'தீப் சந்த் டயாலிஸிஸ் மையம்' உருவான விதமும் விடாமுயற்சியின் வெற்றியும்!

0

"விதிகளுக்கு சவால் விடுங்கள், மாற்றி யோசியுங்கள், உங்கள் விருப்பங்களை பின் தொடருங்கள் இவற்றில் உறுதியாக இருந்தால் எல்லாம் சீராக அமையும்" இதுவே அசீம் கார்கின் தாரக மந்திரம். 

இந்த தாரக மந்திரத்தை உறுதியுடன் பின்பற்றிய அசீம் கார்க், பாரம்பரிய மருத்துவமனைகளில் இருந்து மாறுபட்டு சிறுநீரக டயாலிஸிஸ் சிகிச்சைக்கென பிரத்யேக மருத்துவமனகளை இந்தியா முழுவதும் நிறுவினார். 

அதுதான் "தீப் சந்த் டயாலிஸிஸ் மையம்" (Deep Chand Dialysis Centre - DCDC- டிசிடிசி) ஆகும்.

குர்கான் ஐ.டி.எம். மையத்தில் தொழிற்கல்வி பயின்ற அசீம் கார்க், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டில்) எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

இயல்பிலேயே, தொழிலதிபருக்கான திறன்களை பெற்றிருந்த அசீம், தொழிலில் புதுப்புது யுத்திகளை அறிமுகப்படுத்துவதிலும் கைதேர்ந்திருந்தார். அதேவேளையில், அவர் குடும்பத்தினர் கொண்டிருந்த தயாள சிந்தனை அவரிடமும் இருந்தது. குறிப்பாக அவரது மறைந்த தாத்தாவைப் போல் அதீத தயாள சிந்தனை அசீமுக்கு இருந்தது. அதன் காரணமாகவே, தனது மருத்துவமனைக்கு தீப் சந்த் என்ற தனது தாத்தாவின் பெயரை சூட்டினார் அசீம்.

அவரது மூதாதையர்கள் போலவே அசீம் மருத்துவ சேவையில் ஈடுபாடு காட்டினார். அவரது ஈடுபாடு மிகுந்த காலத்தில்தான் இந்தியாவில் சிறுநீரக பிரச்சினைகள் பரவலாக தலைதூக்கத் தொடங்கியது.

இந்தியாவில், நாள்பட்ட சிறுநீரக நோய் தாக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்நோய் ஒரு மனிதரின் சிறுநீரக செயல்பாட்டினை முற்றிலுமாக முடக்கிவிடுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், பாதிக்கும் மேலானவர்கள் வசதியின்மை காரணமாக சரியான மருத்துவத்தை செய்து கொள்ள முடிவதில்லை.

அத்தகையவர்களுக்கு ஆபத்பாந்தவனாக உருவானதுதான் தீப் சந்த் டயாலிஸிஸ் மையம். டிசிடிசி தொடங்கப்பட்ட போது இந்தியாவில் பிரத்யேக சிறுநீரக டயாலிஸிஸ் மையங்கள் அதிகமாக இல்லை. மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே இவ்வகை மருத்துவம் பிரபலமடைந்திருந்தன. அசீம் கார்க் இந்தியாவின் தேவையை புரிந்துகொண்டார். அதன் விளைவாகவே தீப் சந்த் மருத்துவமனைகளை உருவாக்கினார்.

முன்னதாக, சிங்கப்பூரில் உள்ள தேசிய கிட்னி மையத்தில் (நேஷனல் கிட்னி ஃப்வுண்டெஷன் - National Kidney Foundation ) பயிற்சி பெற்றதோடு, அங்கு சில ஆண்டுகள் துணை மேலாளராகவும் பணிபுரிந்தார் அசீம். அங்கு அவர் பெற்ற படிப்பறிவும், அனுபவ அறிவும் இந்தியாவில் மூலதனம் செய்யப்பட்டது. சிறுநீரக கோளாறுகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை துவக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை வரவேற்பவர்கள் அதிகம் பேர் இல்லை. பாரம்பரிய முறையை மாற்றி, புதிதாக சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கினால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற முடியாது. அப்படித் தொடங்கப்பட்ட பல மையங்கள் நாளடைவில் இருந்த இடம் இல்லாமல் போகின என்பதே பலரது கருத்தாக இருந்தது.

ஆரம்ப நிலையிலேயே ஆதரவு இல்லையே என மனமுடைந்துவிடவில்லை அசீம். விதிகள் முறியடிக்க வேண்டும் என்ற கொள்கை அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. தனது குடும்பத்தினரிடம் இருந்தும் நண்பர்களிடமிருந்தும் தீப் சந்த் டயாலிஸிஸ் மையத்தை துவங்க அவருக்கு தேவையான அனைத்து நிதியுதவியும் தாராளமாக கிடைத்தது. மருத்துவத் துறையில் நவீனத்துவத்தை புகுந்த வேண்டும் என்ற கருத்து கொண்ட மருத்துவ நிபுணர்களை தேர்வு செய்து தனது மருத்துவ மையத்தில் பணியமர்த்தினார்.

திறன்மிக்க, உரிய பயிற்சி பெற்ற மருத்துவர்களை கொண்டு துவங்கப்பட்ட தீப் சந்த் டயாலிஸிஸ் மையத்துக்கு (Deep Chand Dialysis Centre - DCDC- டிசிடிசி) நாளுக்கு நாள் வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் நன் மதிப்பையும், நன் நம்பிக்கையையும் பெற்றது தீப் சந்த் டயாலிஸிஸ் மையம்.

தற்போது, டெல்லியில் மட்டும் 8 கிளைகள் இருக்கின்றன. மொத்தமாக 80 டயாலிஸிஸ் இயந்திரங்கள் இவற்றில் உள்ளன. அதுவரை டயாலிஸிஸ் சிகிச்சை பெற முடியாமல் தவித்தவர்களுக்கு தீப் சந்த் டயாலிஸிஸ் மையம் ஓர் அரிய வரப்பிராசதமாக அமைந்தது.

எண்ணற்ற ஏழைகள் இங்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை பெற முடிந்தது. அவநம்பிக்கையின் பிடியில் சிக்கியிருந்த நோயாளிகள் பலரை நம்பிக்கை பாதையில் இட்டுச் சென்றது.

தற்போதைய சூழலில் தீப் சந்த் டயாலிஸிஸ் மையத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கிறது. மருத்துவத்துறையில் இருந்து சில தடைகளை உடைத்தெறிந்து தீப் சந்த் டயாலிஸிஸ் மையம் புதுமை படைத்துள்ளது. இப்போது நன்கு அறியப்பட்டு, தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ள தீப் சந்த் டயாலிஸிஸ் மையம் இந்தியா முழுவதும் கிளைகளை உருவாக்கி வருகிறது.

அடுத்து 3 ஆண்டுகளில் 100 கிளைகள் அமைக்க வேண்டும் என்பதே அசீம் கார்கின் லட்சியம். அவரது லட்சியங்கள் உயர்ந்தவை. அவரது கடின உழைப்பு அவரது தாரக மந்திரத்தை மெய்ப்பித்துள்ளது.