தடைகளையும், சோதனைகளையும் கடந்த அபிமன்யூவின் தொழில்முனைவு பயணம்!

1

சிறிய நகரமான அதிபூரைச் சேர்ந்த அபிமன்யூ சொவ்ஹானின் கதை உறுதி, விடாமுயற்சி மற்றும் லட்சியத்தின் அடையாளமாக விளங்குகிறது. அவரது தந்தையும் அபிமன்யூ எண்ணங்களுக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்தார்.

தனது கனவை நினைவாக்கும் தீவிர ஆர்வம் காரணமாக அவர் பொருளாதாரம் அல்லது கலை பாடங்களை தேர்வு செய்வதற்கு பதில் தொழில்நுட்ப கல்வியை தேர்வு செய்தார். குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால் அந்த பாட திட்டம் காலத்திற்கு பொருந்தாமல் இருப்பதாக கருதினார். கல்லூரிக்கு வெளியே பட்டறைகளில் தான் புதிய மற்றும் பொருத்தமானவற்றை கற்றுக்கொள்ள முடியும் எனும் நிலையில் அவர் மிகவும் அதிருப்தி அடைந்தார்.

ஆனால் வாழ்க்கை ஒருவர் எதிர்பார்ப்பது போலவே அமைவதில்லை. 2008 ல் அபிமன்யூ தனது மிகப்பெரிய ஆதரவும் பலமுமாக இருந்த தந்தையை இழந்தார்.

“இது எனது பார்வையை முற்றிலுமாக மாற்றியது. ஆர்வங்களுக்கு சுயமாக உண்டாகிய பொறுப்புகள் வழிகாட்டின. பொறியியல் இறுதி ஆண்டில் சி.ஏ.டி தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான வருகை ஆகியவை நிகழ்ந்தன. நான் தான் மூத்தவன் என்பதால் குடும்ப பொறுப்பு எனது தோளில் விழுந்தது” என்கிறார் அபிமன்யூ.

அபிமன்யூவின் கனவுகளை இயக்கும் உந்துசக்தி இப்போது இருக்கவில்லை. குடும்பத்திற்காக வருவாய் ஈட்டும் பொறுப்புடன் மும்பையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் வேலைக்கு சேர்ந்தார். வங்கி மற்றும் நிதி பிரிவில் பணியாற்றியவர் கடன் சார்ந்த அம்சங்களை தெரிந்து கொண்டார்.

“இது நான் பார்க்க விரும்பிய வேலை இல்லை. வாழ்க்கையில் நான் எங்கேயும் செல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். நான் புதுமையானவற்றை செய்ய விரும்பினேன். எனவே வேறு வேலை தேடாமலேயே அந்த வேலையை விட்டுவிட்டேன். வேலையில்லாமலும், தனியாக இருப்பதும் வாழ்க்கையில் உண்மையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை கண்டறிய உதவும் என நம்பினேன்”.

அபிமன்யூ, கட்ச் பகுதிக்கு திரும்பினார். இந்த காலத்தை தனது வாழ்க்கையின் மிகப்பெரிய ரிஸ்க் என்கிறார். "நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன், தினமும் இரவு தூங்க முடியாமல் தவித்தேன். சமூகத்தின் அழுத்தம் மற்றும் எதுவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய நெருக்கடியானது” என்று கூறுபவர் இந்த சூழலிலும், "சவாலான ஒன்றை செய்யவும்”: எனும் தந்தையின் ஆலோசனையை மறந்துவிடவில்லை.

சமூகம், வேறு விதமாக பார்த்தாலும் அவரது அம்மா ஆதரவாக இருந்தார். டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்த போது அவர் மனதில் ஒரு பெரிய எண்ணம் உண்டானது. அதில் விற்பனை ஒரு பகுதியாக இருந்தது. அந்த எண்ணத்தில் மட்டும் கவனம் செலுத்தி அவர் "சாக்ரட்டீஸ்" (Socratees) நிறுவனத்தை உருவாக்கினார்.

