சாதித்த இந்தியர்கள்: டைம் பட்டியலில் மகுடம் பெற்றவர்கள் கற்றுத்தரும் பாடம்!

0

எப்போதும் போலவே டைம் பட்டியல் பிரம்மிக்க வைப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த முறை நமக்கு, கொஞ்சம் பெருமிதம் கொள்ளும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும் இருக்கிறது. இதற்கான காரணம் இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும். டைம் இதழ் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் என பட்டியலிட்டுள்ள 100 பேரில் ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் 100 ல் ஆறு பேர் என்ற எண்ணிக்கையை விட்டுவிடலாம். இந்த கவுரவத்தை பெற்றிருப்பவர்களும், அவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ள காரணமும் கவனிக்கக்கத்தாக இருக்கிறது. ஆறு பேருமே வயதில் இளையவர்கள்- அதைவிட முக்கியமாக இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்.

இந்த வழிகாட்டித்தன்மையை தான் டைம் பட்டியல் அடையாளம் காட்டியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இவர்கள் அனைவருமே சக இந்தியர்களுக்கு தங்கள் வாழ்க்கை மூலம் ஒரு செய்தியை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். நம்மாலும் முடியும் என ஊக்கம் அளிக்கும் செய்தி அது.

இவர்கள் அனைவருமே தன்னம்பிகையின் நாயகர்கள். தங்களுக்கென தனித்திறமையும், அதை பயன்படுத்திக்கொள்வதற்கான தொலைநோக்கும் கொண்டவர்கள். ஆறு பேரும் உள்ளூரில் மட்டும் சிகரம் தொடவில்லை. ஏதோ ஒரு விதத்தில் உலகையும் இவர்கள் தங்கள் செயல்களால் வியக்க வைத்திருக்கின்றனர். முன்னுதாரணம் என சொல்ல வைத்திருக்கின்றனர்.

பட்டியலில் விளையாட்டு நட்சத்திரங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள சானியா மிஸ்ராவை எடுத்துக்கொள்வோம். சானியாவின் சாதனைகள் நாமறிந்தவை தான். ஆனால் இன்று இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்குசுடன் இணைந்து அவர் சாதனை படைத்து வரும் விதம் டென்னிசையும், விளையாட்டையும் ஆர்வமாக கொண்டுள்ள ஒவ்வொருவருக்கு ஊக்கம் அளிக்கக் கூடியது தான்.

நன்றி: hotstarz.info
நன்றி: hotstarz.info

”சானியாவின் நம்பிக்கை, ஆற்றல் மற்றும் விடாமுயற்சி டென்னிசை கடந்து செல்வதாக” பாராட்டப்பட்டுள்ளது. டைம் இதழுக்காக இந்த வார்த்தைகளை எழுதியுள்ளது யார் தெரியுமா? கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த சாதனையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர்! ”ஒரு தலைமுறை இந்தியர்களை தங்கள் கனவுகளை நோக்கி முன்னேற, அவர் ஊக்கம் அளித்திருக்கிறார்” என சச்சின் குறிப்பிடுகிறார். தங்களாலும் சிறந்து விளங்க முடியும் என சானியா நம்பிக்கை கொள்ளச்செய்திருக்கிறார் என்கிறார் சச்சின்.

இதைவிட சானியாவின் சாதனையை யாரால் அழகாக சொல்ல முடியும். சானியா இரட்டையர் டென்னிசில் சிகரம் தொட்டிருப்பதை விட இந்தியாவில் உள்ள இளம் உள்ளங்கள் மனதில் எல்லாம் நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்திருப்பது தான் முக்கியமானது.

’உங்கள் வெற்றியை டி-ஷர்ட் போல அணிந்து கொள்ளுங்கள்; கோட் சூட் போல அல்ல என சொல்லப்படுவதுண்டு, இவர் அப்படி தான் இருக்கிறார்” என்கிறது ஹாலிவுட்டில் முத்திரை பதித்திருக்கும் பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா பற்றிய பகுதி. ”அவரிடம் ஊக்கம் இருக்கிறது, லட்சியம் இருக்கிறது, சுயமரியாதை இருக்கிறது, கடின உழைப்புக்கு ஈடில்லை என அவர் அறிந்திருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார் பிரியங்கா பற்றி எழுதியுள்ள ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான வைனே ஜான்சன்.

