கால்வாயில் சிக்கிய நாய்க்குட்டியை காப்பாற்ற ட்ரோன் உருவாக்கிய இளைஞர்!

0

லக்னோவைச் சேர்ந்த மிலிந்த் ராஜ் தனது வழக்கமான காலைப்பொழுதின் நடைப்பயிற்சியில் இருந்தபோது கால்வாய் ஒன்றில் ஒரு நாய்க்குட்டி சிக்கியிருப்பதைக் கண்டார். 27 வயதான மிலிந்த் ராஜ் ரோபோக்களை உருவாக்குபவர். செயற்கை நுண்ணறிவில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் அந்த நாய்க்குட்டியைக் காப்பாற்ற ஆளில்லா விமானம் ஒன்றை (ட்ரோன்) உருவாக்கினார்.

அந்த கால்வாய் கழிவுநீரும் குப்பைகளும் நிறைந்திருப்பதைக் கண்ட மிலிந்த், அதில் இறங்குவது சரியல்ல என தீர்மானித்து ஒரு ஆளில்லா விமானத்தை உருவாக்கினார். இதற்காக ஆறு மணி நேரம் செலவிட்டார். அவரது லக்னோ ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரக் கையை உருவாக்கி அதை ஆளில்லா விமானத்துடன் பொருத்தினார்.

என்டிடிவி உடனான உரையாடலில் அவர் தெரிவிக்கையில்,

கால்வாயில் குப்பை கூளங்கள் நிறைந்திருந்தது. ஒரு மனிதன் அந்த நாய்க்குட்டியை காப்பாற்றவேண்டுமானால் உயிரை பணயம் வைத்தே அந்தக் காரியத்தில் ஈடுபடவேண்டும். எனவே இந்தப் பணியை மேற்கொள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன். செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரக் கையை பயன்படுத்தத் தீர்மானித்தேன். ஏனெனில் அதில் இதயத்துடிப்பை கண்காணிக்கும் உணர்கருவி உள்ளது. ஆளில்லா விமானத்துடன் பொருத்தி செயல்படுவது ஆபத்தானது என்பதை அறிந்தும் இந்த முயற்சி வெற்றியடையும் என நினைத்தேன். 

ஆளில்லா விமானத்தை உருவாக்கியதும் நாய்குட்டியைக் காப்பாற்ற சில மணி நேரங்கள் செலவிட்டார். செயற்கை நுண்ணறிவு நாய்க்குட்டியின் இதயத்துடிப்பைக் கண்காணிக்க உதவியதாகவும் அத்துடன் நாயை பிடித்து மேலே தூக்குவதற்கான பிடிமானத்தைக் கண்டறிய உதவியதாகவும் தெரிவித்தார். அந்த வழியாக கடந்து சென்ற நபர் ஒருவர் இந்தச் செயலை வீடியோவாக பதிவிட்டு சமூக ஊடகங்களில் பரப்பினார்.

மிலிந்த் இந்த நாய்க்குட்டியை தத்து எடுத்து ’லிஃப்டட்’ என பெயரிட்டுள்ளார். மிலிந்தின் மற்றொரு தயாரிப்பான ஒரு ரோபோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றது என Quint தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA