சுசரிதா ஈஸ்வரின் 'வீ கனெக்ட்' பன்முகத்தன்மைக்கான வேர்கள்

0

ஒரு கண்ணாடி பாத்திரத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது, அதை போட்டு உடைப்பது இரண்டுமே பெண்கள் கையில் தான் இருக்கிறது. "நம்மை சார்ந்தே பல்வேறு விஷயங்களும் உள்ளன. நமக்கு நம்பிக்கையும், உறுதியும் தேவை, அதை ஒரு அடி முன் எடுத்து வைத்தால், அனைத்தையும் செய்ய முடியும்", விலைமதிக்க முடியாத இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் சுசரிதா ஈஸ்வர். அவர் தன் சொந்த முயற்சியில் தன் வாழ்வை நடத்திவருகிறார்.

இந்த சுற்றுலா விரும்பி மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆழ்கடல் டைவர் விளம்பரத்துறையிலும் பணியாற்றியதோடு, இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடங்கியுள்ளார். அதே போன்று நாஸ்காமில் தன்னுடைய பயிற்சி காலத்தின் போது பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் செய்துள்ளார்.

சுசரிதாவின் வாழ்க்கை பற்றியும், வீ கனெக்ட் இன்டர்நேஷனல் பற்றியும் ஹர்ஸ்டோரிஅவருடன் உரையாடியது

வீ கனெக்ட் இன்டர்நேஷனல்

சுசரிதா தற்போது, 'வீ கனெக்ட் இன்டர்நேஷனலின்' இந்தியப் பரிவுத் தலைவராக இருக்கிறார்; அது வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பு சுயதொழில் செய்யும் பெண் தொழில் நிறுவனங்களை சர்வதேச மதிப்புச் சங்கிலியோடு இணைக்கும் பணியை செய்து வருகிறது. சுசரிதா 2011ன் முடிவில் இதில் சேர்ந்தார்.

வீ கனெக்ட் இன்டர்நேஷனல் சுயதொழில் செய்யும் பெண்களோடு இணைந்து பணியாற்றுகிறது. இந்தத் தொழில்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்களுக்கு குறைந்தபட்சமாக 51% பங்குகள் இருக்க வேண்டும். பெண்களே பிரதானமானவர்கள், அவர்கள் தான் முக்கிய முடிவு எடுப்பவர்களாக இருப்பர். வீ கனெக்ட் அவர்களுக்கு பெண் சுயதொழில் செய்பவர்கள் என சான்றிதழ் அளிப்பதோடு அவர்களை வீ கனெக்ட்டின் கார்ப்பரேட் உறுப்பினர்களோடு இணைக்கும். தற்சமயம் அவர்களிடம் 500 வளமான நிறுவனங்களில் 65 உள்ளது. இவை அனைத்தும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், இவர்கள் அனைவரும் வீ கனெக்ட்டின் உறுப்பினர்கள். இந்த உறுப்பினர்கள் செலுத்தும் சந்தாக் கட்டணம் வீ கனெக்ட் டேட்டாபேஸ் பெறுவதற்கும் சுயதொழில் செய்யும் பெண்களை இணைப்பதற்கும் உதவுகிறது.

வாழ்க்கை வரைபடம்

சுசரிதா தன்னுடைய குழந்தைப்பருவதத்தை ஷில்லாங், மேகாலயா மற்றும் கொல்கத்தாவில் கழித்தார், அவர் அங்கு தான் பிறந்தார். அவர் தன்னுடைய படிப்பை கொல்கத்தாவில் முடித்தார், அவருடைய தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதால் மீண்டும் நகரத்திற்கு மாறுதல் கிடைத்துவிட்டது.

சுசரிதா ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டமும், முதுநிலை பட்டப்படிப்பாக டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷனை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். அவர் தனது வாழ்க்கையை விளம்பரப் பிரிவில் இருந்து தொடங்கினார். அந்தத் துறையில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தததால் சுசரிதாவால் தன் மகளோடு நேரம் செலவிட முடியவில்லை, இதுவே அவரது வாழ்க்கை பயணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. லாப நோக்கு இல்லாத இரண்டு மீடியா அமைப்புகள் மத்யம் மற்றும் வாய்சஸ்-ஐ அவர் உருவாக்கினார்.

