கனவு நிறுவனம் ’சமோசா சிங்’ தொடங்க தங்களின் சொந்த வீட்டை விற்ற தம்பதி!

1

ஏப்ரல் மாதம் 2016-ம் ஆண்டு நிதி மற்றும் ஷிக்கர் சிங் தங்களது இரவை முதல் முறையாக பெங்களூருவின் புறநகர் பகுதியான யெலஹங்காவில் தங்களது சொந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கழித்தனர். மறுநாளே தங்களது ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்வதற்காக அந்த குடியிருப்பை விற்றுவிட்டனர்.

இப்படிப்பட்ட ஒரு மனவேதனையளிக்கும் சூழலை பல தொழில்முனவோர் தங்களது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும். நிதி மற்றும் ஷிக்கர் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் WorknStove Foodworks Pvt Ltd என்கிற வென்சரைத் துவங்கி ‘சமோசா சிங்’ என்கிற ப்ராண்டின்கீழ் புதுமையான சமோசாக்களை விற்பனை செய்யத் துவங்கினர். கார்ப்பரேட் ஆர்டர்களை பூர்த்தி செய்வதற்காக ஒரு பெரிய இயந்திரமயமாக்கப்பட்ட சமையலறை தேவைப்பட்டது. இந்த காரணத்திற்காக அவர்கள் தங்களது குடியிருப்பை விற்பனை செய்ய தீர்மானித்தனர்.

"எங்களது சொந்த பயன்பாட்டிற்காகவே குடியிருப்பை வாங்கினோம். அந்த குடியிருப்பை விற்றுவிட்டு அந்த பணத்தை எங்களது தொழிலில் முதலீடு செய்தாலும் ஒரு விதத்தில் குடியிருப்பை பயன்படுத்தியதாகக்தான் பொருள்படும். எனவே எங்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. புதிய உரிமையாளர் கிரஹப்பிரவேச விழாவிற்கு என்னை அழைத்தனர். ஆனால் என்னால் அந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை,” என்றார் 32 வயதான நிதி.

இந்த இளம் தம்பதி பெங்களூருவின் ஐடி மையமான எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள அவர்களது QSR அவுட்லெட்டில் என்னை வரவேற்றனர். ஸ்பெஷல் சமோசாக்கள் மற்றும் இஞ்சி டீயுடன் அவர்களது கதையை பகிர்ந்துகொண்டனர்.


விதை விதைக்கப்பட்டது

இவர்கள் வெற்றியடைவதற்கு முன்னால் அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றை புரிந்துகொள்ளவேண்டும். நிதியும் ஷிக்கரும் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி படிக்கும்போது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். நிதி தனக்கு பயோடெக்கைக் காட்டிலும் மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவில் ஆர்வம் இருந்ததை உணர்ந்தார். இதனால் 2007-ம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு அமெரிக்க ஃபார்மா நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வணிக மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டார். ஷிக்கருக்கு பயோடெக்கில் ஆர்வம் இருந்ததால் ஹைதராபாத் சென்று ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸில் முதுகலை பட்டம் பயின்றார். இங்குதான் இந்திய ஸ்நாக்ஸ் பகுதியில் சுகாதாரமான, துரித உணவு போன்ற மாதிரி எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார். அனைத்து துரித உணவு ரெஸ்டாரண்டுகளிலும் பீட்சா, பர்கர் போன்றவை கிடைக்கும். இந்திய பலகார வகை திண்பண்டங்களுக்கு சாலைகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களையே வாடிக்கையாளர்கள் அணுகுகிறார்கள்.

சமோசா விற்பனை செய்யும் ஒரு சிறிய கடையை துவங்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். அப்போதுதான் இந்த திட்டத்திற்கான விதை அப்போதுதான் அவர்களது மனதில் தோன்றியது.

ஷிக்கர் 2009-ம் ஆண்டு பயோகான் நிறுவனத்தில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நிதி பணி நிமித்தமாக உலகமெங்கும் சுற்றித் திரிந்தார். ஷிக்கர் பயோகான் லேப்பிலேயெ திருப்தியாக பணியாற்றினார். ஆனால் வீட்டில் சமோசாக்கள் குறித்தும் சமோசா விற்பனை சார்ந்த வணிகம் குறித்தும் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருந்தது. மெல்ல மெல்ல இந்த திட்டத்திற்கான வேர் வலுவடைந்து வடிவம் பெறத்துவங்கியது. வணிக திட்டம் மெருகேகிக்கொண்டே இருந்தது. சுகாதாரமான சமோசாக்களை வழங்கினால் மட்டும் போதாது தயாரிப்பு புதுமையாகவும் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டனர்.

