கல்லூரியில் படிக்கும் போதே ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கலாமா?

0

இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறது. இந்த 15 லட்சம் பொறியாளர்களில் எத்தனை பேர் உண்மையில் மகத்தான பொருட்களை உருவாக்க கனவு காணத்துவங்குகின்றனர். இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரை விடை காண முயல்கிறது.

அன்மையில், வயர்டு இதழ், ஆண்ட்ராய்டை உருவாக்கிய ஆண்ட்ரூ ரூபின் கூகுளில் இருந்து விலகி, செயற்கை அறிவு சார்ந்த அடுத்த திட்டத்தில் பணியாற்றத்துவங்கியது தொடர்பான கட்டுரையை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரை மூலம், சிலிக்கான் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு முறை அதிகம் அறியப்படாத ஸ்மார்ட் தொழில்நுட்பம் சார்ந்த கண்டறிதலில் இறங்கியிருப்பதை உணர்த்துகிறது. கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் மனதில் சிலிக்கான பள்ளத்தாக்கு உண்டாக்கியுள்ள வளர்ச்சி மனநிலைக்கு சான்றாக இது அமைகிறது. இந்த மனநிலை மூலம் தான் சிலிக்கான் பள்ளத்தாக்கு உலகை மாற்றும் ஸ்டார்ட் அப்களை உருவாக்கி வருகிறது.

அங்கு உள்ள மாணவர்கள் இவ்வற்றை எல்லாம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள பொறியியல் மாணவர்கள் இன்னமும் கோடிங் மற்றும் செயலிகள் உருவாக்கக் கற்றுக்கொண்டு அதிகபட்சமாக தேவையில்லாத ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகள் மற்றும் பயிலறங்குகளில் பங்கேற்றுக்கொண்டிருக்கின்றனர். சோதித்துப்பார்த்து செயல்படக்கூடிய மேடைகள் மற்றும் சூழல் தான் இப்போது இந்தியாவுக்கு தேவை. இவற்றின் மூலம் தான் நாட்டின் 15 லட்சம் பொறியாளர்கள், கேம்பஸ் நேர்காணலைத் தாண்டி யோசித்து, வழிக்காட்டக்கூடிய இளம் தலைவர்களாக, திறன் வாய்ந்த இளம் பொறியாளர்களாக, முதல் முறை நிறுவனர்களாக , பிரச்சனைக்கு தீர்வு காண்பவர்களாக உருவாகச்செய்ய முடியும்.

பொருட்களை உருவாக்கும் முயற்சியில் அவர்களை நேரடியாக ஈடுபட வைப்பதன் மூலமே இதை செய்ய முடியும். பாட புத்தகங்களில் படித்ததை வைத்து பொறியாளரின் திறனை அளவிட முயற்சிப்பதைவிட, கல்லூரியில் இருக்கும் போதே பொருட்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களின் கருத்துக்களை அறிய வைப்பது தான் சரியாக இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாணவர்களுடன் உரையாடிய பிறகு, ’முதல் முறை நிறுவனராவது எப்படி? எனும் கேள்வியை நான் அடிக்கடி எதிர்கொள்வதை உணர்கிறேன். இந்த கேள்வி மிகவும் எளிதானதாகத் தோன்றினாலும், இதனுள் மிகுந்த அர்த்தங்கள் பொதிந்திருப்பதுடன், கடந்த இரண்டு தலைமுறைகளாக உருவாக்கப்பட்டுள்ள மனநிலையை இது பிரதிபலிக்கிறது. தவறான தகவல்கள், தவறான புரிதல் மற்றும் பழகிய நிலையில் இருந்து வெளியேறுவதில் உள்ள தயக்கம் ஆகியவற்றின் காரணமாக உருவான மனநிலை இது. ஆனால் எனது அனுபவம் மற்றும் புரிதலின் படி முதல் முறை நிறுவனராக இருப்பது என்பது அற்புதமான உணர்வாகும். அது உங்களுக்கு தொழில்முனைவோர் பயணத்தின் கீற்றை காண்பித்து, ஒருவரது வாழ்க்கையில் தொழில்முனைவுக்கான விதையை விதைக்கிறது.

இனி, பொதுவாக உள்ள சில தவறான புரிதல்களை பார்ப்போம்:

அ) பொருட்களை உருவாக்க திறன் மற்றும் அனுபவம் தேவை:

இந்த தவறான புரிதல் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள வளர்ச்சி மனநிலைக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. மாணவப்பருத்தில் இருந்து மதிப்பெண்களை பெறும் வகையில் நாம் வளர்க்கப்பட்ட விதத்தில் இருந்து இது வருகிறது. நமது நாட்டின் கல்விச் சூழலில் உண்மையான திறன் வளர்ச்சி எதுவும் உண்டாவதில்லை. இதன் காரணமாகவே, புதிதாக ஒன்றை உருவாக்க ஒருவருக்கு திறன் மற்றும் அனுபவம் தேவை என நினைக்க வைக்கிறது.

ஸ்டார்ட் அப் என்பதை இளங்கலை பட்டதாரி, உண்மையில் பயனுள்ள பொருளை உருவாக்கத்தேவையான திறனை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாக பார்ப்பதே இந்த புரிந்து கொள்வதற்கான சரியான வழியாகும். ஒரு பொருளை உருவாக்குதில் துவங்கி, குழு மற்றும் விற்பனையை கையாள்வது என ஸ்டார்ட் அப் அனுபவம் எல்லாவற்றையும் அளிக்கிறது. தொழில்முனைவோர் என்பவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பவர். ஸ்டார்ட் அப் முயற்சி உங்களை வழிகாட்டும் தலைவராக்கும். பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கற்றுக்கொடுக்கும்.

