தமிழக பட்ஜெட் 2018 முக்கிய அம்சங்கள்...

0

பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கான செயலி அறிமுகம், பேரிடர் நிர்வாகத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் பாரத் நெட் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் 2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. பட்ஜெட்டில் புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை.

2018-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கல்வி:

பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27,205.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.4,620.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியை புதுப்பிக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மானியம் ரூ.500.65 கோடியாக உள்ளது. அண்ணாமலை பலகலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலனுக்கு ரூ.191 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு:

போக்குவரத்து துறைக்கு மொத்தமாக ரூ.2,717.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு- அவினாசி திட்டம் ரூ.1789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நீர்பாசனத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசு சார்பில் இந்த ஆண்டு 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்.

வட சென்னை மற்றும் தென் சென்னையில் வெள்ள நிர்வாக திட்டத்திற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசு உதவிக்கு அனுப்ப பட்டுள்ளது. பேரிட நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாரத் நெட் திட்டம், தமிழ்நாடு ஆப்டிக் நெட் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படும்.

பெண்கள் நலன்:

பணிக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசு செலவில் மகளிரி விடுதி கட்டித்தரப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு தாய் ஊட்டச்சத்து பெட்டகம் அமைக்கப்படும். திருமண உதவி திட்டங்களுக்கு ரூ.724 கோடி ஒதுக்கப்படும். மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டிர் நாப்கின்கள் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

சமூக நலன்

வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ. 581.81 கோடி ஒதுக்கீடு. இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு. இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு.

விவசாயம்:

வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உழவன் எனும் பெயரில் செயலி அறிமுகம் செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.8,000 கோடி புதிய கடன் வழங்கப்படும். சென்னை கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும்.

மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

• முதல் தலைமுறை தொழில்முனவோருக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.5 கோடியாக உயர்வு.

• சிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.540.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• சுகாரதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.

• தஞ்சை பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம்.

• தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரு.2 கோடி ஒதுக்கப்படும்.

• தமிழ் பண்பாட்டு மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

• தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு.

• 7,000 ஏக்கரில் ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் மரங்கள் நடப்படும்.

• மறைமுக வரியில் ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு பாதிப்பு.

• மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணங்களால் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு.

• மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கோரியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.

• 2018-19 வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

• பட்ஜெட்டில் புதிய வரி இல்லை.

• காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

• 2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறும்.

• தமிழக பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என கணிப்பு.

• ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி.

• பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.3,55,845 கோடியாக இருக்கும்.

• மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் ரூ.50.80 கோடியில் அமைக்கப்படும்.

• உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் தமிழக மின்வாரியத்திற்கு நஷ்டம் அதிகரிப்பு.

• உள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு.

முன்னதாக காவிரி மேலாண்மை அமைப்பதில் தாமதம் ஏற்படுவது மற்றும் பெரும்பான்மை இல்லாத பழனிச்சாமி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என பிரதான எதிர்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.