இங்குதான் நான் குறுக்கிட்டேன். ஏன் சமோசாக்களை தேர்ந்தெடுத்தீர்கள்?

"நம் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். ஆனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சமோசாக்கள் கிடைக்கும். இந்தியாவிலுள்ள அனைவருக்கும் சமோசா என்றால் என்ன என்று தெரியும். நீங்கள் அவர்களுக்கு விவரிக்கவேண்டிய அவசியமில்லை,” என்றார் ஷிக்கர்.

இறுதியாக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு வணிக திட்டத்தை உருவாக்கி அவர்களது பங்குகளையும் தீர்மானித்தனர். 2015-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி ஷிக்கர் ஸ்டார்ட் அப் துவங்க நிதியை சம்மதிக்கவைத்தார். அவர் அன்றைய தினமே தனது பணியைத் துறந்தார்.

அடுத்தகட்ட வளர்ச்சி

நிதி தனது நிறுவனத்தில் அனுமதி பெற்று வீட்டிலிருந்தே பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்துகொண்டார். ஒரு சிறிய சமையலறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டனர். சில சமையல்காரர்களை பணியிலமர்த்தினர். R & D-யில் ஈடுபட்டனர். நான்கு மாதங்கள் ஷிக்கர் சமோசாவினுள் வைக்கும் கலவையில் விதவிதமான புதுமைகளை புகுத்தினார். சமையல்காரர்கள் பல பேட்ச் சமோசாக்களை தயாரித்தனர்.

பல்வேறு சுவாரஸ்யமான தனித்துவமான மணங்களில் வழங்கலாம் என்றும் சமோசாக்களை பேக் செய்யாமல் பொறிக்கவேண்டும் என்றும் பிசுபிசுப்புடன் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றும் தீர்மானித்தனர். இவற்றை செயல்படுத்துவது கடினமாக இருப்பதுடன் ஷிக்கரின் ஒட்டுமொத்த பயோடெக் அனுபவமும் தேவைப்பட்டது.

குறைவான எண்ணெயை உறிஞ்சும் விதத்தில் ஒரு தனித்துவமான மாவு கலவையுடன் தயாரிக்கப்படும். பாரம்பரிய சமோசாக்களின் வடிவத்தைக் காட்டிலும் மாறுபட்ட வடிவத்தில் இருக்கும். இந்த இரண்டு விஷயங்களிலும் கவனம் செலுத்தினர்.


எண்ணெயை உறிஞ்சாமல் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் அதன் வடிவம் இருக்கும் என்கிறார் ஷிக்கர். நான் சமோசாக்களை சாப்பிடும்போது என் கையில் எண்ணெய் ஒட்டாது.

சமோக்குள் நிரப்பும் கலவையில் சிக்கன் மக்கானி, கடாய் பன்னீர், சாக்லேட் என பல வகைகளை குழுவினர் முன்வைத்தனர்.

இந்த பெயரை எப்படி தீர்மானித்தனர்? ஒரு நாள் ஷிக்கர் இந்த பெயரை சொல்லும்போது நிதி சிரித்தார். அவ்வளவுதான். இந்த பெயரையே வைத்துவிட்டனர்.

சந்தையில் சில சுற்று சோதனைகள் முடிந்தபிறகு ஃபிப்ரவரி மாதம் நிதியும் ஷிக்கரும் எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு சிறிய QSR அவுட்லெட்டை திறந்தனர். நிதி பில் கவுண்டரை கவனித்துக்கொண்டார். சிறிய சமையலறையில் தயாரிக்கப்பட்டு அவுட்லெட்டிற்கு அனுப்பப்பட்ட சமோசாக்களை உதவியாளர்கள் சிலரைக் கொண்டு ஷிக்கர் பொறித்தெடுத்து வீடுகளில் டெலிவர் செய்தார். மும்முரமாக துவங்கிய வணிகம் இரண்டு மாதங்களில் நாள் ஒன்றுக்கு 500 சமோசாக்கள் வரை ஆர்டர் அதிகரித்தது. விலை குறைவாகவே இருந்தது. இரண்டு துண்டுகள் அடங்கிய ஒரு ப்ளேட் உருளைக்கிழங்கு சமோசா 20 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு ப்ளேட் சிக்கன் மக்கானி சமோசாக்கள் 55 ரூபாய்க்கு கிடைக்கும்.

