வங்கிக் கடன் ஏதுமின்றி வருடத்திற்கு 20 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டும் விவசாயி! 

0

புந்தல்கண்ட் பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் பசுமையான 32 பிகா பண்ணை நிலத்தை உருவாக்கியுள்ளார் ப்ரேம் சிங்.

”கடன் பிரச்சனை, பயிர்களின் விளைச்சல் பொய்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளை நானும் சந்தித்துள்ளேன். நம்மால் பருவநிலைகளை கட்டுப்படுத்த முடியாது. வங்கிக் கடன் அதிகரித்து வந்தது. அப்போது நான் நம்முடைய மூதாதையர் குறித்தும் அவர்களது பாரம்பரிய விவசாய முறைகள் குறித்தும் சிந்தித்துப் பார்த்தேன். இதுதான் வெற்றிக்கான வழி என்பதை தெரிந்துகொண்டேன். இது சவால் நிறைந்ததாக இருந்தது. என்னுடைய குடும்பத்திலிருந்தவர்களே இது குறித்து புரிந்துகொள்ளவில்லை. ஆரம்பத்தில் எனக்கு ஆதரவளிக்கவும் இல்லை. ஆனால் இன்று நான் கடனின்றி இருக்கிறேன். நான் வளர்ச்சை நோக்கி செல்லும் ஒரு விவசாயி,” என்று பெருமையாக கூறினார்.

மத்திய பிரதேசத்திற்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் இடையே இருக்கும் புந்தல்கண்ட் மலைப் பகுதியில் ’ஹ்யூமன் அக்ராரியன் செண்டர்’ என்கிற தனித்துவமான கிராமப்புற அருங்காட்சியகத்துடன் ப்ரேமின் நிலம் தனித்து விளங்குகிறது. இந்த நிலப்ப்பரப்பு வறட்சி, விவசாயி தற்கொலை, விளைச்சல் பொய்த்துப்போனதன் காரணமாக வேலைவாய்ப்பின்மை, சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவுடன் தீவிரமான வானிலை, குறைவான தண்ணீர் போன்றவற்றால் சூழ்ந்திருந்தது.

துவக்கப்புள்ளி

விவசாய குடும்பத்தில் பிறந்த 54 வயதான ப்ரேம் பசுமையான நிலங்கள், ஃப்ரெஷ் அறுவடை, கால்நடைகள் போன்றவை சூழ்ந்த நிலப்பரப்பிலேயே வளர்ந்தார்.

அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் எம்ஏ தத்துவம் மற்றும் காந்தி சித்ரகூட் கிராமோதய் விஷ்வவித்யாலயாவில் கிராமப்புற வளர்ச்சி மேலாண்மை படித்து முடித்ததும் தனது மூதாதையர் தொழிலான விவசாயத்தை 1987-ம் ஆண்டு துவங்கினார்.

”மற்ற விவசாயிகளைப் போலவே நானும் அதிக பயன்பாட்டில் இருந்த ட்ராக்டர், யூரியா, உரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்தினேன். பசுமை புரட்சியுடன் இவை விளைச்சலை அதிகரித்து அதிக வருவாயை ஈட்டித் தரும் என்கிற நம்பிக்கையே இதற்குக் காரணம்,” என்றார் ப்ரேம்.

தினமும் கடுமையாக உழைத்தும் ப்ரேமின் குடும்பம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்து வந்தது. வங்கிக் கடனை திரும்பச் செலுத்தவேண்டிய நாள் கடந்துசெல்கையில் வங்கிக் கடனும் வட்டி விகிதமும் அதிகரித்தது. ”ஒரு பருவத்திற்கு அதிகபட்சமாக 2.15 லட்சம் வருவாய் ஈட்டுவோம். இதில் 80 சதவீதத் தொகை வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுவிடும். எங்களிடம் வெறும் 25,000 – 30,000 ரூபாய் மட்டுமே மிஞ்சியிருக்கும். நான்கு சகோதரர்கள் கொண்ட ஒரு குடும்பம் இந்தத் தொகையைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும்?,” என்று கேள்வியெழுப்பினார் ப்ரேம்.

இரண்டாண்டுகள் இந்தக் தொழிலில் ஈடுபட்டதும் எங்கோ தவறு இருக்கிறது என்பதை உணர்ந்தார். பிற விவசாய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். காலப்போக்கில் மதிப்பு குறையும் பொருளான ட்ராக்டர்தான் இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணம் என்பதை உணர்ந்தார்.

"கடன் பெறவும் ட்ராக்டர் மற்றும் இயந்திரங்கள் வாங்கவும் எங்கள் அம்மாவின் தங்க நகைகளை விற்க வேண்டியிருந்தது. மொத்த தொகையையும் வங்கிக்கும் வட்டிக்குமே செலவிட நேர்ந்ததால் அந்த நகைகளை எங்களால் மீட்க இயலவில்லை,” என்றார்.

