’வெற்றியடைவதற்கு தோல்வியை ஏற்றுக் கொண்டு அதைக் கொண்டாடுங்கள்’ – கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை

1

சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூச்சசுபாவமுள்ளவராக இருப்பினும் புத்திசாலிச் சிறுவனாக விளங்கினார். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார். இளம் வயது முதலே சுய முயற்சியுடன் செயல்பட்டு ஒரு மேதையாகத் திகழ்ந்தார். 

சுந்தர் பிச்சையைப் போலவே அவரது தந்தையும் ஒரு மின் பொறியாளர். தொழில்நுட்பத் துறையில் சுந்தருக்கு இருந்த ஆர்வம் அதிகரிக்க இவரும் ஒரு காரணம். இந்த ஆர்வம் காரணமாகவே புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஐஐடி கரக்பூர், ஸ்டான்ஃபோர்ட், வார்டன் ஆகியவற்றில் படித்தார். அதுமட்டுமல்லாது கலாச்சார வேறுபாடுகளைக் களைந்தது அவரது மிகப்பெரிய வெற்றியாகும். தனது கடும் உழைப்பால் அவர் தனித்து விளங்கினார். 

சிலிக்கான் வேலியைச் சேர்ந்த சிஇஓ-க்கள் நட்புடன் கலகலப்பாக இருப்பார்கள், மற்றவர்களுடன் எளிதாக பழகுபவர்கள், பெரும்பாலும் முழு அதிகாரம் செலுத்துவார்கள், சில சமயம் மிகவும் கடுமையாகக்கூட நடந்துகொள்வார்கள். இவ்வாறு சிஇஓ-க்களுக்கு தொன்றுதொட்டு ஒரே மாதிரியான குணாதிசயங்கள் இருந்துவந்தது. ஆனால் தொழில்நுட்பம் நுகர்வோரை மையமாகக்கொண்டு மாறிவருவதால் சிலிக்கான் வேலியில் புதிய குணாதியங்களுடன்கூடிய தலைவர்கள் உருவாகத் துவங்கினர்.

ஊபர் நிறுவனத்தில் ட்ரவிஸ் கலானிக் அவர்களுக்குப் பிறகு தாரா கொஸ்ரோஷாஹி சிஇஓ-வாக பொறுப்பேற்றார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஸ்டீவ் பால்மர் அவர்களுக்குப் பிறகு சத்யா நாடெல்லா சிஇஓ-வாக பொறுப்பேற்றார். இவ்வாறு பல தலைமை மாற்றங்களை குறிப்பிடலாம்.

தலைமைப் பதவி வகிக்கும் சிலர் பரிவோடு இருப்பினும் விளைவில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டாலும் பணிவாக நடந்துகொள்வார்கள். இத்தகைய பண்புகளை உடைய தலைவர்களே சிறப்பிக்கத் துவங்கிவிட்டனர் என்பதையே இந்த போக்கு உணர்த்துகிறது. சுந்தர் இத்தகைய குணாதிசயங்களுடன் ஆல்ஃபாபெட், கூகுள் ஆகிய நிறுவனங்களை சிஇஓ-வாக வழிநடத்தி வருகிறார்.

கூகுள் நிறுவனத்தில் சிஇஓ-வாக பொறுப்பேற்றது முதல் சுந்தர்பிச்சை பல்வேறு நேர்காணல்களிலும் முக்கிய உரைகளிலும் பங்கேற்றுள்ளார். பணிச்சூழலில் கடினமான காலகட்டத்தைச் சந்திக்கும் ஒருவர் மனம் தளர்ந்துவிடாத வகையில் உந்துதலளிக்கூடிய சுந்தரின் மேற்கோள்களும், அணுகுமுறையும் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தலைமைப்பொறுப்பில் சமநிலை

அச்சுறுத்துதல்களும் கோபமும் நிறைந்த ஒரு பணிச்சூழலானது எளிதாக கோபமடையாத நேர்மறையான சூழலாக மாறியது. சுந்தர்பிச்சை தலைமைப்பதவியேற்று இவ்வாறு பணிச்சூழலை மாற்றி அனைவரையும் வழிநடத்திய விதம் அவரை வேறுபடுத்திக்காட்டியது.

சுந்தர் பிச்சை சிஇஓ-வாக பதவியேற்பது குறித்து 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வலைபக்கத்தில் லேரி பேஜ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சிறப்பான குழு இயக்கம், அறிவார்ந்த சிந்தனைகள் இவற்றுடன் பலவகையானோரை ஒன்றிணைத்து சுந்தரின் தலைமையின் கீழ் ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அபாரமாக செயல்பட்டது. அதன் ஒரு பகுதியாக கூகுள் க்ரோம், கூகுள் ட்ரைவ், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஆண்ட்ராய்ட் போன்ற மிகவும் பிரபலமான ப்ராடக்டுகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சுந்தரின் தலைமைப்பண்பு அனைவரும் அறிந்த ஒன்றாகும். அத்தகைய பண்பின் அவசியத்தை அவர் எப்போதும் வலியுறுத்துவார். புதிதாக பொறுப்பேற்கும் மேலாளர்களும் தலைவர்களும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன.

”நிறுவனத்தின் அனைத்து நிலையில் இருப்பவர்களுக்கும் சுதந்திரமாக சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் அளிக்கப்படும். பணியை சிறப்பாக செய்துமுடிப்பார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படும்.”

”நம்முடைய தனிப்பட்ட வெற்றியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சிறப்பானவர்களை உடன் வைத்திருந்து அவர்கள் வெற்றியடைய தடையாக இருக்கும் தடங்கல்களை அகற்றவும் நாம் உதவவேண்டும்.”

