ஸ்டேசில்லா யோகேந்திர வசுபால் கைது: அதிர்ந்துள்ள ஸ்டார்ட்-அப் உலகமும், பின்னணி உண்மைகளும்!

0

சமீபத்தில் மூடப்பட்ட ஸ்டேசில்லா நிறுவனத்தின் யோகேந்திரா வசுபாலை செவ்வாய்கிழமை இரவு சென்னையில் கைது செய்த விவகாரம் ஒட்டுமொத்த ஸ்டார்ட் அப் உலகையே உலுக்கியுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன? இதில் உள்ள பல சிக்கல்கள் என்ன என்பதை விரிவாக யுவர் ஸ்டோரி கண்டறிந்தது.

ஜூலியஸ் சீஸர் கொல்லப்பட்ட தினமான மார்ச் 15-ம் தேதிக்கு முந்தைய தினம் இரவு 9.45 மணி. ஒரு ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் சென்னையில் நீதிபதிக்கு முன் நிற்கிறார். ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. ஏனெனில் பொதுவாக மாலை ஐந்து மணிக்கே நீதிமன்ற விசாரணைகள் முடிந்துவிடும். அதற்கப்பாற்பட்ட நேரத்தில் ஏதேனும் அவசர சூழல் அல்லது தீவிரமான குற்றவியல் வழக்குகளாக இருந்தால் மட்டுமே நீதிபதி அழைக்கப்படுவார் என்று நம்மில் பலருக்கு தெரியும்.

யோகேந்திர வசுபால்
யோகேந்திர வசுபால்

ஆனால் இது அப்படிப்பட்ட சூழல் அல்ல. ஸ்டேசில்லாவின் யோகேந்திரா வசுபால் தொழில் சார்ந்த பண மோசடி குறித்த வழக்கிற்காகவே ஆஜர் படுத்தப்பட்டார். மறுநாள் காலையில் மற்ற தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் யோகேந்திராவின் அவல நிலை குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். மதிய நேரத்திற்குள் ஒட்டுமொத்த ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்தைச் சேர்ந்தவர்களும் அவருக்கு ஆதரவாக அணிதிரண்டனர். 

குறிப்பாக யோகேந்திராவின் மனைவி ருபல், அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு முன் எழுதிய வலைப்பதிவை வெளியிட்டார். அதில் தனக்கு நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் கடனளித்தவரின் மிரட்டல் மற்றும் ஆபாச பேச்சுவார்த்தைகளின் ஆடியோ க்ளிப்பையும் இணைத்து வெளியிட்டிருந்தார் யோகேந்திரா. இது ட்விட்டர், ஊடகங்களில் பரவ, பலரும் அவருக்கு ஆதரவு குரல் கொடுக்கத் தொடங்கினர். 

uni_con1 தலைமையில் #ReleaseYogiNow என்கிற ஹேஷ்டேக்குடன் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தி TiE சென்னை, இந்தியன் ஏஞ்சல்’ஸ் நெட்வொர்க், சென்னையிலிருக்கும் தொழில்முனைவோர், iSPRIT- ன் ஷரத் ஷர்மா, ரவி குருராஜ் மற்றும் ஸ்டார்ட் அப் உலகைச் சேர்ந்த பலரும் யோகேந்திராவை இந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அணி திரண்டனர்.

கர்நாடகாவின் ஐடி அமைச்சர் பிரியன்க் கார்கே,  உடனே  தனது ட்விட்டர் பக்கத்தில் சட்ட ரீதியாக யோகேந்திராவின் தரப்பில் நியாயம் இருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் தாமே பணிபுரிவதாக தெரிவித்தார். ஸ்டேசில்லாவின் சிஇஓ-வின் வழக்கு குறித்து தமக்கு தெரியும் என்றும் ஊடகங்களில் படித்தாகவும் கார்கே யுவர் ஸ்டோரிக்கு தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறைதான் அவரை அழைத்துச் சென்றார்கள் என்றும் கர்நாடகா காவல்துறை அல்ல என்பதால் அவரது வரம்பிற்குட்பட்டதல்ல என்றும் தெரிவித்தார். இருப்பினும் இன்று காலை தமிழ்நாடு வருமான வரி அமைச்சர் மணிகண்டனிடம் இந்த வழக்கு குறித்து பேசியதாகவும் சட்டத்திற்குட்பட்டு தன்னால் இயன்றவற்றை உதவுவதாக அவர் கார்கேவிடம் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

வழக்கு பின்னணி

தமிழ்நாடு காவல்துறையிடம் ஜிக்சா (Jigsaw) என்ற விளம்பர ஏஜென்ஸி புகார் அளித்ததற்கு ஸ்டேசில்லா தரப்பிலிருந்து அந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டபோதும் தமிழ்நாடு காவல்துறை யோகேந்திராவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.

