இந்தியாவின் முதல் 'பயோ டீசல்' பேருந்து: பெங்களுரு-சென்னை இடையே அறிமுகம்!

1

கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் திங்கள் அன்று இந்தியாவின் முதல் 'பயோபஸ்' அதாவது 100% கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட டீசலில் ஓடக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று டெக்கன் ஹெரல்ட் செய்தி வெளியிட்டது. பெங்களுரு-சென்னைக் இடையே பயணிக்கக் கூடிய இந்த பயோ பஸ்களை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தொடக்கிவைத்தார். கர்நாடக பேருந்துகளில், மாசு வெளிப்பாட்டை குறைத்து, பசுமைக் குடில் வாயுவை அதிகரித்து மாநிலத்தின் வருவாயை பெருக்க இதை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒரு லிட்டர் பயோடீசல் சாதாரண டீசலைவிட 5 ரூபாய் விலை குறைவானது. கர்நாடகா மாநிலத்தில் 4 போக்குவரத்து கழகங்கள் சேர்ந்து சுமார் 5.43 லட்ச கிலோ லிட்டர் டீசலை ஒரு வருடத்திற்கு உபயோகித்துவருகிறது. KSRTC மட்டுமே சுமார் 2.1 லட்ச கிலோ லிட்டர் பயன்படுத்துகிறது. 

பயோ டீசல் உபயோகம், மாசுகட்டுபாட்டிற்கு உதவியாக இருக்கும் என வல்லுனர்கள் கூறி வருகின்றனர். 

"இது ஒரு முன்னோட்ட திட்டம். வரும்காலங்களில் மேலும் பயோடீசல் பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இது பசுமையான சுற்றுச்சூழல் உருவாக உதவிகரமாக இருக்கும்," என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

"டீசல் வாகனங்களில் அதிக வாயு வெளிப்பாடு உள்ளது. ஆனால் பயோடீசல் வாகனங்களில் அது இருக்காது. வாகனத்தின் செயல்பாட்டையும் அது பாதிக்காது," என பேருந்து ஓட்டுனர் கூறினார். மாநில சாலை போக்குவரத்துத் துறைகள் நாடு முழுவதும் சுமார் 1.50 லட்சம் பேருந்துகளை இயக்கி 7 கோடி பயணிகளுக்கு சேவை புரிந்து வருகிறது. இது இந்திய ரயில்வேவை விட மூன்று மடங்கு அதிகம்.

ஒரு ஆண்டில் சுமார் 300 கோடி லிட்டர் டீசல் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய திட்டம் மூலம் எரிப்பொருள் சேமிப்பும் வருவாயும் அதிகரிக்கும். "இந்த திட்டத்தை மேலும் 17000 பேருந்துகளில் செயல்படுத்த உள்ளோம். நாட்டில் முதன்முறையாக இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்," என்று KSRTC நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

கட்டுரை: Think Change India