பெண்களை அவமதிக்கும் வெறுப்பு காட்சிகள் படங்களை தவிர்ப்பேன்: மலையாள நடிகர் ப்ரித்விராஜ் உறுதிமொழி! 

0

தென்னிந்திய நடிகை ஒருவர் அண்மையில் இரவு நேரத்தில் காரில் பயணிக்கும் போது, கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா துறையிலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நிலை குறித்த பார்வை மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிகழ்விற்கு பின், கேரள அரசு, பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களின் பட்டியலை மாநில அளவில் பொது டொமெயினில் வெளியிட முடிவெடுத்துள்ளது. இது நாட்டின் முதல் முயற்சி ஆகும். 

பாதிக்கப்பட்ட அந்த நடிகை போலீசில் புகார் அளித்துவிட்டு மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆடம்’ என்ற படத்தில் நடிக்க செட்டுக்கு திரும்பியுள்ளார் என்பது நல்ல தகவல். நடிகையின் இந்த துணிவான முடிவை பாராட்டிய மலையாள நடிகரான ப்ருத்விராஜ் சுகுமாரன் அதைப் பற்றி தன் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டார். தான் இதுபோன்ற சம்பவங்கள் அடங்கிய ஸ்க்ரிப்டுகளை கடந்த காலத்தில் வரவேற்று நடித்ததற்கு  வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டார். இனி, தான் நடிக்கவிருக்கும் படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்காது என்று உறுதிமொழி ஏற்றுள்ளார். 

அவர் பதிவிட்டது:

”என் வாழ்க்கையில் சில வருந்தத்தக்க தருணங்கள் வியக்கத்தக்க துணிவின் காரணமாக சரித்திரமாகியுள்ளது. தைரியம் என்பது கடவுளின் அற்புதமான ஒரு படைப்பு, அதை நான் தற்போது உணர்ந்துள்ளேன். பெண்கள்!

ஒரு அம்மாவாக, உடைந்து தடம் மாறிப்போய் கொண்டிருந்த வாழ்க்கையை சரிசெய்து, இரண்டு இளம் மகன்களை வளர்த்து இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்தார்... ஒரு தொழிலாளரின் மனைவியாக 40 மணிநேர உழைப்பிற்கு பின்னும், என் கைகளை பிடித்துக் கொண்டு, ’பரவாயில்லை ப்ரித்வி...’ என்று ஆறுதல் அளிக்கும் ஒவ்வொரு முறையும் வாயடைத்து போய் ஒரு பெண்மணியின் அறவணைப்பில் இருப்பதன் பெருமையை உணர்ந்துள்ளேன்.

இன்று... என் அருமை தோழி செட்டுக்குள் நடந்து வந்து ஆடம் ஷூட்டிங்கிற்கு வந்தபோது, மீண்டும் ஒருமுறை என் வாழ்க்கையில் அற்புதமான ஒரு பெண்ணின் தன்னிகரில்லா துணிவின் தருணத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு வாக்கியம் சொல்கிறார். அது காதில் பல காலம், இடம் மற்றும் பாலின அளவில் எதிரொலித்து கொண்டிருக்கும். அது என்னவென்றால், ”ஒரு சம்பவமோ அல்லது ஒரு நபரோ உன் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உன்னை அது ஆட்கொள்ளும்”. இந்த வார்த்தைகள் கவுன்சிலிங் மற்றும் பேச்சுக்களில், விவாதங்களில் உலகெங்கும் இடம்பெற தேவையானவை. என் நண்பராகிய நீ சொன்ன அவை, கோடிக்கணக்கான வெளியே கேட்காத குரல்களில் பிரதிபலிப்பு. 

அந்த குரல்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இத்தனை காலம், நேரம் நான் விவேகமாக இல்லாததற்கு... பெண் வெறுப்பு அடங்கிய காட்சிகளுடனான படங்களில் நடித்ததற்கு... உங்கள் தன்மானத்தை இழிவுப்படுத்தும் டயலாக்குகளை உச்சரித்து, அதற்கு கைத்தட்டலை வாங்கியதற்கு... ஒருபோதும் இனி செய்யமாட்டேன்... இனி எப்போதும் பெண்ணை அவமதித்து அதை கொண்டாடும் படங்களை செய்யமாட்டேன்! ஆம் நான் ஒரு நடிகன், நடிப்பது என் கலை. நான் மனப்பூர்வமாக, திரைப்படங்களில் வரும் கரும் பகுதிகளை, கதாப்பாத்திரங்களை அவர்களின் செயல்கள் வெள்ளித்திரையில் கொண்டாடப்படமால் பார்த்துக் கொள்வேன்...  

மீண்டும் சொல்கிறேன்... தாய்மார்கள் மற்றும் ஆண்கள்... எழுந்து நின்று அவளுக்கு கைத்தட்டுங்கள்! துணிச்சலான அந்த பெண்ணின் பின்னால், ஒரு காயப்பட்ட பிரபலம் இருக்கிறாள். அவளின் இந்த முடிவு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அளித்தாலும், அவளுக்கு நடந்தவை தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும். அது அவளுக்கும் தெரியும். தான் அதை சந்தித்து ஆகவேண்டும் என்று அவளுக்கு தெரியும். இவ்வுலகிற்கு ஒரு எடுத்துக் காட்டாய் திகழ, வெளிச்சத்தை ஏற்றி, பலரும் பின்பன்ற்றக்கூடிய பாதையை காட்ட அவள் அந்த வார்த்தைகளை உச்சரிக்கின்றார். 

அசாத்தியமனா துணிச்சலான வார்த்தைகள் அவை! 

அந்த நடிகைக்கு ஆதரவுக் கரங்களை நீட்டிய ஒருசில பிரபலங்களில் ப்ரித்திவிராஜும் ஒருவர். இவரை போல மற்ற பிற நடிகர்களும், பிரபலங்களும் பெண்களுக்காக குரல் கொடுக்க தொடங்கினால், மற்றவர்களும், இயக்குனர்களும் இவர்களை பின் தொடர்வார்கள்.

கட்டுரை: Think Change India