நம்மைப் பிரியும் முன் 4 உயிர்களைக் காத்த செல்லம் யதார்த்

0

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிய யதார்த் உபாத்யாயா இப்போது நம்மிடையே இல்லை. ஆனால், அந்தக் குழந்தையின் இதயம் துடிக்கிறது, கண்கள் விழிக்கிறது, கல்லீரலும் சிறுநீரகமும் தொடர்ந்து இயங்குகிறது. ஆம், யதார்த் இப்போது மற்ற 4 குழந்தைகள் மூலமாக வாழ்கிறான்.

தொடர் காய்ச்சல் மற்றும் மாரடைப்பு காரணமாக, ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் யதார்த் அனுமதிக்கப்பட்டான். அந்த மழலைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை பெற்றோருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். பெற்றோர் ராஜலஷ்மியும், அமித் உபாத்யாயாவும் தங்கள் செல்ல மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர்.

"சில பெற்றோர்களின் குழந்தைகளின் உயிரைக் காப்பதன் மூலம் அவர்களது துயரத்தை நம்மால் போக்க முடியும் என்று என் மனைவியிடம் எடுத்துச் சொன்னேன். மற்ற சிறுவர்கள் மூலம் யதார்த்துக்கு வாழும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தையும் மனைவியும் இதற்கு உறுதுணையாக இருந்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் பெங்களூருவில் இதழியல் மாணவர்களிடம் பகிர்ந்தார் யதார்த்தின் தந்தை அமித்.

சென்னையில் இருந்து வந்த ஐந்து மருத்துவர்கள் மற்றும் ஐந்து நர்ஸ்கள் அடங்கிய குழு, உள்ளூர் மருத்துவர்களின் உதவியுடன் யதார்த்தின் இதயத்தை எடுத்தனர். அந்த இதயம் உடனடியாக 33 மாதக் குழந்தைக்கு பொருத்தப்பட்டது. யதார்த்தாவின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்களும் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன.

பெங்களூர் மிரர் பத்திரிகைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமித் அளித்த பேட்டியில், "மருத்துவ அமைப்பு முறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆனாலும், எங்கள் மகனைப் பிரிய வேண்டிய நிலை. எனினும், இந்த முயற்சியின் மூலம் யதார்த் தன் இறப்புக்குப் பின் சில உயிர்களைக் காக்க முடிந்தது" என்றார்.

யதார்த் இப்போது நம்மிடையே இல்லை. ஆனால், அந்தக் குழந்தையின் வாழ்க்கை, புன்னகை, விளையாட்டு அனைத்துமே தொடர்கிறது. அதன் இதயம் இன்னமும் துடிக்கிறது; விழிகள் இந்த உலகைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அந்தச் செல்லத்தின் பெற்றோர் அமித் - ராஜலஷ்மிக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். தங்கள் துயரங்களைத் தாங்கிக்கொண்டு பிறரது துயரங்களைக் களைய முன்வந்த அதுபோன்ற நல்லுள்ளங்கள் இருப்பதாலேயே இந்த உலகம் இன்னமும் வாழ்வதற்கான சிறந்த இடமாகத் திகழ்கிறது.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்