ஓரே ஆண்டில் 100 வர்த்தக வாடிக்கையாளர்கள், 5 இலக்க வருவாய்- 'ஆப் வைராலிட்டி'

0

ராம் பாப்பினேனி, புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் பல செயலிகளை(APPS) உருவாக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் ரெயில் பயணிகளுக்கான சில செயலிகளை உருவாக்கினார்.

இவற்றில் ஒன்றான எம்.எம்.டி.எஸ் (MMTS), ஐதராபாத் புறநகர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள், ரெயில் நேரம் மற்றும் அவற்றின் வருகையை அறிந்து கொள்ள வழி செய்தது. ஐதராபாத் ரெயில் பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் செயலி இது. நாள் ஒன்றுக்கு 20,000 பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டு, பிளே ஸ்டோரில் 4.4 ரேட்டிங்கும் பெற்றது.

இந்த செயலியை உருவாக்கும் போது ராம், அதை மேம்படுத்துவதற்கான் வளர்ச்சி உத்திகளை இயற்கையாக கண்டறியும் வழிகள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். அவர்கள் ஒன்று சொந்தமாக எல்லாவற்றையும் உருவாக்க வேண்டியிருந்தது அல்லது பல்வேறு மென்பொருள் மேம்பாட்டு அமைப்பை (எஸ்டிகே) பயன்படுத்த வேண்டியிருந்தது. இது பற்றி தனது சகோதரர் லக்ஷ்மன் பாப்பினேனியுடன் விவாதித்ததில், செயலிகளுக்கான வளர்ச்சி உத்திகளை அடையாளம் காட்டும் "ஆப்வைராலட்டி" ( AppVirality) எனும் செயலிளுக்கான டூல் கிட்டை உருவாக்கும் எண்ணம் இருவருக்கும் உண்டானது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியில் இன்மொபி(InMobi) இணை நிறுவனர் ராஜன் ஆனந்தன் உள்ளிட்டோர் முதலீடு செய்துள்ளனர்.

லக்ஷமன் தங்கள் பயணம் பற்றி யுவர் ஸ்டோரிக்கு அளித்த பேட்டி வருமாறு;

யுவர் ஸ்டோரி: உங்கள் வர்த்தகத்தின் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்?

லக்ஷ்மன்: இந்த எண்ணம் உதயமானதும் நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செயலி டெவலப்பர்களுடன் பேசினோம். செயலிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான வளர்ச்சி குறிப்புகளை அளிக்கும் சேவைக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டோம். எனவே செயலிகளை உருவாக்குபவர்கள் வளர்சிக்கான வாய்ப்புகளை தாங்களே கண்டறிந்து அவற்றை செயல்படுத்த உதவும் தயாரிப்பை அளிக்க தீர்மானித்தோம். அவர்களே இயக்கி கொள்ளக்கூடிய டாஷ்ப்போர்டும் இதில் இடம்பெற்றுள்ளது. எந்த வகையான கோடிங் அனுபவமும் இதற்கு தேவையில்லை, பிளேஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளவும் தேவையில்லை.

யுவர்ஸ்டோரி: இப்போது நீங்கள் அளிக்கும் சேவை என்ன? நீங்கள் ஆரம்பத்தில் அளித்த சேவைகளை தான் வழங்குகிறீர்களா?

லக்ஷ்மன்: ஆம், ஆரம்பத்தில் துவக்கிய அதே மாதிரியை தான் அளிக்கிறோம். ஆனால் பயனாளிகளின் கருத்துக்குளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகிறோம். இப்போதைக்கு ஆப்வைராலிட்டி வளர்ச்சி டூல்கிட் செயலி டெவலப்பர்களுக்கு கீழ்கண்ட வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன;

தனிப்பட்ட செயலி தொடர்பான பரிந்துரைகள், ஸ்வீப்ஸ்டேக்ஸ், புத்திசாலித்தனமான சமூக பகிர்வு.

முன்பு சொன்னது போல எல்லா வளர்ச்சி குறிப்புகளையும் இணையத்தில் உள்ள டூ இட் யுவர்செல்ஃப் (Do It Yourself) டேஷ்போர்டில் இருந்து நிர்வகிக்கலாம். யாரும் எந்த கோடிங்கும் செய்யத் தேவையில்லை. தங்கள் பிரச்சாரத்திற்கு ஏற்ப பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளவும் தேவையில்லை.

