டயாலிசிஸ் சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நெஃப்ரோ ப்ளஸ்'

0

அரசு மானியம் அல்லது காப்பீடு போன்ற உதவிகள் இல்லையென்றால் சாமான்யர்கள் பலரால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாது. அதற்கு ஒரே காரணம் அது பெரும் செலவு மிக்கதாக இருக்கிறது. தரமான டயாலிசிஸ் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம் என்கிறது ‘மும்பை கிட்னி பவுண்டேஷன் மேற்கொண்ட ஆய்வு. இந்தியாவில் 950 சிறுநீரக நிபுணர்களும், 4000 டயாலிசிஸ் மையங்களும், 7000 இயந்திரங்களும் உள்ளன. ஆறு வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு தான் இன்றளவும் நீடித்து வருகிறது. தொடர் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளானவர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தீவிர சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான மக்கள் 2,30,000 பேர்களில் 90 சதவீதமானோர் சிகிச்சை பெறத்துவங்கும் சில மாதங்களிலேயே இறந்து விடுகிறார்கள் என்று 2009 ஆம் ஆண்டு அகில இந்திய அறிவியல் மருத்துவக் கழகமும், மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும் அறிவித்துள்ளன.

நோயாளி ஒருவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது
நோயாளி ஒருவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது

1990 ஆம் ஆண்டு முதல் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளாகுவோரின் எண்ணிக்கை 123 சதவீதம் அதிகரித்து வருகிறது என்ற அறிவிப்பு இந்தியர்களாகிய நமக்கு வருத்தம் தரக்கூடியதாகும். இந்திய மக்களின் தவறான வாழ்க்கை முறை பழக்கமே, இதய நோய், மற்றும் சிறுநீரகப் பாதிப்பிற்கு அதிக அளவில் மக்கள் ஆளாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

கமல் ஷா, சந்தீப் குடிபண்டா, விக்ரம் உப்பல்லா மூவரும் கூட்டாக 2009 ஆம் ஆண்டு உயர்தரமான டயாலிசிஸ் வலைப்பின்னல், "நெப்ரோ ப்ளஸ்" ( Nephroplus) என்னும் சுகாதார நிறுவனத்தை ஹைதராபாத்தில் துவக்கினர். ‘’நான் 1999இல் ஐ.ஐ.டி. கரக்பூரில் பட்டப்படிப்பை முடித்த பின் பத்தாண்டு காலம் அமெரிக்காவில் பணி புரிந்தேன். அதன் இறுதியாண்டில் நியூஜெர்சியில் மெக்கின்ஸே & கம்பெனியில் திட்ட ஆலோசகராக இருந்த போது நான் இந்தியாவிற்குத் திரும்பி மருத்துவத் துறையில், குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு அடைந்தோருக்கான ஒரு சிகிச்சை அமைப்பை துவக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். காரணம் மேற்படி நோய்கள் இந்தியாவில் மிகவேகமாகப் பரவி வருகிறது, இதன் பாதிப்பு நம் நாட்டுக்கே ஓர் பெருஞ்சுமையாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று கூறும் உப்பல்லா இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாலும், 14 கோடி பேர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார். தனது ஆய்வின் போது அமெரிக்க ஆப்பிள் மென் பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் இரசாயனப் பொறியாளராகப் பணியாற்றிய கமல் ஷாவைச் சந்திக்க நேரிட்டது என்கிறார். அவர் அப்போது, ரத்ததில் உப்பு கலக்கும் நோயால் பாதிக்கப்பட்டு 12 ஆண்டுகளாகத் தொடர்ந்த டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தார். நோய் கண்டறியப்பட்ட நாள் முதலே டயாலிசிஸ் மேற்கொள்ளும் ஷா, அந்த நோயின் அனுபவத்தை பற்றி தனது ப்ளாகில் எழுதி வந்தார். ‘’அமெரிக்காவில் இருந்தபோது நான் அவ்வப்போது அவருடன் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். அவருக்கு டயாலிசிஸ் தொடங்கி இப்போது பதினெட்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. காலையில் எழுந்ததும் நீச்சல் பயிற்சி மேற்கொள்வார். மாதந்தோறும் பயணம் மேற்கொள்கிறார். தன் நேரம் முழுவதையும் வேலையில் செலவிடுகிறார். அவருடைய வாழ்க்கைக் கதை பிறருக்குப் பெருந்தாக்கத்தை அளிக்க வல்லது’’ சிகிச்சைக்காகப் பணம் செலவிட முடியாதவர்களின் வாழ்க்கையையும் தரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், கமல்ஷா, உப்பல்லா, பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் குடிபண்டா ஆகிய மூவரும் "நெப்ரோ ப்ளஸ்" ஐத் துவக்கியுள்ளனர் . புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்த குடிபண்டா நெப்ரோ ப்ளஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.–

நெப்ரோ ப்ளஸ் நிறுவனர்கள் – கமல் ஷா, விக்ரம் உப்பல்லா, சந்தீப் குடிபண்டா
நெப்ரோ ப்ளஸ் நிறுவனர்கள் – கமல் ஷா, விக்ரம் உப்பல்லா, சந்தீப் குடிபண்டா

நெப்ரோ ப்ளஸ் எனக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட வேண்டும் என்பதற்காக முதலில் ஹைதராபாத்தில் துவங்கினோம். அடுத்து பல்நோக்கு மையம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே இரண்டாவது மையத்தை மற்றொரு நகரத்தில் துவக்கினோம். ‘’இல்லத்தைக் காட்டிலும் ஒரு மையத்தை நடத்துவதென்பது மேலும் மேலும் கடின உழைப்பைக் கோருகிற பயிற்சியாக இருந்தது. ஊழியர்களைக் கண்டுபிடிப்பது, கண்காணிப்பது போன்ற நடைமுறை சிக்கல்களும் நிறைய இருந்தன. பிற மருத்துவமனைகளுடன் உடன்பாடு கொள்வது, சிறுநீரகவியல் நிபுணர்களைப் பங்குதாரர்களாகச் சேர்ப்பது ஆகியவையும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. முதல் அடிகள் தான் பிரச்சனையாக இருந்தன ஆனால் இப்போது 14 மாநிலங்களில் பெங்களூரு, சென்னை, புனே, நொய்டா, ரொடாக், நலகொண்டா, பக்காரோ, கான்பூர் என 34 மையங்களாக விரிவுபடுத்தியுள்ளோம்’’ என்கிறார்.

‘’கலாச்சார வேறுபாடுகளையும் கடந்து எங்களது மையங்கள் நோயாளிகள் மீது சீரிய அக்கறை கொண்ட மையங்களாக செயல்பட்டு வருகின்றன. அதீத ஆர்வத்துடன் செயல்படும் எங்களால் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை எளிதாக எதிர் கொள்ள முடிகிறது. ஹைதராபாத்தை ஆதார மையமாக வைத்துக்கொண்டு உத்திரப்பிரதேசத்தில் சிகிச்சை மையங்களை நடத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகத் தோற்றமத்தது. ஆனால் அத்தனைக்கும் நடுவே உ.பியில் எங்களால் ஐந்து மையங்களைத் துவக்க முடிந்துள்ளது.

சிகிச்சை மையத்தின் உள் தோற்றம்
சிகிச்சை மையத்தின் உள் தோற்றம்

சிறிய நகரங்களிலும், குறு நகரங்களிலும் மையங்கள் ஆரம்பிப்பதை விட பெரு நகரங்களில் ஆரம்பிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது. உபியில் உள்ள ஆக்ரா போன்ற நகரங்களுக்குள் நுழைவது மிகவும் சிக்கலானது. அந்தந்த நகரங்களுக்கே உரிய தனித்துவ பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். அனைத்துப் பொருட்களின் மீதும் வரி விதிக்கப்படுகிறது. இரண்டாவதாக மிக முக்கியமான ஒன்று இங்கு மருத்துவமனைக்கும், அதனை நிர்வகிப்பதற்கும் பொருத்தமான ஊழியர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இங்கே வேலை செய்வதற்கு விரும்புவதில்லை. பெரிய நகரங்களை நோக்கிச் சென்று விடுவார்கள். எனவே தரமான ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது பற்றியும் அவர்களைத் தக்க வைத்துக்கொள்வது பற்றியும் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் துவக்கவுள்ள மையங்களுக்குப் பொருத்தமான ஊழியர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க மிகவும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் இது மிகவும் சவாலான செயல்தான். அதற்காகவே நான் அமெரிக்காவில் இருந்து எனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்குத் திரும்பினேன் என்று கூடச் சொல்லலாம். ஆக சிறிய நகரங்களில் மையங்களை நிர்வகிப்பதில்எங்கள் மனித வளத்துறை நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது’’ என்கிறார் உப்பல்லா சிரித்தபடி.