அமெரிக்க சந்தையில் அவர் கிழித்துக்கொண்டு நுழைந்திருப்பதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது, மேலும் சாதிக்க முடியும் என ஊக்கம் கொள்ள வைக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்றும் ஜான்சன் பாராட்டுகிறார். பேவாட்ச் என்றால் ஹாலிவுட் அழகிகளை பார்த்து கிறங்கிப்போனவர்கள் நாம். இன்று நம்மவர் தனது நடிப்பால் அங்கு அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

நன்றி: Santabanta.com
நன்றி: Santabanta.com

இந்த பட்டியலில் கூகுளின் சி.இ.ஓவாக உயர்ந்துள்ள நம்மவரான சுந்தர் பிச்சை உலகை மாற்ற உதவியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும். கூகுளில் அவரது சாதனைகள் பட்டியலிடப்பட்டு, அடுத்ததாக அவர் அறிமுகம் செய்ய இருக்கும் சேவைக்காக ஆர்வத்துடன் உலகம் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக முன்னோடிகளாக ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இடம்பெற்றுள்ளனர். 2007 ல் கையில் உள்ள சேமிப்பை எல்லாம் திரட்டி ஃபிளிப்கார்ட்டை இணைய புத்தக கடையாக துவக்கிய இருவரும் பத்தாண்டுகளில் நிறுவனம் 100 மில்லியன் டாலர் மதிப்பு மிக்கதாக உருவாகும் என கூறியதை யாரும் நம்பத்தயாராக இல்லை. ஆனால் இன்று ஃபிளிப்கார்ட்டின் மதிப்பு 13 பில்லியன் டாலராக இருக்கிறது. அமேசான் மற்றும் அலிபாபா போன்ற சர்வதேச ஜாம்பவான்களோடு போட்டியிடும் நிலை இருந்தாலும் இந்த இருவரையும் யாரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் 
சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் 

இந்தியாவில் ஸ்டார்ட் அப் அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனர்களை விட உத்வேகம் தரக்கூடியவர்கள் வேறு யார் என டைம் இதழ் கேட்பது போல இருக்கிறது.

வங்கியாளரான ரகுராம் ராஜன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சுனிதா நாராயண் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பொருளாதார தொலைநோக்குக் கொண்ட மேதைகள் அடிக்கடி வருவதில்லை, இப்போது ரகுராம் ராஜன் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வீட்டுக்கடன் நெருக்கடியை கணித்ததற்காக அவர் பாராட்டப்பட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவை அவர் சரியாக வழிகாட்டியிருக்கிறார் என்றும் டைம் குறிப்பிடுக்கிறது.

சுனிதா நாராயண், ஒரு செயற்பாட்டாளராக முன்னோடியாக இருக்கிறார் என மகுடம் சூட்டுகிறது டைம். மேடுக்குடி சுற்றுச்சுழலியல் போக்கை எதிர்த்தவராகவும் அவர் பாரட்டப்படுகிறார். பருவநிலை மாற்றத்தில் உடனடியாக செவிசாயக்க வேண்டிய குரலாக சுனிதா விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆறு இந்தியர்களும் நம்மை பெருமிதம் கொள்ள வைக்கின்றனர். தத்தமது துறையில் அவர்கள் முன்வைக்கும் செய்தி மேன்மையை நோக்கிய உந்துசக்தியாக இருக்கிறது.

டைமின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாவது என்றாலும் சாதாரணமானது அல்ல. இந்த பட்டியல் தேர்வு பற்றிய அறிமுக குறிப்பு கவனிக்கத்தக்கது. செல்வாக்கை எப்படி தீர்மானிப்பது? நம்பிக்கையை வைத்தா? அல்லது ஆதாரத்தை வைத்தா? கடந்த கால பாடங்களை வைத்தா? எதிர்கால நம்பிக்கையை வைத்தா? இப்படி கேட்கும் டைம், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களில் துவங்கி பரவலாக அறியப்படாதவர்கள் வரை பலரை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான வழியில் பாடங்களை கற்றுத்தருகின்றனர் என்கிறது டைம். கற்றுக்கொள்வோம்!

டைம் கட்டுரைக்கான இணைப்பு

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

'ஆசியாவின் 50 சிறந்த பெண் தொழிலதிபர்கள்' பட்டியலில் இடம்பெற்ற எட்டு இந்திய பெண்கள்!

உலக இணையவாசிகள் பட்டியல்: டிச.15-ல் இந்தியா 2-ம் இடத்தை எட்டும்!