னாட் ப்ளேஸ் பகுதியில் ஒரு காபி அருந்தியவாறே பேசினோம்.

வணிக வளர்ச்சி, ஸ்டார்ட் அப் கலாச்சாரம், விசி நிதிக்கான தேவை, சுயநிதியில் செயல்படும் வணிகங்கள் போன்றவை குறித்து பேசினோம். சுமித் தனது தொழில்முனைவுப் பயணம் குறித்து பகிர்ந்துகொள்ளத் துவங்கிய தருணம் மிகச்சரியாக எனக்கு நினைவில் இல்லை. 2013-ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் மார்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்தவாறே trumpexcel.com என்கிற வலைப்பக்கத்தைத் துவங்கியுள்ளார். 

மைக்ரோசாஃப்ட் எக்ஸலை திறம்பட பயன்படுத்துவது குறித்து இந்த வலைப்பக்கத்தில் பதிவிட்டார். ஃபார்முலாக்கள், டேட்டா எண்ட்ரி, டெம்ப்ளேட்ஸ் உள்ளிட்ட எளிய விஷயங்கள் இந்த வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டது.

அவர் தனது முதல் கட்டுரையை எழுதி ஆன்லைனில் பதிவிட்டபோது, 

”இதைப் பகிர்ந்துகொள்வதில் ஏதேனும் பயன் இருப்பதாக நினைக்கிறீர்களா?” என முதல் கருத்து பதிவானது. மனமுடைந்துபோன அவர் அந்தப் பதிவை நீக்கிவிட நினைத்துள்ளார். ஆனால் அந்தக் கருத்தை பதிவிட்டவர் தனது பணியை மதிப்பிட சரியான நபர் இல்லை என தீர்மானித்தார்.

எனவே முதல் கட்டுரையை நீக்குவதற்கு பதிலாக தொடர்ந்து அதிகம் எழுதத் துவங்கினார். மேம்பட்ட தகவல்களைப் பற்றி விவரிக்காமல் MS Excel-ஐ பயன்படுத்துவது குறித்து எளிய விஷயங்களைப் பற்றி எழுதினார். தனது பதிவுகளை உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு பகிர்ந்துகொள்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் MS Excel பயன்படுத்துவது தொடர்பாக மக்கள் உதவி நாடும் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்.

சுமித்தின் வலைப்பக்கம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது. 2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவரை Most Valuable Professional (MVP) என அங்கீகரித்தது. இது குறிப்பிட்ட தனிநபர்களுக்கு மட்டுமே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வழங்கப்படும் அங்கீகாரமாகும். இன்று இந்தியாவில் சுமித் மட்டுமே Excel MVP ஆவார்.

சுமித்தின் முயற்சி நம்மை வாயடைத்துப் போகச் செய்கிறது. நான் ஏழு ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராக இருக்கிறேன். எனக்கு ஏன் இந்த முயற்சி தோன்றவில்லை என்று எப்போதும் யோசிப்பேன். எக்ஸல் ஃபைல்களும் சந்திப்பிற்குப் பின் தயாரிக்கப்படும் அறிக்கைகளும் எனக்கு எப்போதும் கவலையளிப்பதாகவே இருந்துள்ளது. ஆனால் அதுவே சுமித்திற்கு ஒரு வாய்ப்பாக மாறியது. 

சுமித்திடம் “உங்களது வலைப்பக்கத்தின் மூலம் உங்களால் எவ்வளவு பணம் ஈட்டமுடிகிறது?” என கேட்டேன்.

”ஒரு மாதத்திற்கு 3000 டாலர் முதல் 4000 டாலர் வரை,” என அவர் பதிலளித்தார்.

”இதில் மைக்ரோசாஃப்ட் எவ்வளவு கொடுக்கும் தொகை எவ்வளவு?” என்கிற கேள்விக்கு “ஒன்றுமில்லை,” என பதிலளித்தார் சுமித்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்த நிதி ஆதரவும் கிடைக்காமலேயே சுமித் தன்னுடைய வலைப்பக்கத்தின் வாயிலாக மட்டுமே மாதம் சுமார் 3000 டாலர் வருவாய் ஈட்டுகிறார். தனது பயணம் குறித்து சுமித் பகிர்ந்துகொள்கையில் ஆரம்பத்தில் ஒன்றரை ஆண்டுகள் வரை எந்தவித வருவாயும் கிடைக்கவில்லை என்றார். எனினும் அந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களையும் சந்தாதாரர்களையும் பெற்றார்.

2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சுமித் ஆன்லைன் வகுப்பை அறிமுகப்படுத்தியபோது நிலைமை மாறத்துவங்கியது. இந்த முயற்சி சிறப்பிக்கவே வலைப்பக்கத்தை வணிக வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வலைப்பக்கத்திலும் ஆன்லைன் வகுப்பிலும் முழுநேரமாக கவனம் செலுத்த ஐபிஎம் நிறுவன பணியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு நான்கு ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தினார். தனது வலைப்பக்கம் வாயிலாக வருவாய் ஈட்ட விளம்பரங்களை காட்சிப்படுத்துதல், சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் போன்ற பிற வழிகளையும் ஆராய்ந்தார். இந்த வணிக மாதிரியை ஆழமாக ஆராய்கையில் எளிமையான ஒரு வலைப்பக்கத்தைக் கொண்டே விளம்பரங்கள், சந்தைப்படுத்தும் ஏற்பாடு, ஆலோசனை, மின் புத்தகங்கள், வகுப்புகள் போன்றவை மூலம் ஒருவர் சிறப்பாக வருவாய் ஈட்டமுடியும் என்பது புரிந்தது.

சுமித்தின் வலைப்பக்கம் நிலையாக வளர்ச்சியடைந்து ஒரு மாதத்திற்கு 4,50,000-க்கும் அதிகமானோரைக் கவர்ந்தது. உயர்தர உள்ளடக்கம் மற்றும் வீடியோக்களை உருவாக்கி இதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார் சுமித். 

மேலும் புதிய பாடதிட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக தற்போதுள்ள பாடதிட்டங்களில் அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதிக பாடதிட்டங்களை இமெயில் வாயிலாக விற்பனை செய்ய இமெயில் சந்தாதாரர்கள் பட்டியலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். மற்ற எக்ஸெல் நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு அவர்களது பாடங்களையும் வழங்கி கூட்டாக வருவாய் ஈட்டவும் உள்ளார்.

அத்துடன் எக்ஸல் பயனாளிகள் பயன்படுத்தக்கூடிய இணை டூல்களையும் ஆய்வு செய்து அத்தகைய டூல் ஒன்றின் வாயிலாக வருவாய் ஈட்டவும் உள்ளார்.

சிறியளவில் ஒரு முயற்சியைத் துவங்குபவர்கள் யாராக இருந்தாலும் விசி நிதியைச் சார்ந்திராமல் வெற்றியடையமுடியும் என்பதை சுமித்தின் பயணம் எடுத்துக்காட்டுகிறது. நம்மில் பலர் நிதி குறித்தே அதிகம் சிந்திக்கிறோம். இதனால் வணிக வளர்ச்சி என்பது சிறப்பாக லாபம் ஈட்டுவதைச் சார்ந்ததே தவிர நிதியைச் சார்ந்து இல்லை என்பதை மறந்துவிடுகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர் : பர்தீப் கோயல் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL