அண்டார்டிகா பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டாம் வகுப்பு இந்திய மாணவி!

அகமதாபாத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி இளைஞர்கள் மத்தியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தென் துருவம் செல்ல இருக்கிறார்...

0

பல பதின்ம வயதினர் ஸ்னேப்சேட்டில் மும்முரமாக இருக்கின்றனர். அல்லது ஷாப்பிங் மால் போகவேண்டும் என்று பெற்றோரை நச்சரிக்கின்றனர். ஆனால் ஆன்யா சோனி, அண்டார்டிகா பயணத்திற்கு தயாராகி வருகிறார். அகமதாபாத்தைச் சேர்ந்த இவர் ஆய்வாளர் சர் ராபர்ட் ஸ்வான் அவர்களின் ’2041 ஃபவுண்டேஷன்’ ஏற்பாடு செய்யும் அண்டார்டிகா 2018 பயணத்திற்கு தேர்வாகியுள்ளார்.

ஆன்யா; போர்டிங் பள்ளியிலிருந்து தொலைபேசி வாயிலாக பேசுகையில், 

“சில நாட்களுக்கு முன்பு நாங்கள் AI Gore-ன் An Inconvenient Truth என்கிற ஆவணப்படத்தைப் பள்ளியில் பார்த்தோம். இது என்னிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே ராபர்ட் ஸ்வான் நினைவிற்கு வந்தார். இந்த வருட துவக்கத்தில் ராபர்ட்டின் ’டெட் டாக்’ பார்த்தேன். இதுவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் 2017-ம் ஆண்டில் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு இந்தியரான தனிஷா ஆரோரா எனக்கு அதிக உந்துதலளித்தார். 2018-ம் ஆண்டிற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.”

வட துருவம், தென் துருவம் இரண்டிற்குமே சென்ற முதல் நபர் சர் ராபர்ட் ஸ்வான். அவர் ஒரு துருவ ஆய்வாளர். ஆற்றல் கண்டுபிடிப்பில் முன்னணி வகிப்பவர். 2041 ஃபவுண்டேஷன் நிறுவனர். அண்டார்டிகா பாதுகாக்கப்பட்ட துருவம். அசலானது. அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதி. அண்டார்டிகாவிற்கு எந்தவித ஆய்வும் மேற்கொள்ளப்படக்கூடாது என்கிற 50 வருட ஒப்பந்தம் 2041-ம் ஆண்டில் நிறைவடைகிறது. 

சர் ராபர்ட் ஸ்வான் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2041-ம் ஆண்டிற்குள் இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான தலைவர்களை உருவாக்கவும் ‘2041 ஃபவுண்டேஷனை’ துவங்கினார். அண்டார்டிகா எந்த வகையிலாவது ஊடுருவப்பட்டாலோ அல்லது சுரண்டப்பட்டாலோ அது ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கக்கூடும். ஆகவே இந்த கண்டத்தை பாதுகாப்பது அவசியமாகிறது.

பனிப்பாறை முனை

ஒவ்வொரு ஆண்டும் எண்பது பேர் அண்டார்டிகா பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவர்கள் சமூக அளவிலும் கார்ப்பரேட் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. அடுத்த வருட பயணம் பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 12-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆன்யா இளம் வயதினர் என்பதால் அவரது அம்மா பிரதீபா சோனி உடன் செல்வார். ஆன்யா உற்சாகமாக உள்ளார். வரவிருக்கும் சாகச பயணத்தை நினைத்து சற்று பதட்டமாகவும் உள்ளார். அவர் விவரிக்கையில்,

டியர்ரா டெல் ஃபியூகோ தீவில் அமைந்திருக்கும் அர்ஜெண்டினாவின் உஷுவாயா பகுதிக்கு விமானத்தில் பயணிப்போம். இது தென் அமெரிக்காவின் தென்கோடியாகும். இதை ‘உலகத்தின் எல்லை’ என்றுகூட அழைப்பார்கள். அங்கிருந்து கப்பலில் பயணத்தைத் தொடர்வோம். பகலில் கண்டத்தை ஆராய்வோம். ஒரு இரவு தவிர மற்ற இரவுகளில் கப்பலில் உறங்குவோம்.

இந்தக் குழுவுடன் பயணிக்கும் புவியியலாளர்கள் உறைபனி நிலத்தின் தனித்துவமான அம்சங்களை சுட்டிக்காட்டுவார்கள். குறிப்பாக பனிப்படிவ அடுக்குகள் தனியாக பிரிந்துகொண்டிருப்பதைக் காட்டுவார். இவை பருவநிலை மாற்றம் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

பாதுகாப்பிற்காக சிறப்பான சாதனங்கள் வழங்கப்படும் என்றாலும் நிலத்தில் தூங்கப்போகும் இரவு குறித்து சற்று கவலையில் உள்ளார் ஆன்யா. மிகவும் கடினமாக கடலான டிரேக் பேசேஜ்-ல் பயணிப்பது அவர் எதிர்பார்த்து காத்திருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயமாகும்.

அகமதாபாத்திலிருந்த தனது வீட்டிலிருந்து கான்ஃபரன்ஸ் அழைப்பு வாயிலாக இணைந்த பிரதீபா, ”நான் ஏற்கெனவே என்னுடைய உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்ளும் பணியைத் துவங்கிவிட்டேன். ஆன்யாவின் வலிமையை மேம்படுத்த அவரது உடற்கல்வி ஆசிரியரிடம் விண்ணப்பித்துள்ளேன்.”

அர்த்தமுள்ள செயல்பாடுகள்

ஆன்யாவின் அப்பா இகோலிப்ரியம் எனர்ஜி-யில் பணியாற்றுகிறார். பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் தங்களது ஆற்றலை நிலையாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதத்தில் மேம்படுத்தவும் உதவுகிறார். அவரது அப்பாவின் பணிதான் ஆன்யாவிற்கு சுற்றுச்சூழலில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரி ஆன்யாவை நினைத்து மிகுந்த பெருமை கொள்கிறார்.

ஆன்யா 2015-ம் ஆண்டு நிறுவப்பட்ட ‘Kids4aCause’ குழுவிலும் பங்கு வகிக்கிறார். இந்தக் குழுவினர் பொருட்களை மறுசுழற்சி செய்து கழிவுகளை குறைப்பதற்காக அதிலிருந்து செயல்பாட்டுப் பொருட்களை உருவாக்குகின்றனர். இந்தப் பொருட்களை விற்பனை செய்து பணம் ஈட்டி அதை ‘IMDAD’ போன்ற சமூக நோக்கங்களுக்காக செயல்படும் நிறுவனங்களுக்கு தானமளிக்கின்றனர். இந்நிறுவனம் காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு போர்வைகளும் மருந்துகளும் வழங்கினர். அதேபோல் சென்னை வெள்ள பாதிப்பின் நிவாரண முயற்சியில் ஈடுபடும் ‘HUG’ நிறுவனத்திற்கும் நன்கொடை வழங்கினர். ஆன்யா கூறுகையில், 

“கடந்த ஆண்டு ’தேசிய இந்திய சங்கத்திற்கு’ பணம் அனுப்பினோம். இந்தத் தொகை நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச புத்தகங்களை வழங்க பயன்படுத்தப்பட்டது.”

ஆன்யா ’சஹாத்ரி’, கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் பள்ளி மாணவி. இங்கு மாணவர்கள் சுற்றுச்சூழலை பராமரிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆன்யா கூறுகையில், “பேப்பரை சேமிக்கவும், காய்கறிகளை வளர்க்கவும், புத்தகங்களை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தவும், மின்சாரத்தை சேமிக்கவும், சூரியசக்தி வெந்நீர்க்கொதிகலம் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறோம். நமது சுற்றுச்சூழல் குறித்து நாங்கள் நன்கறிவோம். 

ங்களது வளாகத்தையும் சுற்றுப்புறத்தையும் மாசற்ற பகுதியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். நமது உலகை பாதுகாக்க சின்னச் சின்ன வழிகளில் பங்களிக்கவேண்டும் என்று அனைத்து இந்திய இளைஞர்களையும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். கழிவுகளை வகைப்படுத்துதல், ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம். ஒவ்வொரு சின்ன முயற்சியும் நிச்சயம் பலனளிக்கும்.”

ஆன்யாவின் பெற்றோர் பயணத்திற்காக நிதி உயர்த்தி வருகின்றனர். பிரதீபா கூறுகையில் “இது உல்லாசப் பயணம் அல்ல என்பதை நாங்கள் நன்கறிவோம். கூட்டுநிதி தளம் வாயிலாக பயணத்திற்கு நிதி உயர்த்துவதால் எங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதையும் அறிவோம். 100 ரூபாய், 500 ரூபாய் என சிறிய தொகையை அளித்தவர்களுக்கு குறிப்பாக நாங்கள் அதிக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில் இவர்கள் எந்தவித அங்கீகாரத்தையோ அல்லது விளம்பரத்தையோ எதிர்பார்க்கவில்லை. இவர்கள் ஆனியா மீதும் அவர் உருவாக்கக்கூடிய தாக்கத்தின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகின்றனர்.

ஆன்யா அண்டார்டிகா சென்று திரும்பியதும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று தலைமைத்துவம் குறித்த பட்டறைகள், அமர்வுகள் போன்றவற்றை நடத்தவும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகிறார். அவர் கூறுகையில்,

2041 ஃபவுண்டேஷன்க்கு நற்பெயர் சேர்க்கும் நபராக நான் திரும்பி வருவேன். நம் அனைவரது வாழ்விலும் நிலைத்தன்மையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற நான் உதவுவேன்.

செல்லப்பிராணி கோல்டன் ரெட்ரீவரை பயணத்திற்கு உடன் அழைத்துச் செல்ல முடியாது என்பதுதான் ஆன்யாவின் தற்போதைய ஒரே கவலை.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்