#MeToo ஒரு மேட்டிமைவாத இயக்கம் என்று சொல்லிவிட முடியுமா...?

0

கேரளாவில் இருக்கும் என்னுடைய கிராமத்தில், ஒவ்வொரு முறை என் வீட்டை சுத்தம் செய்யத் திறக்கும் போது, எனக்கு உதவ வருவது கல்யாணியும், லஷ்மிகுட்டியும் தான். இருவருமே தங்கள் ஐம்பதுகளில் இருப்பவர்கள், பாட்டிகள், தங்கள் குடும்பங்களுக்கு பொருளாதார உதவி அளிக்க பக்கத்து வயல்களில் தினசரி வேலை செய்பவர்கள்.

இவர்கள் படித்தவர்கள் தான். மலையாள பத்திரிக்கையான மாத்ரூபூமியை எனக்கு சத்தமாக படித்துக் காட்டுவார்கள். இந்த வாசிப்பு என்னவோ ’படிப்பறிந்த’ கேரளாவில் கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.

ஆனால், அவர்களுடைய வீராப்பும், படிப்பறிவும், அவர்கள் வேலை துவங்கும் இடத்தில் முடிந்துவிடுகிறது. அவர்கள் செய்யும் வேலையையே செய்யும் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் நேரத்தில், இவர்களுக்கு வெறும் அறுநூற்று ஐம்பது ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆண்கள் இவர்களை முறை தவறிய வார்த்தைகள் சொல்வதும் உண்டு. இதை எல்லாம் எப்படி கடக்கிறீர்கள் எனக் கேட்ட போது, 

“நாங்களும் நல்லா திருப்பிப் பேசுவோம். இதையெல்லாம் பேச எங்களுக்கென யூனியன் கிடையாது. எப்போதுமே, நாங்கள் தான் எங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என வாயில் வெற்றிலைச்சாறு வடிய சொல்கிறார் லஷ்மிகுட்டி.

அவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்து கொண்டே என்னிடம் நிறைய கதைகளை சொல்கிறார்கள் - எந்த புகார் கமிட்டிக்களும் கேட்க வாய்ப்பில்லாத கதைகள். எந்த #MeToo பிரச்சாரமும் அவர்களுக்காக ஆயுதம் ஏந்தாது.

#MeToo இயக்கம் வேகம் எடுக்கத் தொடங்கிய போதிலிருந்தே, அது நகர்ப்புற மக்களுக்கான மேட்டிமைவாத பிரச்சாரம் என்று சொல்லப்படுகிறது. தாராளவாத-மேட்டுக்குடி மக்களுக்கென இருக்கும் சலுகைகளை #MeToo இயக்கம் அறியாமல் இருக்கிறது என பலரும் விவாதிக்கிறார்கள்

ஆளுங்கட்சியான பாஜகவின் சித்தாந்தங்களுக்கு ஒத்துப் போகும் சித்தாந்தங்களோடு இருக்கும் ஆர்.எஸ்.எஸ், அதன் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கையில், “சாதாரண பெண்கள், சாதாரண ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாவதெல்லாம் #MeToo பிரச்சாரத்தில் வராது” என்று சொல்லியிருக்கிறது.

“குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் புகழ்பெற்ற நபர்களாக இருந்தால் மட்டும் தான் குரல்கள் எழுப்பப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான தவறான நடத்தை முறை பொதுவான டிரெண்ட் ஆக வளர்வதையும், அடுத்த பாலினத்தை அணுகும் முறையில் இருக்கும் குறையையும் சுட்டிக்காட்டும் வரை, #MeToo ஒரு மேட்டிமைவாத பிரச்சாரமாகவே இருக்கும்,” என எழுதப்பட்டிருக்கிறது.

ட்விட்டரில் நடந்த வார்த்தை போரில் மூத்த ஊடகவியலாளர் பர்க்கா தத் மற்றும் தவ்லீன் சிங் #MeToo குறித்தும், அதற்கான ஒலிக்கும் குரல்கள் குறித்தும் விவாதித்தார்கள். பரவலாக பகிரப்பட்ட வீடியோ ஒன்றில்,

“#MeToo என்பது பொருளாதார உரிமைகளுக்கானது.. பெண்கள் பொருளாதார ரீதியாக பிறரை சாராமல் இருப்பது தான் பெண்ணியத்தின் அடிப்படை. நீங்கள் எப்படி இதை மேட்டிமைவாத பிரச்சாரம் என்று சொல்கிறீர்கள்?” என்று பர்க்கா கேட்டார்.

தவ்லீன் சிங், தி இண்டியன் எக்ஸ்பிரஸில் தான் எழுதிய பத்தியில் இதற்கான பதிலை எழுதியிருந்தார்.