நிதியின் மார்க்கெட்டிங் பின்னணியைக் கொண்டு இவர்கள் இருவரும் கார்ப்பரேட்களை அணுக திட்டமிட்டனர். பல முயற்சிக்குப் பின்னர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துடன் சந்திப்பு ஏற்பாடானது. ஒரு ஜெர்மன் பொறியியல் நிறுவனம் ஒரு நாளைக்கு 8,000 சமோசாக்களை டெலிவர் செய்ய முடியுமா என்று கேட்டனர். நிதியும் ஷிக்கரும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு பதிலளிப்பதாக தெரிவித்தனர். அப்போதுதான் அவர்கள் பெரிய சமையலறையை அமைப்பதற்காக தங்களது குடியிருப்பை விற்பனை செய்தனர்.

சமையலறை தயாரானதும் இந்த தம்பதி அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்குச் சென்றனர். இவர்கள் 8,000 சமோசாக்களை தயாரித்து வழங்க ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்தனர்.

திரும்ப திட்டமிடத் துவங்கினர். ஒரே நாளில் 8,000 சமோசாக்களை தயாரிப்பது சாத்தியமற்றது. சுவையில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. R & D-க்காக இரண்டு நாட்கள் செலவிட்டனர். சமோசா தயாரிப்பு செயல்முறையை பிரித்து அது அதிக நாள் கெடாமல் இருக்கும் வகையில் புதுமையை புகுத்தி குறிப்பிட்ட தேதியில் காலை 8 மணிக்கு சமோசாக்கள் தயாராக இருந்தது. அந்த முதல் மிகப்பெரிய ஆர்டர் சமோசா சிங் சிறப்பிக்க உதவியது.

தயாரிப்பு எளிதில் உடையக்கூடியதாக இருப்பது வணிகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. ஷிக்கர் மற்றும் அவரது சமையல்காரர்களும் உணவை பாதுகாக்கும் பொருட்களை சேர்க்காமல் வெளிப்பகுதியும் உள்ளே நிரப்பும் கலவையும் ஃப்ரெஷ்ஷாக இருப்பதையும் இறுதியாக பொறித்தெடுக்கையில் மொறுமொறுப்பாக இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில் தயாரிப்பில் புதுமையை புகுத்தினர். ப்ளாஸ்ட் ஃப்ரீசிங் முறையுடன் பொறித்தெடுக்கப்படாத தயாரிப்பு ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். அதே சமயம் உணவை பாதுகாக்கும் பொருட்கள் எதுவும் தயாரிப்பில் சேர்க்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

”எங்களது பலவீனத்தையே பலமாக மாற்றினோம்,” என்றார் ஷிக்கர்.

அதிக வலிமையான வளர்ச்சி

சமோசா சிங் விரிவடைய QSR அல்லது சொந்த அவுட்லெட் முறையை பின்பற்றாது என நிதி மற்றும் ஷிக்கார் தீர்மானித்தனர். INOX, PVR, Café Coffee Day, TCS போன்ற க்ளையண்டுகளை தேர்ந்தெடுத்தனர். INOX மற்றும் PVR-ல் சமோசா சிங் தனது சொந்த ப்ராண்டின் சார்பாக சிறிய கடையை அமைத்தனர். பெங்களூருவில் மொத்தம் ஏழு அவுட்லெட்களைக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

கார்ப்பரேட்களுடன் இணைவதற்கு சமோசா சிங் சிஓஓ-வான நிதி ஒரு வார கால சமோசா ஃபெஸ்டை நடத்தினார்.

”இது எங்களுக்கு வருவாயை ஈட்டித்தந்தது. கார்ப்பரேட் ஊழியர்களிடையே நம்பிக்கையை உருவாக்கினோம். அவர்கள் தங்களது மனித வளத் துறையிடம் எங்களையே நிரந்தரமாக இணைத்துக்கொள்ள பரிந்துரைத்தனர். எங்களது சமோசா ஃபெஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்ட போது அதில் முயற்சித்துவிட்டு ஊழியர்கள் பாராட்டியதால்தான் பல பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.”

