வீட்டை விட்டு ஓடிய ஜெயராம், வட இந்தியாவின் சிறந்த தோசை, சாம்பார் அளிக்கும் பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஆனது எப்படி? 

0

ஜெயராம் பானன் நீண்ட நெடு பயணத்துக்குக் பின் இந்த இடத்தை அடைந்துள்ளார். சிறு வயதில் கொடுமையான சூழ்நிலைக்கு ஆளான ஜெயராம், தற்போது தன் ப்ராண்டை நிலைநாட்டி வட இந்தியா முழுதும் 30 கிளைகளை கொண்டுள்ளார். நம் நாட்டை தவிர வட அமெரிக்கா, கனடா, பாங்காக், சிங்கப்பூர் என்று உலகெங்கும் கிளைகளை விரிவடைய செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த சிறிய கிராமமான கர்கலாவில் பிறந்து வளர்ந்தவர் ஜெயராம். வட இந்தியாவில் தோசை, இட்லி, சாம்பார் வகைகளை பிரபலப்படுத்திய பெருமை இவரைச் சேரும். தனி ஒரு ஆளாக பிரமாதமான ரொட்டிகளையும், அதற்கு பட்டர் சிக்கன் செய்வதிலும் கைதேர்ந்தவர் இவர். 

ஆனால் இவரது குழந்தை பருவம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. பயம் மற்றும் குழப்பத்திலே வளர்ந்தார் ஜெயராம். தன் அப்பாவிடம் இருந்து எப்போது அடி விழும் என்று தெரியாமல் தினம்தினம் பயந்து வளர்ந்தார். சில சமயம் அவரின் அப்பா ஜெயராமின் கண்களில் மிளகாய் தூளை போட்டு தண்டனை அளிப்பாராம். பள்ளிக்கூடத்தில் படித்திருந்த போது ஒருமுறை தேர்வில் பெயில் ஆனார் ஜெயராம். அப்போது அவருக்கு 13 வயது. இத்தனை கொடுமைகளுக்கு உள்ளான அவர் பெயில் ஆன பயத்தில் தந்தையின் பர்சில் இருந்து பணத்தை திருடி வீட்டை விட்டு ஓடிவிட்டார். 

அங்கிருந்து மும்பைக்கு பஸ் பிடித்து சென்றுவிட்டார். ஒரு தெரிந்தவர் அவரை காப்பாற்றி, மும்பையில் ஒரு கேண்டீனில் ஜெயராமுக்கு வேலை வாங்கித் தந்தார். பன்வேல் எனும் இடத்தில் அமைந்திருந்த அந்த கேண்டீனில் பாத்திரம் தேய்கும் வேலையை செய்தார். கடின உழைப்பிற்கு பிறகும் அவரது முதலாளியிடம் அடி, உதை வாங்குவார். சிலசமயம் செருப்பால் அடி வாங்குவார் ஜெயராம். கென்போலியாஸ் பேட்டியில் கூறிய ஜெயராம்,

“இவையெல்லாம் என்னை கடுமையாக உழைக்க வைத்தது. மெல்ல அங்கே வெயிட்டர் ஆனேன், பின்பு மேலாளார் ஆனேன்,” என்கிறார். 

இத்தனை அனுபவங்களுக்கு பிறகு தான் யாருக்கு கீழும் பணிபுரிய விரும்பவில்லை என்பதை உணர்ந்தார். மும்பையில் ஒரு தென்னிந்திய உணவகம் தொடங்கும் எண்ணத்தை கொண்டிருந்தார் ஜெயராம். ஆனால் ஏற்கனவே அங்கே பல இருந்ததால், டெல்லியில் இதை தொடங்க முயற்சித்தார். அப்போது தரமான தோசை விலை அதிகமாக விற்கப்பட்டது. அதை மாற்றி அமைக்க முடிவெடுத்தார் ஜெயராம். 

“சிறந்த தரமான தோசை வகைகளை ஹல்வா விலையில் விற்க முடிவு செய்தேன்,” என்றார். 

1986 இல் தன் முதல் கடையை திறந்தார். ஒரு நாளைக்கு 470 ரூபாய் வருமானம் கிடைத்தது. வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ததாலும், பலவகைகளை மெனுவில் சேர்த்ததாலும் கூட்டம் இவரது கடையை தேடி வரத்தொடங்கியது. ‘சாகர் என்று இவர் தொடங்கிய ஹோட்டலின் புகழ் அருகாமை பகுதிகளில் பரவத்தொடங்கிற்று. 

நான்கு ஆண்டுகள் கழிந்து, லோதி ஹோட்டல் என்ற உயர் தர ஹோட்டல் ஒன்றை திறந்தார் ஜெயராம். டெல்லியிலேயே தங்கள் ஹோட்டலில் மட்டுமே ருசியான சாம்பார் கிடைப்பதாக பெருமை கொள்கிறார் அவர். பின்னர் ’ரத்னா’ என்ற பெயரை சேர்த்து, ‘சாகர் ரத்னா’ என்று தனது ஹோட்டல் ப்ராண்டை நிறுவினார். இதன் புகழ் பலமடங்காக உயர்ந்து நகரெங்கும் பரவியது. 

இன்றும் அவர் தன் தொழிலை தெய்வமாக கருதுகிறார். அங்கே உணவு உண்பதில்லை. ஹோட்டலில் மக்களுக்கு மட்டுமே சேவை அளிக்க விரும்புகிறேன் என்பார். காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து ஹோட்டல் செல்லும் அவர் இரவு தான் வீடு திரும்புவார். தனது எல்லா கிளைக்களுக்கும் தினமும் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெயராம் அந்த விஷயத்தில் கறாராக இருப்பார். ஒரு ஈ கூட உணவக சமையலறையில் இருப்பதை விரும்பமாட்டார். டிபன் மட்டுமே தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டை போக்க, ‘ஸ்வாகத்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கி அங்கே கடலோர உணவுவகைகளை வழங்குகிறார். அதுவும் நல்ல லாபத்தை ஈட்டுகிறது. 

ஜெயராம் பானன், தைரியம், கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மட்டுமே வெற்றியை அடைந்தவர். பல தொழில்முனைவோர்களுக்கு இன்றளவும் ஊக்கமாக திகழ்ந்து வருகிறார். 

கட்டுரை: Think Change India