அன்பானவர்களுக்கு ஆச்சரிய அனுபவத்தை பரிசளிக்க உதவும் ’surprise machi’

தொடங்கிய ஓராண்டில் 600-க்கும் அதிகமான சர்ப்ரைஸ்களை வழங்கி லாபத்துடன் வளர்ச்சி கண்டுள்ள சென்னை நிறுவனம்!

1

இங்கு சர்ப்ரைஸ் (surprise) பிடிக்காத மக்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள். இந்த பரிசு, கொண்டாட்டம் பிடிக்காது என்று கூறும் பலர்; தங்களுக்கு நெருங்கியவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தால் விரும்பாமல் இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் ஒரு surprise-ஐ எதிர்பார்த்துக் கொண்டு தான் உள்ளோம். அவ்வாறு நாம் நம் நெருங்கியோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உதவ தோன்றியதே ‘சர்ப்ரைஸ் மச்சி’ ’Surprise Machi’. 

பிறந்தநாள், கல்யாண நாள் போன்ற வாழ்கையின் மிக முக்கியமான தருணங்களில் நமக்கு பிடித்தவர்களுக்கு பரிசு கொடுக்க விரும்புவோம். ஆனால் அந்த பரிசு சாதாரண ஒன்றாக இல்லாமல் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும். நாம் எண்ணும் சில யோசனைகள் நமக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதற்கு அதிக பணமும் நேரமும் தேவைப்படலாம். இப்பொழுது நாம் வாழும் சூழலில் பணம் இருந்தாலும் எவருக்கும் நேரம் இருப்பதில்லை. அவ்வாறு நம்மால் செய்ய முடியாத பல ஆச்சரியங்களை நமக்காக செய்கின்றது surprise machi. இதுவே தற்போது அதிக இளைஞர்களை ஈர்த்துள்ளது.

surprise machi நிறுவனர்கள் பாக்யா பிரபு மற்றும் ஷாகுல் ஹமீது உடன் குழுவினர்
surprise machi நிறுவனர்கள் பாக்யா பிரபு மற்றும் ஷாகுல் ஹமீது உடன் குழுவினர்

பாக்யா பிரபு மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இரு நண்பர்கள் சேர்ந்து இந்த surprise machi நிறுவனத்தை நிறுவினர். பாக்யா பிரபு; விஸ்காம் படிப்பை முடித்து காபி ரைட்டராக ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். ஆனால் பாக்யாவிற்கு தொழில் தொடங்கவே ஆர்வம் இருந்தது. அப்பொழுது துபாயில் பணி புரிந்த தனது நண்பர் ஷாகுல் ஹமீதுடன் தொழில் தொடங்கும் யோசனை பற்றி பேசினார். பின் இருவரும் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறி தொழில் தொடங்க முடிவு செய்தனர்.

“முதலில் ஆன்லைன் கிப்ட் ஸ்டோர் தொடங்கவே முடிவு செய்தோம், பின் எங்கள் நண்பரின் பிறந்தநாளுக்கு அவருக்கு ஒரு surprise கொடுத்தோம், அந்த அனுபவம் என் நண்பருக்கு மிக திருப்திகரமாக இருந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகே கிப்ட் ஸ்டோருக்கு பதிலாக அனுபவங்களை பரிசாகக் கொடுக்கலாம் என முடிவு செய்தோம்,” என்கிறார் பாக்யா.

ஒரே இரவில் புதிய வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர் பாக்யா மற்றும் ஷாகுல். ஒரு நாள் skype-இன் மூலம் தொடர்புக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான யோசனைகளை பகிர்ந்து இதை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

“ஒரு இரவில் எங்களால் இவ்வளவு திட்டங்களை எழுத முடியும் என்றால், இனி வரும் காலங்களில் இன்னும் பல யோசனைகளை செய்ய முடியும் என்று நம்பிக்கை வந்தது.”