பிறகு அரங்கேறிய நாடகம்

சென்னையில் காவலில் வைக்கப்பட்டார் யோகேந்திரா. அச்சுறுத்தியதாகவும் ஜிக்சா (Jigsaw) விளம்பர ஏஜென்சிக்கும் அதன் உரிமையாளர் ஆதித்யாவுக்கு எதிராக பண மோசடி செய்ததாகவும் யோகேந்திரா ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக அவரது மனைவி ரூபல் அப்படிப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் தரவில்லை என்று குறிப்பிட்டார். செவ்வாய் கிழமை நள்ளிரவு வரை அவர் எங்கிருந்தார் என்றே தெரியாது என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். யோகேந்திரா எந்த காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது அவர்களது வழக்கறிஞருக்கூட தெரியப்படுத்தவில்லை என்று ரூபல் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

அவரது குடும்பத்தினருக்கு எஃப்ஐஆர் நகல் கூட கிடைக்கவில்லை. செவ்வாய் கிழமை மாலை மூணு மணியளவில்தான் குடும்பத்தினரிடம் எஃப்ஐஆர் நகல் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

எஃப்ஐஆர் நகல் 10.30 மணிக்கு மேல் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் மறுநாள் பெயில் தாக்கல் செய்யும்வரை யோகேந்திரா மற்றொரு இரவை சிறையில் கழிக்கவேண்டும்.

சிவில் வழக்கின் கீழ் எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. அப்படியெனில் எதற்காக க்ரைம் ப்ரான்ச் ஏன் இதில் தலையிட்டனர்? இந்த வழக்கு குற்றவியல்வழக்காக எடுத்துக்கொள்ளப் படவேண்டும்  என்று காவல்துறைக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இரண்டு நாளாக இந்த நடவடிக்கைகளில் பங்கெடுத்து வரும் குடும்பத்தின் நெருங்கிய நம்பத்தகுந்த வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் யுவர் ஸ்டோரிக்கு தெரிவித்தார். 

”மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே யோகேந்திராவை காவலில் வைத்த பிறகு கைது செய்யப்பட்டு புகார் தாக்கல் செய்யப்பட்டது என காவலர்கள் தெரிவித்தனர். பணத்தை செலுத்திவிட்டால் புகார் மற்றும் எஃப்ஐஆர் பதிவு செய்யமாட்டோம் என்று 14-ம் தேதி இரவு ஆதித்யா மற்றும் அவரது தந்தை ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து யோகேந்திராவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் வாயிலாகவே இந்த பிரச்சனை கையாள விரும்புவதாக யோகேந்திரா திடமாக தெரிவித்துவிட்டார்.

இருதரப்பையும் கவனிக்கவேண்டும் என்பதால் தற்போது இந்த நாடகத்தை சற்று அப்படியே நிறுத்திவிட்டு முன்னோக்கி சென்று பார்ப்போம். இந்த மாத தொடக்கத்தில் ஸ்டேசில்லா ஒரு வலைப்பதிவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக பதிவிட்டிருந்தது. இகோசிஸ்டத்தில் பலருக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் யோகி என்று அழைக்கப்படும் யோகேந்திரா எப்போதும் எளிதாக பழகக்கூடிய ஒரு தொழில்முனைவோர். அனைவரும் அவர் குறித்து நல்ல வார்த்தைகளையே பகிர்ந்துகொள்வர்.

யோகேந்திரா மீதான பண மோசடி புகார் மற்றும் குற்றாச்சாட்டுகள் ஏன் மோசடி வழக்காக பார்க்கப்படுகிறது? பண வரத்தைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும்போது ஒரு வணிகம் நிறுத்தப்படும். ஸ்டேசில்லாவிற்கும் இப்படிப்பட்ட நிலைதான் ஏற்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு ஒரு வணிகம் தொடராமல் நிறுத்தப்படும்போது விற்பனையாளர்களுக்கும் (Vendor) ஊழியர்களுக்கும் பணத்தொகையை கொடுத்து தீர்த்துவைக்கப்படவேண்டும்.

