வங்கி உட்பட 'கதவில்லா' வீடுகளுடன் வியப்பூட்டும் கிராமம்!

1

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் இருக்கிறது ஷானி ஷிக்னாபூர் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள எந்த வீட்டுக்குமே கதவுகள் இல்லை என்பது இந்திய அளவில் மட்டுமல்ல, தேடிப்பார்த்தால் உலக அளவிலும் இல்லை. தங்கள் ஊரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் குடிகொண்டுள்ள இந்துக் கடவுள் ஷானி சிறப்புப் பாதுகாப்பு வழங்குவதாக கொண்டிருக்கிருக்கும் நம்பிக்கைதான், அந்த மக்கள் பாதுகாப்பு விஷயத்தில் போதுமான அக்கறை காட்டாததற்குக் காரணம்.

இந்த நம்பிக்கை குறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கிராமவாசி ஜெயஸ்ரீ கதே அளித்த பேட்டி ஒன்றில், "பல ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் கனவில் வந்த கடவுள் ஷானி, 'உங்கள் வீடுகளுக்கு கதவுகள் வைக்கத் தேவையில்லை; நான் பாதுகாவலுக்கு இருக்கிறேன்' என்றார். அதனால்தான் எங்கள் வீடுகளில் கதவுகள் வைப்பதே இல்லை" என்றார்.

கதவில்லா வீடுகள் என்ற வழக்கத்துக்கு இதன் உச்சமாக, இந்தக் கிராமத்தில் உள்ள யுனைட்டட் கமர்ஷியல் (UCO) வங்கி கூட 2011-ல் இருந்து 'பூட்டில்லாத' கிளையாகவே திறந்து கிடக்கிறது. நாட்டிலேயே கதவு பூட்டப்படாத முதல் வங்கி இதுவாகத்தான் இருக்கும்.

இந்தக் கிராமத்தில் நூற்றாண்டுகளாக திருட்டோ, கொள்ளையோ நடந்ததில்லை என்கிறார்கள். அதேவேளையில், ஒரு வாகனத்தில் இருந்து ரூ.35,000 மதிப்புள்ள ரொக்கமும் பொருட்களும் திருடப்பட்டதாக சாகல் டைம்ஸ் பத்திரிகையில் செய்திப் பதிவானது. அதன்பிறகு, 2011-ம் ஆண்டிலும் ஒரு திருட்டுச் சம்பவம் பதிவாகி இருந்தது. 2012-ம் ஆண்டு ஜனவரில் அந்தக் கிராமத்துக் கோயில் நகையே திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

ஆனால், இந்தச் சம்பவங்கள் எதுவுமே அந்தக் கிராம மக்களை எந்த விதத்திலும் உலுக்கவில்லை. இன்னமும் கதவில்லா வீடுகளுடன் அமைதியான மனநிலையுடன்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

ஆக்கம் - திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்