தத்துவம் சொல்லும் டி-ஷர்ட்கள்

சாக்ரட்டீஸ் (Socratees ) சுயமாக துவக்கப்பட்ட டி-ஷர்ட் பிராண்டாக இருந்தது. இக்குழு நம்பிய எண்ணங்கள் மற்றும் நவீன கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தரமான தயாரிப்பாக அமைந்தது. தாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு தயாரிப்பு அல்லது வடிவமைப்பும் அதன் பின்னே உள்ள எண்ணத்தை பிரதிபலிக்கும் கதையை கொண்டிருக்கும் வகையில் அமைகிறது என்கிறார் அபிமன்யூ.

“வாடிக்கையாளர்களுக்காக சரியான டி-ஷர்ட்டை வருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். சரியான டி-ஷர்ட் என்பது சரியான வடிவமைப்புடன், ஒரு கொள்கையை கொண்டிருக்க வேண்டும். வழக்கமான ரப்பர் அச்சு இல்லாமல், மென்மையான துணி கொண்டதாக, உறுதியான தையலுடன் துவைத்த பிறகு தோள், கழுத்துப் பகுதி தொய்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

டி-ஷர்ட்கள் மீது அச்சிட்ட வாசகங்களில் இந்த குழு மிகவும் கவனமாக இருந்தது. அவர்கள் வாழ்ந்த கலாச்சாரத்தை அவை பிரதிபலித்தன. வாடிக்கையாளருக்கு பிடிக்காவிட்டால் எளிதாக மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு அளிப்பதாக கூறினர்.

ஃபிளிப்கார்ட், ஸ்னேப்டீல் மற்றும் அமேசான் மூலம் விற்பனை செய்து வரும் இந்நிறுவன குழுவில் ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர். மார்க்கெட்டிங்கிற்கு இக்குழு சமூக ஊடகத்தை நம்பியுள்ளது. மற்ற வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. பெங்களூர் மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற காமிகான் மாநாட்டிலும் நிகழ்ச்சி பாட்னராக பங்கேற்றனர்.

நிறுவனத்தின் பெயர் காரணம் பற்றி கேட்டால் அபிமன்யூ, "எனக்கு எப்போதுமே கிரேக்க பெயர்கள் பிடிக்கும். மேலும் ஒவ்வொரு டி-ஷர்ட்டுக்கும் ஒரு கதை அல்லது கொள்கையை சொல்ல முடியும் என நம்புகிறேன். அதனால் தான் சாக்ரட்டீஸ் பெயரை தேர்வு செய்து அதில் மாற்றம் செய்தோம்” என்கிறார்.

முன்னேற்றம்

கட்ச் பகுதியில் இருந்து செயல்படும் இந்நிறுவனம் நன்றாக செயல்படுவதாக அவர் சொல்கிறார். இதுவரை ரூ.30 லட்சம் மதிப்பிலான டி-ஷர்ட்களை விற்பனை செய்துள்ள குழு, இந்த நிதி ஆண்டுக்கான நிர்ணயித்துக்கொண்ட ரூ.24 லட்சம் இலக்கை கடந்துவிட்டது. கடந்த ஆண்டுடன் (ரூ.10 லட்சம்) ஒப்பிடும் போது இது 200 சதவீத வளர்ச்சியாகும்.

பின்னடைவு

அபிமன்யூ நிறுவனத்தை துவக்கியதும் சிக்கலை எதிர்கொண்டார். நிறுவனத்திற்கு வந்த ஆர்டர்களில் கேஷ் ஆன் டெலிவரியே முக்கிய பங்கு வகித்தது. பெரும்பாலும் கூரியர் நிறுவனங்கள் இந்த தொகையை வசூலித்து 15-30 நாட்களுக்குள் தருவது வழக்கம்.

2014 மார்ச்சில் நிறுவனம் துவங்கிய ஆறு அல்லது ஏழு மாதங்களில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின் மோசமான செயல்பாடு காரணமாக கேஷ் ஆன் டெலிவரி தொகை வந்து சேர்வதில் 3 மாத கால முடக்கம் உண்டானது.

இதனால் சிக்கல் உண்டானது. விற்பனை நன்றாக இருந்த போதும் அவர்களால் இருப்பை அதிகரிக்கவோ புதிய வடிவமைப்பை உருவாக்கவோ முடியவில்லை.விற்பனையில் இல்லாத டி-ஷர்ட்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்று வாடிக்கையாளர்கள் மெயில் மூலம் கேட்கும் நிலை இருந்தது. இதனால் வளர்ச்சி தடைப்பட்டது.