ஸ்டேசில்லா மற்றும் ஜிக்சா அட்வர்டைசிங்கின் வழக்கு இதுதான். ஜிக்சா அட்வர்டைசிங்கிற்கு செலுத்தவேண்டிய மொத்த கட்டணத்தில் ஸ்டேசில்லா 1.56 கோடி ரூபாயை செலுத்தாமல் பல மாதங்களாக கடனாக வைத்துள்ளது. ஜிக்சாவின் ஆதித்யாவை இது குறித்து யுவர்ஸ்டோரி கேட்டபோது அவர்

இமெயில் வாயிலாக இவ்வாறு பதிலளித்தார் :

”தொழில்முனைவோராகத் துடிக்கும் சிலரது பொறுப்பற்ற தன்மையால் இன்னும் எத்தனை நாட்கள் விளம்பர ஏஜென்சிக்களும் ஊடகங்களும் நஷ்டத்தை அனுபவிப்பது? இவர்கள் நிதித் தொகையை வசூலித்து சில வருடங்கள் தரமான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு இறுதியாக அனைத்தையும் முடித்துக்கொள்வார்கள். கடினமாக உழைக்கும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படவேண்டுமா? 
ஸ்டேசில்லா நிறுவனர்கள்
ஸ்டேசில்லா நிறுவனர்கள்

அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள். நடவடிக்கை எடுத்தால் உடனே அந்தக் குற்றச்சாட்டு தவறு என மறுத்துவிடுவார்கள். இதற்கு நான் பயப்படமாட்டேன். என்னுடைய வழக்கு நேர்மையானது என்பதால் நான் நீதிமன்றத்தில் எதிர்த்து போராடுவேன். நீதிமன்றத்தை நான் நம்புகிறேன். 

ஒரு நபருக்கு 4,000 ரூபாய் வரை முன்பணம் வசூலித்து லட்சக்கணக்கானோரிடம் கோடை விடுமுறைக்காக புக்கிங் செய்கதுள்ளனர் ஸ்டேசில்லா. ஃபிப்ரவரி 24-ம் தேதி நிறுவனத்தை மூடுகின்றனர் என்னுடைய கணக்குப்படி : 2 லட்சம் புக்கிங் x ஒரு புக்கிங்கிற்கு 4000 ரூபாய் = 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர்.

இவர்கள் நிறுவனத்தின் கணக்கிலிருந்து தங்களது சொந்த கணக்குகளுக்கும் நிறுவனத்தில் எவ்வித பொறுப்பும் வகிக்காத தங்களது குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளுக்கும் பணத்தை மாற்றிக்கொள்கின்றனர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

”அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி குற்றச்சாட்டுகளை மறுப்பதை நிறுத்திக்கொண்டு நியாமற்ற வணிக நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்,”என்று பதிலளித்தார் ஆதித்யா.

இது சிவில் வழக்கா அல்லது கிரிமினல் வழக்கா?

ஸ்டார்ட் அப் தொழிலில் பணம் செலுத்தப்படவேண்டியது குறித்த நியாயமான கேள்விகளை இந்த இமெயில் முன்வைக்கிறது. தி எகனாமிக் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல ஸ்நேப்டீல் நிறுவனம் தனது விற்பனையாளருக்கு 1.2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு எதிராக விற்பனையாளர் தனக்கு அநீதி இழைக்கபட்டதாக குரலெழுப்புவது இது முதல் முறையல்ல.

TiE சென்னையின் தலைவர் நாரி நாராயணன் குறிப்பிடுகையில்,

இது நாள் வரை அதிகாரத்துவம், ஊழல் எதிர்த்து போராடி வந்தோம் தற்போது பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. தமிழக ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம் மீண்டும் ஒரு அடியை சந்தித்துள்ளது. டை சென்னை, சோர்ந்து போய் உள்ள தொழில்முனைவோர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம், என்றார். 

