முட்டை வாடை கூட பிடிக்காத ஜெயந்திக்கு பிணவாடை சகஜமாகிவிட்டது எப்படி?

1

ஒரு பெண், ஆண்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யமுடியும் என்று வாய்சவடால் மட்டும் விடும் பலருக்கு மத்தியில், அதை மெய்பித்து காட்டியிருக்கிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'ஜெயந்தி'.  இவருக்கு தமிழக அரசு, 70-ஆவது சுதந்திர தினத்தன்று 'கல்பனா சாவ்லா' விருதை அளித்து கவுரவித்துள்ளது. ஆண்களே கூட செய்யத் தயங்கும், அச்சுறும் சுடுகாட்டில் சடலங்கள் எரிக்கும் பணிகளை செய்துவருவதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மின்மயான பணியில் ஜெயந்தி
மின்மயான பணியில் ஜெயந்தி

ஜெயந்தி'யின் பின்னணி

ஜெயந்தி, திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரைச் சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பட்டு, அங்குள்ள கூலிப்பட்டி எனும் ஊரில் உள்ள முருகன் கோவிலின் அர்ச்சகராக பணியாற்றியவர். அவரது மூன்றாவது மகளான ஜெயந்தி, பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போது, வேற்று சமூகத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவரை காதலித்து மணம் முடித்தவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

சுடுகாடு பணிக்கு வந்தது எப்படி?

திருமணத்துக்கு பின், குடும்ப வறுமையின் காரணமாக வீட்டுச் செலவுகளை சமாளிக்க வீட்டிலிருந்தே தையல் வேலை மற்றும் சிறிய வேலைகள் செய்து வருமான ஈட்டி வந்தார் ஜெயந்தி. பின் நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் அங்குள்ள பூங்கா பராமரிப்பு பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் மயானத்தில் அமைந்துள்ள பணிக்கு செல்லக்கூடாது... என்று அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் துணிந்து நின்று அந்த பணியில் சேர்ந்தார் ஜெயந்தி. அந்த மயானத்தில் உள்ள பூங்காவை சுத்தமாக பராமரித்து வந்தார் அவர். மூன்று மாதங்கள் இவரது பணி அங்கே தொடர்ந்தது. அதே மயானத்தில் சடலங்கள் எரிக்கும் பணிக்கு ஆள் தேவைப்பட்டது. இதை அறிந்த ஜெயந்தி, 'தான் அப்பணியை செய்ய விரும்புவதாக' கூறி சம்மந்தப்பட்டவர்களை அணுகினார். இவரது கல்வித்தகுதி, குடும்பப்பின்னணியை பார்த்த அதிகாரிகள் முதலில் இவருக்கு அந்த வேலையை தர தயங்கினாலும், ஜெயந்தியில் விடாமுயற்சியின் காரணமாக இறுதியாக ஒப்புக்கொண்டனர். 

2013 இல் நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் சடலங்களை எரிக்கும் ஆப்ரேட்டர் பணியில் சேர்ந்தார். 

"முட்டை வாடை கூட பிடிக்காத எனக்கு, தற்போது பிண வாடை எல்லாம் சகஜமாகிவிட்டது,"

என்று நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயந்தி. இவர் இதுவரை 2800 சடலங்களை மின்மயானத்தில் தகனம் செய்துள்ளார். 

"சடலங்கள் எரிக்கும் பணியில் ஈடுபடுவது, கடவுளுக்கு செய்யும் பணிக்கு ஈடாக கருதி வேலை செய்கிறேன். தற்போது என் கணவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை," என்று கூறியுள்ளார். 

அண்மையில், இதே மயானத்தின் மேலாளராக ஜெயந்திக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்களே செய்ய பயப்படும் சடலங்கள் எரிக்கும் பணியை, எவ்வித அச்சமுமின்றி துணிச்சலுடன் செவ்வனே செய்துவருவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இவருக்கு 'கல்பனா சாவ்லா' விருதை வழங்கி அங்கீகரித்துள்ளார். 

'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற வரிகளை பின்பற்றி தன் பணியை இழிவாக கருதாமல் மகிழ்வுடன் தொடர்ந்து செய்துவரும் ஜெயந்திக்கு நம் வாழ்த்துக்கள்!