தமிழக காவல்துறையின் நிஜ சிங்கம்: நெல்லை உட்பட்ட பல மாவட்டங்களில் குற்றங்களை தடுத்த அதிகாரி!

0

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் அடிக்கடி பிரச்சனைகளும், வன்முறைச் சம்பவங்களும் நடைப்பெற்று வந்தது. குறிப்பாக கந்துவட்டியில் பணம் வசூலிப்பது, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு என்று பலவகைகளில் மக்கள் பலர் அச்சுறுத்தப்பட்டு வந்தனர். சொத்து இல்லாத மக்கள் உள்ளூர் வங்கிகளில் கடன் கிடைக்காமல் இதுபோன்ற தனிநபர்களிடம் கடன் வாங்குவது வழக்கம். வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் அதிகபட்ச வட்டியை செலுத்தியும் வந்தனர்.

கிவிண்ட் செய்தியின் படி, நெல்லையைச் சேர்ந்த வட்டிக்கடைக்காரரிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் கடனாக ஒருவர் பெற்றார். அவரிடம் 15 நாட்களுக்கு ஒருமுறை 15% வட்டி வசூலிக்கப்பட்டது என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் தெரிவித்தார். 

பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்
“நாங்கள் கடன் வாங்கும் போது, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வட்டி அளிக்கவேண்டும் என்று சொல்வதில்லை. கடன் வாங்கிய பின் வேறு வழி இல்லாமல் தருகிறோம். மேலும் வட்டி கொடுத்தவர், சமூகத்தில் வலிமையானவர். கடன் வாங்கியவர் வீட்டு வாசலில் ரவுடிகள் நின்று பணத்தை திரும்ப கேட்டு கத்தி, கூச்சல் போட்டு, அவமானப்படுத்துவதை யாராலும் சகித்து கொள்ளமுடியாது. எங்களை அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள். பாதுகாப்பின்றி உணர்வோம்,” என்றார். 

2008-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் அந்த மாவட்டத்துக்கு வந்தபோதே எல்லாம் சற்று மாறியது. கர்க், அதிக வட்டி வசூலிக்கும் கடன் கொடுப்பவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் இந்த கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து காவல் நிலையத்தில் புகார் செய்ய வைத்தர். அதிக வட்டி கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எல்லா வித நேரடி வழிகளையும் செய்தார் கர்க். 

அஸ்ரா கர்க், தனக்கான பாணியில் ஒரு குழுவை அமைத்து, அதிக வட்டிக்கு கடன் தருவோரை பிடித்தார். தமிழ்நாட்டில் ஆங்காங்கே இருந்த கந்துவட்டி பிரச்சனை ஓரளவு கட்டுக்குள் வந்ததற்கும், அதனால் நிகழ்ந்த குற்றங்கள் பலவற்றை தடுத்தத்தற்கும் அஸ்ரா கர்க் முக்கியக் காரணமாக இருந்தார். 

அது மட்டுமின்றி பல கொலைகளை செய்த குற்றவாளிகளை தேடிப்பிடித்து சிறையில் அடைத்து, ரவுடியிசத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுத்த பெருமை அஸ்ரா கர்கை சாறும். இதனால் திருநெல்வேலி மற்றும் மதுரையில் பல வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட்டது என்றே சொல்லலாம். கர்க், பொதுமக்களுக்கு உதவுவதில் ஆர்வமாக இருப்பார். பிரச்சனை சமயத்தில் தன்னை தொடர்பு கொள்ள தன் போன் எண்ணை தருவார், மேலும் எல்லா காவல் நிலையத்திலும் அந்த எண்ணை வெளியிட்டிருந்தார். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த கர்க், ஒரு எலக்ட்ரிக்கல் எஞ்சினியர். ஐபிஎஸ் தேர்வு எழுதி 2004 பேட்சில் பணிக்கு சேர்ந்தார். திருப்பத்தூர், வேலூர் என்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பணியில் இருந்து பல சாதனைகள் படைத்தவர். தற்போது சிபிஐ-ல் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை: Think Change India