மருத்துவப் பகுதியைப் பொறுத்த மட்டில் டயாலிசிஸ் மிகவும் வெளிப்படையானது. ‘’அதற்கான தொழில்நுட்பம் ஜெர்மன் அல்லது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அதற்கான விநியோகஸ்தர்கள் நம் நாட்டைச் சார்ந்தவர்கள். உரிமம் பெற்றுத் தரும் பொறுப்பை தயாரிப்பாளர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். எங்களது இயந்திரங்களில் கதிர்வீச்சுப் பிரச்சனை இல்லை. எனவே இறக்குமதி விதிமுறைகள் அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் அவற்றின் விலை அதிகம். ஒரு இயந்திரம் 7 இலட்சம் பெறுமானது.’’ என்கிறார் உப்பல்லா.

‘’இருந்தபோதிலும் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதால் பண சுமையை சமாளித்து விடுகிறோம் நாங்கள்.அதிகபட்ச கட்டணம் பெறுமான சிகிச்சையை நோயாளிக்குக் குறைவான செலவில் தரவே நாங்கள் எப்போதும் முயற்சிக்கிறோம். அவ்வாறு தற்போது இந்தியாவில் தரக்கூடிய மிகப்பெரிய டயாலிசிஸ் நிறுவனம் ‘நெப்ரோ ப்ளஸ்’ தான். நாங்கள் பெரிய நிறுவனம் என்பதால் எங்களது தேவைக்கேற்ப தரமானவற்றை வெளியில் இருந்து பெற முடிகிறது, தரமான சிகிச்சை அளிக்க முடிகிறது, தரமானவற்றில் முதலீடு செய்ய முடிகிறது. சிறிய அளவில் டயாலிசிஸ் மையங்கள் நடத்துபவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை’’.

இதே காரணத்தால் தான், தரமான மருத்துவ சேவையை அதிகபட்ச சிகிச்சையாளர்களுக்கு வழங்கு வழி செய்யும்,பொது – தனியார் பங்குதாரர் முறையை கடைபிடிக்க தொடங்கினோம். நாங்கள் தொடர்ந்து அரசுடன் இணைந்து சேவையாற்ற விரும்புகிறோம். ஆனால் அரசு தரப்பு நடவடிக்கைகள் மிகவும் நிதானமாகவே இருக்கின்றன. அதிகமான தனியார் பங்குதாரர்களைப் பெற்றிருந்தாலும் அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் எப்போதும் ஆர்வமுடன் இருக்கிறோம். டயாலிசிஸ் மிகவும் செலவீனமிக்கது. அதை ஒருவர் தம் சொந்த செலவில் செய்து கொள்வதென்றால் முடியாத காரியம். அவ்வாறு செய்ய முயற்சித்தால் சிகிச்சைத் தரமோ வாழ்க்கைத் தரமோ அவ்வளவு சிறப்பாக இருக்காது. மக்களின் வாழ்க்கைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றாக வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி நடப்பதில்லை.

எங்களது அடுத்த கட்ட முயற்சி நெப்ரோ ப்ளஸை ஆசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்வது தான். சிறுநீரகப் பாதிப்பு மிகவும் அபாயகரமானது என்று புரிந்து கொள்ளும் அரசுகளின் உதவியுடன் அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் மிகப்பெரிய டயாலிசிஸ் வலைப்பின்னலை உருவாக்குவது தான் எங்களது நோக்கம். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ அறிவியலில் மிகப்பெரிய முன்னேற்றமும், உலகலாவிய அளவில் மக்கள் ஆரோக்கியத்தில் பெரிய பின்னடைவும் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். நாட்பட்ட நோய்கள் அனைத்தும் நாளுக்கு நாள் செலவீனமிக்கதாக மாறி வருகிறது. இதற்கு மத்தியிலும் ‘தரமான சிகிச்சை சாமான்யர்களுக்கு முற்றிலும் எட்டாக்கனியல்ல’ என்பதை நிரூபிக்கும் ஒரு அமைப்பாக நெப்ரோப்ளஸ் விளங்க முடியும் என்பதே எங்கள் நம்பிக்கை என்கிறார் விக்ரம் உப்பல்லா.