“திருமணத்தை உதறிவிட்டு ஒற்றை தாயாக நின்று என் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என ஒரு காலகட்டத்தில் முடிவெடுத்தேன். அதற்காக நான் நிறைய வருமானம் ஈட்ட வேண்டும், என் குழந்தைகளை வளர்க்க அது மிகவும் அவசியம். அதனாலேயே நான் என் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக என்னுடைய பணியில் மாற்றம் செய்ய நேரிட்டது, மீண்டும் நான் கார்ப்பரேட் துறைக்கே திரும்பினேன். இது நடந்தது 2000ல், அப்போது தான் தகவல் தொழில்நுட்பத்துறை நன்கு வளர்ந்து வந்தது. அதனால் நான் ஒரு ஐடிஸ்டார்ட் அப்பில் இணைந்தேன்,” என்று சொல்கிறார் சுசரிதா.

2006ல், அவர் நாஸ்காமில் சேர்ந்தார், அங்கு அவர் இந்தியாவின் ஐடி மற்றும் பீபிஓ துறைக்கு மூன்று சிறப்பு புதிய முயற்சிகளுக்கு தலைமை வகித்தார்: நாஸ்காமின் பொருள் முனைப்பு, நாஸ்காமின் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய புதுமுயற்சி , நாஸ்காமின் அறிவுரை வழங்கும் திட்டம்.

பெண்களும் மாற்றமும்

பெண் தொழில்முனைவோருடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளார்.

“இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் சுயமாக தொழில் தொடங்க முன்வருவதை நான் பார்க்கிறேன், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை அப்படி இல்லை.”

பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண்களும் கூட, இப்போது சொந்தத் தொழில் தொடங்குவதை விரும்பித் தேர்வு செய்கிறார்கள் என்பது அவரின் கருத்து.

நிறைய பெண்கள், இல்லற வாழ்வை தொடங்கும் போது சிறிது இடைவெளி எடுப்பார்கள், ஆனால் அவர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள், ஏனெனில் பணிக்கு சென்றால் அதிக நேரம் அதிலேயே செலவிட வேண்டும் என்ற ஐயம். “அதனால் தொழில்முனைவை ஒரு நல்ல தேர்வாக அவர்கள் நினைக்கிறார்கள், இது அவர்களுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும். அவர்களுக்கு தேவை இருக்கும்போது வீட்டிலேயோ அல்லது குழந்தைகளோடோ இருக்க உதவுவதோடு, தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்தில் பணியாற்ற தொழில்முனைவு வாய்ப்பை வழங்குகிறது. இது மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமாக நான் பார்க்கிறேன்,” என்கிறார் சுசரிதா.

ஊக்கத்தோடு இருத்தல்

தொழில்முனைவர்களிடம் மாற்றத்தை ஏற்படத்துவதும், அவர்களுக்கு சிறு வழிகாட்டுவதும் அவர்களை தொழில் தொடங்க உந்தித் தள்ளும், இதுவே என்னை தினந்தோறம் செயல்பட வைக்கிறது, என்று புன்னகையோடு கூறுகிறார் சுசரிதா. “உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பெண் என்னிடம் வந்து தான் இயற்கை உடைகள் தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார், ஆனால் அது பற்றி அவருக்கு எந்த திட்டமும் இல்லை. நான் அவரோடு அமர்ந்து இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வெவ்வேறு பெண் தொழில்முனைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இன்று அவர் குழந்தைகளுக்கான இயற்கை உடைகளை விற்கும் இணையவழி வர்த்தகம் செய்து வருகிறார். இந்த ஆடைகள் தாய்மாருக்கு மிகவும் பிடித்தமானது, ஏனெனில் அவர்கள் எப்போதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதையே விரும்புவார்கள்,” என்கிறார் சுசரிதா.

பெண்களுக்கு அவர் கூறும் ஓரு முக்கிய ஆலோசனை,

“பெண்களுக்கு நம்பிக்கை வேண்டும், வெளிஉலகில் ஒரு அடி முன் எடுத்து வைக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் தங்களை சுற்றி இருக்கும் மக்களையும் தங்களுக்கு ஆதரவாக, உறுதணையாக இருப்பவர்களையும் கண்டறிய முடியும்.”

கட்டுரை: தன்வி துபே | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்