ஆரோக்கியமான போட்டியையே சுந்தர் எப்போதும் ஊக்குவிப்பார். இது அவர் தலைமை வகிக்கும் விதத்தில் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

உங்களைப் போன்ற அறிவுத்திறனும் கடும் உழைப்பும் வெற்றிகரமான செயல்பாடுகளும் இல்லாதவர்களைக் கண்டு நீங்கள் எளிதாக திருப்தியடைந்து கொள்ளலாம். ஆனால் உங்களைக் காட்டிலும் சிறப்பான அறிவுத்திறன் கொண்டவர்கள் உங்களைச் சுற்றி இருக்கையில் மேலும் கடினமாக உழைக்கவேண்டும் என்கிற உந்துதல் உங்களுக்குப் பிறக்கும்.

”நாம் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்கிற திருப்தியை நம்முள் ஏற்படுத்துபவர்களுடன் இணைந்து பணியாற்றுவதே எப்போதும் சிறந்தது. இது நம் எல்லைகளை விரிவடையச் செய்து தொடர்ந்து கடினமாக உழைக்க உந்துதலளிக்கும்.”

எப்போதும் முகம் நிறைந்த புன்னகையுடன் காட்சியளிக்கும் சுந்தரிடம் காணப்படும் மற்றொரு முக்கிய பண்பு பணிவு. இது அவரது பேச்சிலும் உரையாடலிலும் பிரதிபலிக்கும். இதுவே அவர் தலைமை வகிக்கும் விதத்தில் காணப்படும் தனித்துவமான அம்சமாகும். கூகுளின் மிகவும் வெற்றிகரமான ப்ராடக்டுகளை வழிநடத்தும் சுந்தர் எப்போதும் வெற்றிக்கு முழுக்காரணம் தனது குழுதான் என்பார்.

”குழுவாக ஒற்றுமையாக செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும். குழுவிற்கு தலைமை வகிப்பவரும் குழுவும் வெவ்வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான்.”

தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்

வெற்றியின் ஒரு அங்கம்தான் தோல்வி என்று பல்வேறு தருணங்களில் சுந்தர் குறிப்பிட்டுள்ளார். தோல்வி குறித்த இந்த அணுகுமுறைதான் சிறந்த நிறுவனங்களை மேலும் சிறப்பாக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் வெற்றிபெற்றால் நம்பமுடியாத அளவிற்கு நீங்கள் சிறப்பானவராக இருக்கவேண்டும் அல்லது நீங்கள் உயர்ந்த லட்சியங்களை இலக்காகக்கொள்ளாமல் இருந்திருக்கவேண்டும்.

“நாங்கள் எப்போதும் உயர்ந்த லட்சியங்களை நோக்கியே பயணிக்க விரும்புவோம். அனைத்து முயற்சிகளிலும் வெற்றியடைய மாட்டோம். அப்படி வெற்றியடைந்தால் போதுமான லட்சியங்களை இலக்காகக்கொள்ளவில்லை என்பதே பொருள். எங்களது நோக்கங்களில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்தாலே அதை வெற்றியாக கருதுவோம்.”

இந்தியா மற்றும் சிலிக்கான் வேலியின் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் குறித்து சுந்தர் குறிப்பிடுகையில், 

“தோல்வி என்பது தொழில்முனைவில் ஒரு இன்றியமையாத அம்சமாகும். ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்களது பயணங்களில் சந்திக்கும் தோல்விகள் வாயிலாகவே கற்றுக்கொள்வதால் அவர்கள் தோல்வியை கொண்டாடவேண்டும்,” என்கிறார்.

ஒரு முயற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகளை கணித்து அவற்றை அணுகுவது குறித்தும் தோல்விகளை அணுகும் முறை குறித்தும் பள்ளிப் பருவம் முதலே குழந்தைகளுக்கு படிப்படியாக அறிவுறுத்தவேண்டும். பெரும்பாலான கல்வி முறைகள் இவற்றை ஊக்குவிப்பதில்லை. இதனால் குழந்தைகள் வளர்ந்த பிறகும் ஆபத்துகளையும் தோல்விகளையும் எதிர்கொள்ள அஞ்சுகின்றனர்.

”கல்வி முறையானது படைப்பாற்றல், ப்ராஜெக்ட் சார்ந்த செயல்பாடுகள், அனுபவம் வாயிலான கற்றல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். மாணவர்கள் ஆபத்துகளை துணிந்து எதிர்கொள்ள நாம் கற்றுக்கொடுக்கவேண்டும். மாறாக தண்டிக்கக்கூடாது.”

கூகுளின் சிறப்பு முயற்சிகளுக்கான முன்னாள் தலைவர் கிரிஸ்டோஃபர் சக்கா கூறுகையில், “அவருக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். இருந்தும் அவர் பாரபட்சமின்றி செயல்படுவார். அதே சமயம் மற்றவர்களும் அவரது நண்பர்களாக இருப்பினும் தங்களது பொறுப்புகளை நன்குணர்ந்து செயல்படுவார்கள். தங்களை மேற்பார்வையிடுகிறார்கள் என்கிற அச்சம் சிறிதும் இன்றி சுதந்திரமாக துணிந்து செயல்படுவார்கள்.”

கடுமையான உழைப்பு, நேர்மையான குணம், அறிவாற்றல், சிறப்பான தலைமைப் பண்பு ஆகியவற்றைக் கொண்டே சிறப்புற்ற ஒரு அரிய தலைவர் என்று சுந்தர்பிச்சையை கிரிஸ்டோஃபர் விவரிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : தமன்னா மிஷ்ரா