கடன்தான் விவசாய நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக காட்டப்படுகிறது. 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்கிற கோரிக்கையும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டது.

மேலும் உரங்களும் ரசாயனங்களும் அதிகம் பயன்படுத்தப்படுவதால் மண் வளத்திற்கு தீங்கு ஏற்படுவதும் நிரூபனமானது.

இதனால் 1989-ம் ஆண்டு நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் பாரம்பரிய விவசாய முறையை சோதித்து பார்க்க தனது அப்பாவிடம் அனுமதி கேட்டார் ப்ரேம்.

பரிந்துரைக்கப்படும் விவசாய முறை

குறிப்பிட்ட இடைவெளியில் சரியான விகிதத்தில் பிரித்து செய்யப்படும் விவசாய முறையை பரிந்துரைக்கும் ப்ரேம் சிங் விவசாயிகளுக்கு சுயசார்புடைய தொழிலாக விவசாயம் இருக்கவேண்டும், என்கிறார்.

”விவசாயம் முறையாக நடக்கவேண்டுமானால் நாம் சுயசார்புடன் செயல்படவேண்டும். முதலில் சந்தைக்காக பயிரிடாமல் நம்முடைய குடும்பத்திற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக பயிரிடவேண்டும். முக்கியமாக இயற்கை அதிக வளங்களை நமக்கு அளிப்பதால் அவற்றை மதித்து பாதுகாக்கவேண்டும்,” என்று விவரித்தார் ப்ரேம்.

நிலத்தை சரிவிகிதத்தில் பிரித்து மேற்கொள்ளப்படும் இந்த விவசாய முறையானது, விவசாயி தனது நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து செயல்பட ஊக்குவிக்கிறது. மூன்றில் ஒரு பங்கு பழங்களும் பயிர்களும் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும். இரண்டாவது பகுதி கால்நடை பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும். மூன்றாவது பகுதி மரம் வளர்க்க பயன்படுத்தப்படும். மேலும் இந்த அணுகுமுறை அடுத்தடுத்து வெவ்வேறு பயிர்களை வளர்த்தல், ஆர்கானிக் விவசாயம், கால்நடை வளர்ப்பு, உணவு பதனப்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல், விதை வளர்ச்சி ஆகியவற்றை ஆதரிக்கிறது.

கால்நடை வளர்ப்பு பல்வேறு விதங்களில் விவசாயிக்கு வருவாய் வழங்குகிறது. உதாரணமாக பண்ணை விலங்குகளிலிருந்து கிடைக்கும் பாலை பதனப்படுத்தி பன்னீர், நெய் ஆகிய பொருட்களாக விற்பனை செய்யலாம். விலங்குகளின் கழிவுகளை நிலத்திற்கான உரமாக பயன்படுத்தலாம். மேலும் ரசாயனங்களில்லாத ஆர்கானிக்காக வளர்ந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி மண்ணின் தரத்தை உயர்த்தி உயர்தர அறுவடையை பெறலாம்.

”எண்ணெய், காய்கறிகள், பருப்புவகைகள், தானியங்கள், மரம், தண்ணீர் என வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வளர்க்கவேண்டும். வீட்டிற்குத் தேவையானதை பூர்த்தி செய்த பிறகு மீதமிருக்கும் விளைச்சல்களை சந்தைக்குக் கொண்டு செல்லலாம். இவ்வாறு ஒரு விவசாயி சந்தையின் தேவை மற்றும் விநியோக சங்கிலிக்கிடையே சிக்கித் தவிக்காமல் தங்களது தேவைகளை தாமாகவே பூர்த்திசெய்துகொள்ளலாம்.”

இதே மாதிரியான விவசாய முறையை பிரதமர் நரேந்திர மோடியும் 2016-ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் பரேலி பகுதியில் தனது உரையின் போது பிரச்சாரம் செய்தார். விவசாயிகள் அதிக மரங்களை நட்டு பாரம்பரிய விவசாய முறைகளைக் கடைப்பிடித்து அத்துடன் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

நம் தேவைகளை சுயசார்புடன் நாமாகவே பூர்த்திசெய்துகொள்ளும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து ப்ரேம் நன்கறிவார். சில பொருட்களை சந்தையில் வாங்கியே ஆகவேண்டிய நிலை உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கிறார். எனினும் அப்படிப்பட்ட பொருள்களை அவர்களது சமூகத்திற்குள்ளாகவோ அல்லது அருகாமையிலுள்ள கிராமங்களிலிருந்தோ வாங்கிக்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறார். இதனால் சமுதாயம் ஒட்டுமொத்தமாக செழிப்படைவது உறுதிசெய்யப்படும் என்கிறார்.