“அமெரிக்க யதார்த்தங்கள் வித்தியாசமானவை. ஒருவேளை நிஜமாகவே #MeToo இயக்கம் அங்கு ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இந்தியாவில் பலவீனமான, குரலற்ற பெண்களுக்கு எதிராக தினசரி செய்யப்பட்டும் குற்றங்களை எல்லாம் எதிர்க்க நமக்கொரு இயக்கம் தேவை. அது இது இல்லை,” என எழுதியிருந்தார்.

இதற்கென்ன அர்த்தம்? குரல்கள் என்று வரும் போது, அவற்றுக்குள் வேற்றுமை இருக்கிறதெனவா? உயரத்தில் இருந்து பார்க்கும் போது லஷ்மிகுட்டி, கல்யாணியின் குரல்கள் இந்த பிரச்சினையோடு தொடர்பே இல்லாதவையாக தெரிகிறதா? கஸாலா, சந்தியா, ப்ரியா மற்றும் பிறரின் குரல்களும்? அல்லது இதற்கு நேர் எதிராக நடக்கிறதா?

எந்த பெணுடைய ஒடுக்கப்பட்ட கதையோ, பாலியல் வன்புறுத்தலுக்கு ஆளான கதையோ நிராகரிக்கப்படக்கூடாது.

இங்கே தான் நாம் முக்கியமான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக, பாலினங்களில் இருந்து உதிக்கும் பிரச்சினைகள் மேல் தான் பெண்ணியம் கவனம் செலுத்தியிருக்கிறது. தற்போது மற்ற பிரச்சினைகளையும் நாம் ஏன் நிராகரிக்கக் கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

#MeToo மாதிரியான பெண்ணிய இயக்கங்கள் இங்கிருக்கும் இண்டர்செக்‌ஷனாலிட்டி (intersectionality) -யை கவனிக்க வேண்டும். பெண்கள் பாலினம் மற்றும் அல்லாமல், பிற காரணிகளாலும் ஒடுக்கப்படுகின்றனர். இனம், வர்க்கம், சாதி, பாலின அடையாளம், பாலியல் நோக்குநிலை, மதம், பிற அடையாளங்கள் என பலவற்றாலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

கிராமப்புறங்களில் குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் செய்வதை, அலுவலகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால் #MeTooUrban மற்றும் #MeTooRural என்று தனித்தனியே இல்லை. எல்லா கதைகளுமே முக்கியமானவை, எல்லா கதைகளுமே நடவடிக்கை எதிர்பார்ப்பவை.

ஒருவர் சலுகைகளோடும், உறுதியான குரலோடும் இருக்கிறார் என்பதற்காகவே அவருடைய கதையை நாம் நிராகரிக்க முடியாது. ஆனால், உங்கள் சலுகைகளோடு, பொதுவெளியில் பேச முடியாத ஒடுக்கப்பட்ட பெண்களின் கதைகளை நீங்கள் வெளிக்கொண்டு வரலாம். அவர்களுக்கு ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் அறிமுகம் இல்லை என்றால் என்ன? அவர்களுடைய பிரச்சினைகளை பெண்கள் சார்ந்த அமைப்புகளுக்கும், கிராம பஞ்சாயத்துக்களுக்கும் கொண்டு செல்லுங்கள்.

ஒற்றுமையே பலம். ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணுக்கு எதிரியாக உருவகிக்கும் ஆணாதிக்க மனோபாவத்திற்கு நாம் இரையாக வேண்டாம். மேலும், பாலினத்தின் அடிப்படையிலான துன்புறுத்தல்கள் எல்லாம் ‘நகர’ கதைகள் எனவும், ‘கிராம’ கதைகள் எனவும் தனித்தனியே இல்லை. உலகம் முழுதும் இது நடக்கிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட கதைகளை விட ஆழமான வேர்கள் உடையதாக இருக்கிறது. #MeToo இயக்கம் வெறும் தொடக்கம் மட்டும் தான்.

இதை மேட்டிமைவாத இயக்கம் என்று சொல்வதனால், என்ன தான் சலுகைகள் இருந்தாலும் பெண்ணின வெறுப்பு, ஆணாதிக்க மனோபாவம் ஓங்கியிருக்கும் சமுகத்தின் பிடிகளில் இருந்து தப்ப முடியாத பல பெண்கள் அனுபவித்த வலியையும், அதிர்ச்சியையும் நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். நாம் இதை சரியான திசையில் எடுத்து வைக்கும் முதல் அடி என பார்ப்போம். உலகம் முழுதும் இருக்கும் பெண்கள் அத்தனை பேரையும் வலிமையாக்கும் ஒரு அடியாக பார்ப்போம். 

இதனால் அடுத்த தலைமுறை பெண்களின் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் என நம்புவோம்.

நிறைய கதைகள் சொல்லப்படுவதையும், பெண்களின் உரிமைகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தப்படுவதையும் உறுதி செய்யும் முதல் அடியாக #MeToo இருக்கட்டும். ஏனெனில், நாம் இதில் இணைந்தே நிற்கிறோம். 

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்னேஹா

Related Stories

Stories by YS TEAM TAMIL