அச்சுறுத்தல் மற்றும் மாந்திரீக பொம்மை

சச்சித் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பொம்மை
சச்சித் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பொம்மை

யோகி தனது பதிவில் ஆதித்யா தன்னை அச்சுறுத்தும் அழைப்பை பதிவு செய்துள்ளார். அதில் யோகியின் மனைவியை விபச்சார வழக்கில் புகார் அளித்துவிடுவதாக ஆதித்யா அச்சுறுத்துகிறார். யோகி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பயன்படுத்தத் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். பெயர் வெளியிடாத ஒரு முதலீட்டாளர் யுவர் ஸ்டோரியிடம் தெரிவிக்கையில்,

”இது ஒரு உரிமையியல் வழக்கு. வணிகம் செய்பவருக்கும் விளம்பர ஏஜென்சிக்கும் இடையே இருக்கும் பணப் பிரச்சனை. ஆனால் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ நாகரிகமான செயல் அல்ல. வழக்கு குறித்த மொத்த விவரமும் வெளிவரும் வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நாம் உறுதியளிக்க முடியாது.”

மறுபடி கேள்வி முளைக்கிறது : சிவில் வழக்காக எஃப்ஐஆர் செய்யாமல் எதற்காக யோகிக்கு எதிராக க்ரிமினல் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது? இது குறித்து ஆதித்யாவிடம் கேட்டபோது அது நீதிமன்றத்தின் தனிப்பட்ட உரிமை சார்ந்த நடவடிக்கை என்றார். இந்த வழக்கு ஏன் சென்னையில் பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு ஆதித்யா, “எங்கள் இருவரது பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களும் சென்னையில்தான் உள்ளது” என்றார்.

ஸ்டேசில்லா இணை நிறுவனர் சச்சித்தின் வீட்டிற்கு ஒரு பொம்மை அளிக்கப்பட்ட காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் மீது சச்சித்தின் மகனின் புகைப்படம் உள்ளது. ஆனால் தான் எந்தவித அச்சுறுத்தலையும் அளிக்கவில்லை என்று ஆதித்யா இமெயிலில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

”தவறான தகவல். இது உண்மையெனில் உடனடியாக எனக்கெதிராக புகார் அளித்திருப்பார்கள் அல்லவா? இவை எனெக்கெதிராக திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.”

ஆனால் ஆதித்யா கடந்த மாதம் தனது முகநூல் கணக்கில் இருந்து சென்னை ஷாப்பிங் என்ற தனி பேஜில் தனக்கு வூடூ பொம்மைகள் எங்கே கிடைக்கும்? நண்பரின் ஒரு ஷூட்டுக்கு வேண்டும் என்று கேட்டு பதிவிட்டுள்ளார். அவர் கேட்டது இந்த பொம்மையா என்பது விசாரணையில் தான் தெரியவரும். 

ஸ்டேசில்லாவின் ஊடகம் சார்ந்த விளம்பரப்படுத்தும் திட்டங்களை ஆரம்பகட்டத்தில் ஆதித்யா மேற்கொண்டதாக இருவருக்கும் பொதுவான நட்புவட்டம் தெரிவிக்கிறது. தற்போது அரங்கேறி வரும் நாடகம் சிறிது காலத்திற்கு முன்பே துவங்கப்பட்டது. எனினும் ஆதித்யா இதை மறுத்துவிட்டார்.

அடுத்தது என்ன?

எஃப்ஐஆரின் நகல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர்கள் ஜாமீன் தாக்கல் செய்யலாம். இச்சம்பவம் இந்திய ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஸ்டார்ட் அப்கள் குறிப்பாக செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் எப்படி விற்பனையாளருக்கு பணம் செலுத்தப்போகிறது? மேலும் இப்படிப்பட்ட சூழலில் நிறுவனர்களுக்கு எப்படிப்பட்ட பின்புலமும் ஆதரவும் உள்ளது?

கர்நாடகா மற்றும் தெலுங்கானா அமைச்சர்கள் தொழில்முனைவோருக்கு வலுவாக ஆதரவளிக்கையில் மற்ற மாநிலங்களின் நிலை என்ன? பழிவாங்கப்படும் சூழல் நிலவும்போது ஒரு நிறுவனருக்கு எந்தவிதமான பாதுகாப்பு நிலவுகிறது?

தொடர்பு கட்டுரை: சென்னையில் தொடங்கிய ‘Stayzilla' இயக்கத்தை நிறுத்தியது: தோல்விக் காரணங்களை பகிரும் நிறுவனர்!