தற்சமயம் அவரது மாவட்டத்திலுள்ள 28 சதவீத விவசாயிகள் இந்த விவசாய முறையை பின்பற்றுகின்றனர். அத்துடன் பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் பகுதியைச் சேர்ந்த விவசாய சமூகத்தினரும் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி

தொடர்ச்சியான வறட்சி காரணமாக பயிர் விளைச்சல் பொய்த்துப்போதல், வங்கிக் கடனை திருப்பச் செலுத்தாததால் நிலுவையிலுள்ள கடன், பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விவசாய முறைகளை ஒதுக்கிவிட்டு யூரியா மற்றும் ரசாயன உரங்களை அரசாங்க கொள்கைகள் ஊக்குவித்தல் போன்ற மூன்ற காரணங்களினாலேயே விவசாய சமூகத்தினர் விவசாயத்தை ஒரு பாரமாக கருதுகின்றனர் என்றார் ப்ரேம்.

”1980-ம் ஆண்டு வரை ஒரே ஒரு யூரியா மூட்டையைக்கூட புந்தல்கண்ட் மாவட்டத்திலுள்ள என்னுடைய கிராமத்தில் யாரும் வாங்கியதில்லை,” என்றார்.

இந்த சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கான ஒரே தீர்வு இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி அத்துடன் ஒத்திசைந்து செயல்படுவதே ஆகும்.

கடந்த 25 ஆண்டுகளாக நிலத்தை சரிவிகிதமாக பிரித்து மேற்கொள்ளப்படும் விவசாய முறையின் பலன்களை கண்கூடாகப் பார்த்து வருகிறார் ப்ரேம். இதில் குறிப்பாக விவசாயின் அன்றாட வருவாய் அதிகரிக்கிறது.

”ஒரு ஏக்கர் நிலத்தில் கோதுமை பயிரிட்டால் நீங்கள் 20 க்விண்டால் விளைச்சலை அறுவடை செய்யலாம். அதற்கு பதிலாக நீங்கள் கொய்யா வளர்த்தால் சுமார் 100 க்விண்டால் விளைச்சல் கிடைக்கும். ஏனெனில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 100 மரங்களை நீங்கள் வளர்ப்பீர்கள். எனவே உங்களுக்கு ஐந்து மடங்கு வருவாய் கிடைக்கும் அதே நேரம் உங்களது செலவுகளும் குறையும்,” என்று விவரித்தார்.

மேலும் சரிவிகித விவசாய முறையில் ஆபத்தின் அளவு குறைவதுடன் பருவநிலையை முழுவதுமாக சார்ந்திருக்கும் நிலையும் குறையும். சிறப்பான மண் வளமும் அதிகமான கார்பன் அளவும் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும். சுய சார்புடன் செயல்படவும் அறுவடையை அதிகரிக்கச் செய்யவும் இந்த சுழற்சி அவசியம்.

”இன்று நான் கடன் இல்லாமல் வாழ்கிறேன். என்னுடைய தாத்தா காலத்தில் வாங்கப்பட்ட சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடனை திருப்பிசெலுத்திவிட்டேன். இதற்கு இருபதாண்டு காலம் எடுத்துக்கொண்டது. நேரம் அதிகமானாலும் இவை அனைத்தும் சாத்தியமானது,” என்று பெருமிதம் பொங்க கூறினார் ப்ரேம்.

மரியாதையை திரும்பக் கொண்டுவருதல்

இன்று யாரும் விவசாயி ஆக விரும்புவதில்லை. அதே போல் விவசாய சமூகத்திற்கு இந்தச் சமுதாயம் மதிப்பளிப்பதில்லை.

”குறைந்த வருவாய் காரணமாக பல விவசாயிகள் நகருக்கு குடிபெயர்ந்து ஊழியர்களாகவும் கட்டுமான பணியாளர்களாகவும் மாறினர். முன்னேற்றம் என்பது இதுதானா?,” என கேள்வியெழுப்பினார்.

எனவே தனது சமூகத்தின் ஊக்கத்தையும் கௌரவத்தையும் புதுப்பிப்பதற்காக விவசாயிகள் அடங்கிய ஒரு குழுவுடன் சேர்ந்து சுய நிதியிலான ஒரு கிராமப்புற அருங்காட்சியகத்தை துவங்கினார். இங்கு இந்திய விவசாயத்தின் வரலாறு பறைசாற்றப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் அடிக்கடி பார்வையிடப்பட்டு வருகிறது.

”நான் எங்கு சென்றால் என்னுடைய நோக்கம் ஒன்றுதான். அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நம் நாட்டில் ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு கொடுக்கபட்ட மரியாதையை மீட்டெடுக்க விரும்புகிறேன். விவசாயம் நேர்மறையான விதத்தில் பார்க்கப்படவேண்டும். அது விவசாயிகளின் குடும்பத்திற்கு பலனளித்து அவர் சுயசார்புடன் இருக்க உதவும்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா

Related Stories

Stories by YS TEAM TAMIL