நிக் வுஜிசிக்: கைகள் இல்லை, கால்கள் இல்லை, ஆனால் கவலை இல்லை! 

3

நிக் வுஜிசிக்குக்கு 33 வயது. அவர் பிறக்கும்போது கடுமையான பிறவிக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பெயர் போகோமீலியா. குழந்தைக்கு கால்களும் கைகளும் இல்லாமல் இருப்பதுதான் அது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வளர்ந்த நிக், மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் போராட்டத்தைச் சந்தித்தார். பள்ளிக்கு அனுப்பப்பட்ட அவர், பத்து வயதில் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இறுதியில் உடல் ஊனத்துடன் வாழ முடிவுசெய்தார், உடல் ஊனத்துடன் நம்பிக்கையை அடையாளம் கண்டு வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிப்பது பற்றிப் பேச நிக் முடிவுசெய்தார். இந்த கவர்ச்சிகரமான ஆஸ்திரேலியன் தற்போது உலகம் முழுவதும் சென்று பெருங்கூட்டத்தில் பேசிவருகிறார். இதுவரை அவர் 57 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். ஆயிரத்துக்கும் அதிகமான உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய நம்பிக்கையான பேச்சு 1,10,000 க்கும் அதிகமான பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிக், 'லைப் வித்தவுட் லிம்ப்ஸ்' என்ற ஒரு சர்வதேச தொண்டு நிறுவனத்தையும் பிரச்சார இயக்கத்தையும் தொடங்கினார். பெரும் ஊக்கத்துடன் செயல்படுவதற்கான உற்சாகத்தை தம் பேச்சுக்களின் மூலம் அளித்தார். வாழ்க்கையை நிக் கொண்டாடிக் காட்டினார். நிக் ஓவியம் வரைவார், நீச்சலடிப்பார், ஸ்கைடைவ் செய்வார் மற்றும் கடலில் சர்ஃபிங் செய்வார். தன் நினைவுகளை அவர் “லவ் வித்தவுட் லிமிட்ஸ்” என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். அது சர்வதேச அளவில் அதிக விற்பனையான நூலாக இருக்கிறது. கானே மியாஹராவை மகிழ்ச்சியாக திருமணம் செய்து இரண்டு பையன்களுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.

தமிழில்: தருண் கார்த்தி