பல ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கிறது ஆனால் விரிவடைய பெரிய தானியங்கி வசதி கொண்ட இயந்திரமயமான சமையலறை தேவை என்பதை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த தம்பதி உணர்ந்தனர். பல நகரங்களில் செயல்படவேண்டும் என்பதையும் இதற்காக நிதியுதவி பெற இதுவே சரியான நேரம் என்பதையும் உணர்ந்தனர்.

”கன்வால்ஜித் சிங் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறார் என்பதை ஷிக்கர் கேள்விப்பட்டார். அவரை சந்திக்கவேண்டும் என்று ஷிக்கர் சொன்னார்,” என்று நிதி நினைவுகூர்ந்தார்.

இதைச் சொல்வது எளிது ஆனால் செயல்படுத்துவது கடினம். ஏனெனில் 2015-ம் ஆண்டு தனது சொந்த வென்சர் முதலீடு நிதியான Fireside துவங்கிய ஹெலியான் வென்சர் பார்ட்னர்ஸ் முன்னாள் மூத்த நிர்வாக இயக்குனரான கன்வால்ஜித் சிங்கிடம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு நபர் யாரையும் இவருக்குத் தெரியாது. நிதிக்கு ஒரு தொலைபேசி எண் கிடைத்தது. அது அவரது வீட்டு தொலைபேசி எண். அவரை தொலைபேசியில் அணுக முடியாததால் அவரது வீட்டிற்கு முன்பு தொடர்ந்து இரண்டு நாட்கள் காத்திருந்தார் நிதி. அந்த முயற்சியும் தோல்வியுற்றது. அவரை சந்திக்க இயலவில்லை. இறுதியாக ஒரு வார இறுதி நாளில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படாத தொகையை நிதியாக பெற்றனர்.

சமோசா சிங் தற்போது ஒரு நாளைக்கு 10,000 சமோசாக்கள் ஆர்டர் அளவை எளிதாக பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு பெரிய தானியங்கி சமையலறையுடன் செயல்படுகிறது.

"சமோசா சிங்கில் நான் முதலீடு செய்ய அதன் நிறுவனர்களே காரணம். அதிக உற்சாகத்துடனும் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் இந்திய பாரம்பரியத்தை கிட்டத்தட்ட நவீன வெர்ஷனில் சோதனைகளைக் கடந்து உருவாக்கியுள்ளனர். இது என்னை மிகவும் கவர்ந்தது. ஆரம்ப நிலையிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். நாங்களும் விரைவாக இணைந்துகொண்டு மதிப்பை வழங்கி, ப்ராண்டை உருவாக்க உதவி, B2B இணைப்புகளை உருவாக்கித் தர விரும்பினோம்,” என்றார் கன்வால்ஜித். இவர் சமோசா சிங்கில் முதலீடு செய்யும்வரை பல ஆண்டுகளாக சமோசா சாப்பிடவில்லை. “நான் இன்னும் இவர்களது உருளைக்கிழங்கு சமோசாவை ருசி பார்க்கவில்லை. அவர்களது அருமையான வகைகளுக்கு நான் ரசிகன். சிக்கன் மற்றும் சாக்லேட் சமோசாக்கள் எனக்கு பிடிக்கும்.”


விரிவடைதல்

சமோசா சிங் செயல்பாட்டு ரீதியாக லாபகரமாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக லாபகரமாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஷிக்கர். இந்நிறுவனத்தின் வருவாய் ரன் ரேட் 5 கோடியாக இருப்பதாகவும் கையிருப்பு மற்றும் வரவிருக்கும் ஆர்டர்களுடன் இந்த நிதியாண்டு நிறைவடைவதற்குள் 8 கோடி ரூபாய் வருவாயை ஈட்டிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் சிஇஓ ஷிக்கர். அடுத்த வருடம் பெங்களூருவில் மட்டும் ஒரு நாளைக்கு 50,000 சமோசாக்களை இலக்காகக் கொண்டுள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் பொழுதுபோக்கு அவுட்லெட்டுடனான ஒப்பந்தம் வாயிலாக பல்வேறு நகரங்களில் செயல்பட உள்ளது. இதற்கான சோதனை முயற்சி ஹைதராபாத் மற்றும் பூனேவில் நடத்தப்படும். அவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் க்ளையண்டின் பெயரை ஷிக்கரால் வெளியிட முடியவில்லை.