யுவர்ஸ்டோரி: ஆப் வைராலிட்டி மூலம் ஒருவர் செயலிக்குள்ளான பரிந்துரைகளை (இன் ஆப் ரெபரல்ஸ், In-App Referrals) எப்படி பயன்படுத்த துவங்குவது?

லக்ஷ்மன்: இதை 30 நிமிடங்களில் செய்யலாம். 25 கே.பி எஸ்டிகே(25KB SDK) மற்றும் டூ இட் யுவர்செல்ஃப் டேஷ்போர்ட் மூலம் எந்த செயலியிலும் இதை இயக்கலாம். ஆப் வைராலட்டி பயனர்கள் இடைமுகம், பயனாளி வெகுமதிககள் மற்றும் மெயில் மூலம் தகவல் அனுப்புவது ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது.

யுவர்ஸ்டோரி: உங்கள் முதல் வாடிக்கையாளர்கள் பற்றி சொல்லுங்கள்? சோதனை திட்டங்களை செயல்படுத்தினீர்களா?

லக்ஷ்மன்: ஆரம்பத்திலிருந்தே சில வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியது எங்கள் அதிர்ஷடம். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயலிகளை முதலில் அணுகி அவர்கள் அனுபவம் அடிப்படையில் பலன்களை அலச இருந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு சில பெரிய வர்த்தக நிறுவன செயலிகளும் இதை பயன்படுத்த முன் வந்தனர்.

யுவர்ஸ்டோரி: உங்கள் வருவாய் முறை என்ன? கட்டண விவரங்களை எப்படி தீர்மானித்தீர்கள்?

லக்ஷ்மன்: இன்னும் தீர்மானமான கட்டண முறையை வகுக்கவில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பல முறைகளை பரிசோதித்து வருகிறோம். டவுண்லோடுக்கு ஏற்ற கட்டண முறையே இப்போதைக்கு பிரபலமாக உள்ளது. அமெரிக்க டாலரில் 5 இலக்க வருவாயை எட்டியுள்ளோம். அடுத்த 12 மாதங்களில் ஒரு மில்லியன் டாலர் வருவாயை எட்ட உள்ளோம்.

யுவர்ஸ்டோரி: தற்போதைய வரவேற்பு மற்றும் நீங்கள் இலக்காக கொண்டுள்ள சந்தை என்ன?

லக்ஷ்மன்: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெய்னில் 100 க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு வளர்ச்சி உத்திகளை வழங்கி வருகிறோம். இந்தியாவில் யாத்ரா, குவிக்கர், ஹெல்த்கார்ட் மற்றும் இக்சிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. சொந்த மண்ணில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால் இந்தியாவில் இருந்து துவங்கினோம். ஆனால் இந்தியாவுக்கு வெளியேவும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம்.

யுவர்ஸ்டோரி: செயலிகளின் வளர்ச்சி வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்? இதில் ஆப் வைராலிட்டி எந்த இடத்தில் உள்ளது?

லக்ஷ்மன்: செயலியை மட்டும் சார்ந்திருக்கும் நிலை பற்றி விவாதம் நடைபெற்று வரும் இந்நேரத்தில், எதிர்காலம் செயலி சார்ந்த்தாக அல்லது செயலி முதன்மையானதாக கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் எல்லோரும் முதல் ஆண்டில் முதல் மில்லியன் பயனாளிகளை பெற விரும்புவார்கள். அதற்காக எதையும் செய்ய விரும்புவார்கள்.

இதில் ஆப் வைராலிட்டி கச்சிதமாக பொருந்துகிறது. வாடிக்கையாளர்கள் பின்பற்றும் கட்டண வளர்ச்சி உத்திகளுடன் எங்கள் உத்திகளும் வலு சேர்க்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் முதல் செயலி அறிமுகத்துடன் பயன்படுத்த விரும்பும் மென்பொருள் மேம்பாட்டு அமைப்பாக (எஸ்டிகே) நாங்கள் இருக்க விரும்புகிறோம். இதில் நாங்கள் ஒரு சிறந்த நிலையில் உள்ளோம் என்றே சொல்லலாம்.

செயலிக்கான இணையதளம்: https://www.appvirality.com/