மேலும் அவர்களால் லாஜிஸ்டிக்சை கவனித்த அதே நிறுவனத்துடன் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பதில் அதன் அடிப்படைகளை நிலை நிறுத்துவதில் முழு கவனமும் செலுத்தப்பட்டது.

”சாக்ரட்டீசுக்காக என்று எடுத்து வைத்திருந்த சேமிப்பு முழுவதும் செலவானது. சமூக அழுத்தம் மற்றும் குடும்ப பொறுப்புகள், நெருக்கடி, நடுக்கத்தை அளித்தது. 2014 ஏப்ரலில் எதிர்கால பாதுகாப்பிற்காக பத்திரங்களில் போட்டு வைத்திருந்த பணம் முழுவதையும் எடுத்து வாழ்வா,சாவா நிலைக்கு தள்ளப்பட்டேன். இது சரியாக வராவிட்டால் நிறுவனத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது தான் செய்ய வேண்டும் என நினைத்தேன்’ என்கிறார் அவர்.

ஆனால் விடாமுயற்சி கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். நிறுவனம் புதிய தயாரிப்புகளுக்கு பதில் பிரபலமான மாதிரிகளை மீண்டும் கொண்டு வந்தது. ஜூலை மாத வாக்கில் நிலைமை சீராகத் துவங்கியது. எதிர்பார்த்த நிதியில் 80 சதவீதம் கைக்கு வந்தது. ஆனால் வளர்ச்சி நோக்கில் 3 அல்லது 4 மாத இழப்பு உண்டானது. இருந்தும் நவம்பர் மாத வாக்கில் நிறுவனம் லாபமீட்டத் துவங்கியது.

வளர்ச்சிப்பாதை

வருங்காலத்தில் நிறுவனம் போஸ்டர் போன்ற புதிய பிரிவுகளில் விரிவாக்கம் செய்ய உள்ளது. புதிய வடிவமைப்புகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இது அவர்களை இந்தியாவில் மிகவும் விருப்பப்படும் சுயேட்சை பிராண்டாக உருவாக்கும்.

இந்த பிராண்டுக்கான திட்டம் பற்றி பேசும் அபிமன்யூ "கல்லூரிகளுக்கு விஜயம் செய்து எங்கள் வாடிக்கையாளர்களுடம் மேலும் சிறந்த தொடர்பு கொள்ளவும் அவர்களை புரிந்து கொள்ளவும் முயன்று வருகிறோம். இணைய கடை என்பதால் இணைய சமூகம் மத்தியில் எங்களால் நிலைப்பெற முடிந்திருக்கிறது. ஒவ்வொரு டி-ஷர்ட்டாக தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வழக்கமான கடைகளில் விற்பனை மூலமும் எங்கள் இருப்பை அதிகமாக்க விரும்புகிறோம். சர்வதேச அளவிலான விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

இந்த துறையில் ஆல்மா மேட்டர் ( Alma Mater )போன்ற பிராண்ட்கள் இருக்கின்றன. ஜேக் ஆப் ஆல் திரெட்ஸ் ( Jack of all Threads ) மற்றும் வாக்ஸ்பாப் ( Voxpop) போன்றவை வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளன. நோ நாஸ்ட்டிஸ் மற்றும் பிரவுன் பாய் ஆகியவை ஆர்கானிக் காட்டன் பிரிவில் கவனம் செலுத்துகின்றன. இந்நிலையில் தனித்து நிற்பது அவசியமாகிறது. இவற்றோடு பிரிகல்சர் (Freecutlr) போன்றவை தனிநபர்கள் சொந்த வடிவமைப்பை மேற்கொண்டு தங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்து தொழில்முனைவுக்கு ஊக்கம் அளிப்பதால் போட்டி மிக்க சூழல் இருக்கிறது.

எனவே வளர்ச்சி பாதையில் முன்னேறும் சாக்ரட்டீஸ் போன்ற சிறிய பிராண்ட்களுக்கு புதுமை மற்றும் மாறுபட்ட முயற்சிகள் தனித்து நிற்க அவசியமாக இருக்கிறது.

இணையதள முகவரி: Socratees