தயாரிப்பு மையத்தை பெங்களூருவிலேயே வைத்துக்கொள்ளலாம் என்றும் குளிரூட்டப்பட்டு உறைந்த தயாரிப்புகளை கோல்ட் செயின் பார்ட்னர்கள் வாயிலாக மற்ற நகரங்களுக்கு அனுப்ப நிறுவனர்கள் தீர்மானித்துள்ளனர். சமோசா சிங்கால் பணியிலமர்த்தப்பட்டு பயிற்சியளிக்கப்ப்ட்ட ஊழியர்களால் க்ளையண்ட் இடத்தில் சமோசாக்கள் பொறித்தெடுக்கப்படும்.

”தரத்தையும் அனுபவத்தையும் இயன்றவரை கட்டுப்படுத்த விரும்புகிறோம்,” என்றார் நிதி.

அடுத்ததாக 2018-ம் ஆண்டில் குளிரூட்டப்பட்டு உறைந்த சமோசா வகைகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். புதுமைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது உருளைக்கிழங்கு சமோசாக்களில் இவர்களது ப்ராண்ட் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வறுத்த உணவுப் பொருட்களில் இவர்கள்தான் ப்ராண்ட் பெயருடன் விற்பனை செய்யும் முதல் நிறுவனம் என்கிறார் ஷிக்கர்.

முக்கோண ப்ராண்ட் லோகோவிற்கு ஏற்றவாறு ஒரு முக்கோண வடிவ ஹாட் கேஸை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது சமோசாக்களை மணிக்ககணக்கில் ஃப்ரெஷ்ஷாகவும் மொறுமொறுப்பாகவும் வைத்திருக்கும்.

இந்த ஸ்டார்ட் அப் கிரிஸ்மஸ் பண்டிகைக்காக சாக்கோசா (Chocossa) வகைகளை மறுபடியும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்திய உணவுச்சந்தையின் அளவு மிகப்பெரியது. கடந்த வருடம் 193 பில்லியன் டாலர்கள் கொண்டிருந்தது. தினமும் நூற்றுக்கணக்கான வணிகங்கள் கடைகளை மூடி வரும் நிலையில் இது எளிதான வணிகம் அல்ல.

நிதி மற்றும் ஷிக்கர் Chai Point என்கிற மற்றொரு உணவு சார்ந்த ஸ்டார்ட் அப்பிடமிருந்து ஒன்றிரண்டு படிப்பினைகளை கற்றுக்கொண்டுள்ளனர். இந்நிறுவனர் அமுலீக் சிங் இந்திய மக்கள் தினமும் அருந்தும் சூடான டீயை வணிகமாக்கி ஏழாண்டுகளிலேயே ஒரு சிறப்பான ப்ராண்டை உருவாக்கினார். சமோசா சிங் போலவே சாய் பாயிண்டும் குறைவான விலையிலேயே விற்பனை செய்தது.

சாய் பாயிண்ட் தொழில்நுட்ப பூங்காக்களில் சில்லறை விற்பனையைத் துவங்கி இன்று 100 அவுட்லெட்களில் செயல்பட்டு வருகிறது. தனித்தனியான பேக்குகளில் இவர்கள் டீயை வீடுகளில் டெலிவர் செய்கின்றனர். சமீபத்தில் IoT சார்ந்த டீ மற்றும் காஃபி டிஸ்பன்ஸர்களை கார்ப்பரேட்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளனர். ஓராண்டுக்கு முன்னால் 100 கார்ப்பரேட்களிலும் 250 SME அலுவலகங்களிலும் செயல்பட்டனர். ஒவ்வொரு வருடமும் 50 சதவீத வளர்ச்சியடைந்து இன்று மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற டீ ப்ராண்டாக உள்ளது.

சமோசா சிங் கார்ப்பரேட் சந்தையில் செயல்படுவதால் ஆர்டர்களை கணித்து செயல்படமுடியும். பொழுதுபோக்கு இடங்களான PVR மற்றும் INOX நேரடியாக வாடிக்கையாளர்களுடன் இணைய உதவுகிறது. பி2சி குளிரூட்டப்பட்ட சமோசா ப்ராண்டு சில்லறை வர்த்தக பிரிவில் மக்களுடன் இணைவதற்கான முயற்சியாகும். நிதி மற்றும் ஷிக்கர் முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் சமோசாவைக் கொண்டே அவர்களால பல மில்லியன் உணவு ப்ராண்டை உருவாக்க முடியும்.

ஆங்கில கட்டுரையாளர் : ராதிகா பி நாயர்