தங்களின் சேமிப்பில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் முதலீட்டில் சர்ப்ரைஸ் மச்சியை தொடங்கினார்கள் பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது. முதலில் ஃபேஸ்புக் பேஜ் ஆக தொடங்க நினைத்தனர், பின் மக்களின் நம்பிக்கையை பெற முகநூல் மட்டும் போதாது என்று எண்ணி இணையதளம் மூலம் தங்கள் நிறுவனத்தை வெளியிட்டனர். தங்களது யோசனைகளை ஒன்று திரட்டி, இணையதளத்தை உருவாக்கி மக்களிடத்தில் சேர்க்க 3 மாதமானது. கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கி வெற்றிகரமாக ஓராண்டை எட்டியுள்ளனர்.

“ஆரம்பத்தில் எங்கள் குடும்பம் எங்களுக்கு துணையாக இல்லை. நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டு தொழில் தொடங்குவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனினும் எங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தொடங்கி இன்று வெற்றிகரமாக ஓராண்டை அடைந்துள்ளோம்,” என்கிறார் பாக்யா.

தொழில் தொடங்கி முதல் இரண்டு மாதம் தாங்கள் நினைத்தபடி தொழில் போக வில்லை என்றாலும் அதன் பின் அவர்கள் நண்பரின் திருமணதிற்காக அவர்கள் செய்த ’Flash Mob’ பலரை இவர்களை திரும்பி பார்க்கவைத்தது. அந்த flash mob-இன் வீடியோவை யூட்யூபில் வெளியிட்டனர். அது 7 லட்சம் மக்களையும் தாண்டி அதிகமாக சென்றடைய ’surprise machi’ வெளிச்சத்திற்கு வந்தது.

“முதலில் நாங்களே நல்ல தொழில்நுட்ப கேமரா மூலம் அனைத்து அனுபவங்களையும் படம் பிடிக்க ஆரம்பித்தோம். இதுவே எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டியது” என்கிறார்.

surprise machi-இன் மூலம் உங்கள் அன்புமிக்கவருக்கு திரை அரங்கின் திரையில் வாழ்த்து சொல்லாம், ஒரு சகாச பயணத்தை பரிசளிக்கலாம், அவர்களுக்கான தனிப்பட்ட பாடலை இயற்றலாம், இது போன்ற நம்மால் முடியாத பல ஆச்சரியங்களை இவர்கள் மூலம் நிறைவேற்றலாம்.

இவர்களின் சர்ப்ரைஸ்கள் பல பேக்கேஜ்களாக உள்ளது. ரூ.2500 முதல் 1.5 லட்ச ரூபாய் வரை ஆச்சர்யங்களை இக்குழுவினருடன் நாம் வகுக்கமுடியும். 400 ரூபாயிலிருந்து சர்ப்ரைஸ் பரிசுகளையும் இவர்கள் அளிக்கின்றனர். 

“இந்நிறுவனத்தின் மிக முக்கிய அம்சம், இதற்கு இந்த விலை என்ற நிர்ணயம் இல்லை. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் முதலில் கேட்பது அவர்களின் தேவை மற்றும் அவர்களின் பட்ஜெட். எல்லா ஆச்சர்யங்களையும் அவரவர்கள் விருப்பத்திற்கு மற்றும் பட்ஜெட்க்கு ஏற்றவாறு மாற்றுவோம்.”

வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு பெரிய அளவிற்கு வரவேற்பு இருக்காது என சுற்றார் கூறினாலும் தங்கள் ஐடியாவின் மீது நம்பிக்கைக் கொண்டே இந்த நிறுவனத்தை தொடங்கினர். முதலில் அலுவலக செலவை ஈடு செய்ய சிரமமாக இருந்தாலும் ஓரளவு சமாளித்து கொண்டனர். தற்போது ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மாதம் சுமார் இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர். விரைவில் பெங்களூர் மற்றும் கோவையில் கிளைகள் ஆரம்பிக்க முடிவுசெய்துள்ளனர்.

இன்னும் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பல surprise பிரிவுகளை இணைக்க உள்ளனர். பயணத்தில் உள்ளோருக்கு ஏற்றவாறும் சில மாற்றங்களை செய்ய உள்ளனர். இரண்டு நபரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று நான்கு பேர் அடங்கிய குழுவாக செயல்பட்டு, தொழிலிலும் பல மடங்கு உயர்ந்து மக்களை தொடர்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.

Related Stories

Stories by Mahmoodha Nowshin