ஆ) கல்லூரியில் இருக்கும் போதே ஒன்றை துவக்குவது ரிஸ்கானது:

மதிப்பெண்கள் தான் எல்லாம் என்ற மனநிலையில் இருந்து உண்டாவது தான் இது. நாம் எல்லோரும் இதற்குத் தான் பழகியிருக்கிறோம். ஆனால் மதிப்பெண்களுக்கு எதிரான கருத்து அல்ல நான் சொல்ல வருவது. விஷயம் என்ன என்றால் மாணவர்கள் தங்களுக்கு பழக்கமான சூழலில் இருந்து வெளியே வந்து, நான்காண்டு படிப்பு முடிந்தவுடன் ஏதேனும் ஒரு அவுட்சோர்சிங் நிறுவனத்தில் வேலை கிடைப்பதை விட உலகம் பெரிதானது என்பதை உணர்வதாகும்.

எனவே நன்றாக படித்து கேம்ஸ்ஸ் தேர்வு மூலம் நல்ல வேலையை பெற முயற்சிப்பதைவிட, ஒரு மாணவர் கல்லூரியில் படிக்கும் போதே ஸ்டார்ட் அப் சோதனையில் ஈடுபட்டால், அவருக்கு நிதி உதவி கிடைக்கலாம் அல்லது ஆக்சலேட்டர் திட்டங்களில் சேரலாம் அல்லது பெரிய நிறுவனத்தால் கையகப்படுத்தப்படலாம் அல்லது அவர்களே தொடர்ந்து நிறுவனத்தை நடத்தும் நிலை பெறலாம். கல்லூரி முடித்த உடன் வேலைக்கு செல்வது அல்லது மேற்படிப்புக்கு செல்வது ஆகிய வழக்கமான வாய்ப்புகள் தவிர இந்த வாய்ப்பை பெறலாம்.

சுருக்கமாக சொல்வதானால், ஒரு ஸ்டார்ட் அப் என்பது பலவித வாய்ப்புகளை அளிக்கும். பால் கிராஹாம் இதை,

“எந்த கூடுதல் வகுப்புகளும் தேவையில்லை. பொருட்களை உருவாக்குங்கள். மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் இரண்டுமே ஜனவரி மாதத்தில் துவக்கப்பட்டது தற்செயலானது இல்லை. ஹாவர்டில் இது வாசிப்பு காலம். அதாவது வகுப்புகள் நடைபெறாது. ஏனெனில் மாணவர்கள் இறுதி தேர்வுக்குத் தயாராக வேண்டும்” என குறிப்பிடுகிறார்.

ஸ்டார்ட் அப் சூழலை ஊக்கப்படுத்தும் போது தேவையான திறன்களை பெறும் நிலை ஏற்பட்டு, பொறியாளர்களை உருவாக்குவதற்கான இந்த வழிகள் தடைபடாமல் ஊக்கப்படுத்தப்பட்டு மாணவர்கள் நம்பிக்கையும் பெறுகின்றனர்.

”கல்லூரியில் உங்களால் ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்க முடியாவிட்டாலும் கூட பிரச்சனை இல்லை. மாணவராக இருக்க வேண்டும் என்பது தான் உங்கள் குறிக்கோள் என்பதால் அதில் தோல்வி இல்லை. மேற்படிப்பின் போது இந்த திறனை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் பால் கிரஹாம்.

இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களை மேம்படுத்தவே செய்யும். ஸ்டார்ட் அப் வெற்றிபெறாவிட்டாலும் கூட அது தோல்வி இல்லை: ஒரு பாடம் தான்!

இறுதியாக:

நீங்கள் ஒரு பொறியியல் மாணவராக இருந்து இதை படித்தால் தொழில்முனைவு ஆர்வம் நிச்சயம் உண்டாகி இருக்கும். 3 அல்லது 5 சக மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, பல எண்ணங்களை விவாதித்து செயல்படத்துவங்குங்கள். ஆறு மாத காலம் என நிர்ணயித்துக்கொள்ளுங்கள். புதிய பொருளை உருவாக்குவதற்கான எண்ணத்தில் இருந்து அதை பயன்படுத்தக்கூடிய ஒன்றாக எடுத்துச்செல்ல வேண்டும். இது தோல்வி அடைந்தால் மக்கள் உண்மையில் எதை பயன்படுத்த விரும்புகின்றனர் என தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பொருளை மேம்படுத்தலாம் அல்லது புதிய திசையில் கொண்டு செல்லலாம்.

ஸ்டார்ட் அப் மந்திரம் இது தான்:

பொருளை உருவாக்குங்கள் – வாடிக்கையாளரை தேடுங்கள் – தயாரிப்பை சோதித்துப்பாருங்கள் – தயாரிப்பை மேம்படுத்துங்கள் – உங்கள் பங்குதாரர்களுக்கு பணத்தை உருவாக்குங்கள்!

இவற்றில் முதல் இரண்டை கல்லூரியில் இருக்கும் போதே உங்களால் செய்ய முடிந்தால் நாடு மிகவும் எதிர்பார்த்திருக்கும் நிறுவனராக உங்களால் முடியும். இத்தகைய திறன் வாய்ந்த மாணவர்கள் முதல் முறை நிறுவனர்களாக பிரகாசிப்பார்கள்.

(கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மற்றும் பார்வைகள் கட்டுரை ஆசிரியருடையவை: யுவர்ஸ்டோரி கருத்தை பிரதிபலிப்பவை அல்ல)

ஆக்கம்: சித்தார்த் ராம் | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

பத்தொன்பதே வயதில் தொழில் முனைபவராக உருவெடுத்தது எப்படி?

ஸ்டார்ட் அப் செய்திகளுக்காக நீங்கள் தொடர வேண்டிய ட்விட்டர் முகவரிகள்!