இடைத்தரகர்களை நீக்கி விவசாயிகளுக்கு உதவும் ஓரிகோ கமாடிட்டீஸ்!

0

ஓரிகோ கமாடிட்டிஸ் (Origo Commodities) 2010ம் ஆண்டில் சுனூர் கவுல் மற்றும் மயக் தனுகாவால் தொடங்கப்பட்டது. சுனூரும் மயங்க்கும் பள்ளிக் கூட நண்பர்கள். டெல்லி ஐ.ஐ.டியிலும் (I.I.T) இருவரும் ஒன்றாகத்தான் படித்தார்கள். இருவரின் பின்னணி குறித்தும் பேசும் மயன்க், “ஐ.ஐ.டி முடித்தபிறகு நிதி நிறுவனம், வங்கி முதலீடு என்று பல்வேறு துறை பணிகளில் நான் இருந்துள்ளேன். எட்டு வருடங்கள் ஒரு வங்கியாளராகப் பணியாற்றினேன். இந்தியாவில் நான் எனது கேரியரைத் தொடங்கி ஒரு வருடம் இருந்தேன். பிறகு ஹாங்காங் சென்றேன். பின்னர் கொலம்பியாவில் உள்ள பிசினஸ் ஸ்கூலில் படித்தேன். நியூயார்க்கில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். பிறகு 2009ல் இந்தியா திரும்பினேன். சுனூரின் பாதை கொஞ்சம் வித்தியாசமானது. ஐ.ஐ.டி முடித்ததும் அவர் ஜெனரல் எலக்ட்ரிக்கல் (GE) நிறுவனத்தில் பணி புரிந்தார். அதன்பிறகு மிச்சிகனில் எம்.பி.ஏ முடித்து விட்டு என்னைப் போலவே நிதி நிறுவனம் நடத்தினார்.” என்கிறார் மயன்க்.

இருவரும் நியூயார்க்கில் லாபகரமான பணிகளைச் செய்து கொண்டிருந்த போது, அடிக்கடி இந்தியா வருவது குறித்து பேசிக் கொண்டனர். இங்கு வந்து சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர். ”நாங்கள் செய்யப் போவது மனசுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும் என்றும் ஏதேனும் நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்பினோம். ஆனால் அது என்ன என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நாங்கள் குறிவைக்கவில்லை. ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும். அது லாபகரமாக, நல்ல விளைவை ஏற்படுத்தக் கூடியதாக ஒரு நாள் மிகப்பெரும் தொழிலாக அது வளரக் கூடியதாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம்” என்கிறார் மயன்க்

2009ல் இந்தியா திரும்பியதும் மயன்க்கும் சுனுரும், பொதுவாக தொழில் அதிபர்கள் செய்வது போல இல்லாமல் புதிய தொழில்கள் குறித்து ஆலோசித்தனர். இந்தியாவுக்கு திரும்ப வேண்டும், நன்கு ஆய்வு செய்து தங்களுக்குப் பொருத்தமான, நல்ல விளைவை ஏற்படுத்தக் கூடிய, அதே சமயத்தில் லாபகரமான ஒரு புதிய யோசனையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது.

“முதலில் இந்தியாவின் சந்தை மற்றும் இங்குள்ள நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்பினோம். பத்து ஆண்டுகளாக நான் வெளிநாட்டில் இருந்தேன். சுனுரும் ஐந்தாறு வருடம் வெளிநாட்டில்தான் இருந்தார். எனவே எது நமக்குப் பிடித்த லாபகரமான தொழில் என்பதைப் பற்றியே நாங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. கல்வி, மருத்துவம் இன்னும் இது போன்ற பல்வேறு துறைகளில் எங்களுக்கு நிறைய யோசனைகள் இருந்தது. ஆனால் அந்தத் துறைகளில் ஏற்கனவே நிறையப் பேர் இருந்ததால் அது எங்களைக் கவரவில்லை.” என்கிறார் மயன்க்.

“நாங்கள் வித்தியாசமான அதே சமயத்தில் ஒரு மிகப்பெரும் தொழில் பற்றி யோசித்தோம். அந்தக் காலத்தில் நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ‘என்ன நாடு இது” என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு நிதியுதவி செய்யும் வேர்ஹவுஸ் ரெசிப்ட் பைனான்ஸ் யோசனையை பிடித்தோம். விவசாயப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளில் உள்ள பொருட்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நிதியுதவி செய்ய (கடன் கொடுக்கும்) முடிவு செய்தோம். இது எங்களுக்கு ஒரு விதமான ஆர்வத்தைக் கொடுத்தது. எனவே இதை பற்றி ஆழமாக ஆய்வு செய்தோம். இது எங்களது தகுதிக்குப் பொருத்தமானது என்பது மட்டுமல்ல, யாரும் இதுவரை செய்யாதது என்பதையும் கண்டறிந்தோம். எங்களுக்குப் பொருத்தமான, லாபகரமான, நல்ல தாக்கத்தைச் செலுத்தக் கூடிய நன்கு வளரக் கூடிய ஒரு தொழில்.” என்று தெரிந்து கொண்டதாக மயன்க் விளக்குகிறார்.

கிடங்குகள் நடத்தும் வாடிக்கையாளர்களுடன் தொழில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஈடுகடன் வழங்கும் கொலேட்ரல் மேலாண்மை (collateral management)க்கு தொழில் விரிவுபடுத்தப்பட்டது. விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்வது மற்றும் தேவையின் பேரில் அதை விற்பனை செய்வது சமீபத்திய வளர்ச்சி. சமீபத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவவும் அவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், "நெகோஷியபுள் வேர்ஹவுஸ் ரெசிப்ட் நிதியுதவி" (Negotiable Warehouse Receipt financing) எனும் முறையின் கீழ் விளை பொருட்களுக்கு ஈடாக முன்பணம் தரும் முயற்சியை துவக்கினோம். நபார்ட்(NABARD) வங்கியுடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முன்முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.” என்கிறார் உற்சாகமாக மயன்க்.

இதுவரையில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் இந்த முறையைக் கற்பித்திருக்கின்றனர். “அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உதவி நிறுவனம்" என்று இப்போது நாங்கள் எங்களை அழைத்துக் கொள்ள முடியும். எங்களது உச்சபச்ச இலக்கு இடைத் தரகர்களை முற்றாக நீக்கி விட்டு உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைப்பதுதான். இப்போதைக்கு உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே சுமார் ஆறு அல்லது ஏழு இடைத்தரகர்களாவது இருக்கின்றனர். இதுதான் விநியோக முறையில் ஏராளமான குளறுபடிகளை உருவாக்குகிறது. மிகப்பெரும் சுயநல சக்திகளோடு போராடுவது, ஒரு சவால்தான். ஆனால் இடைத்தரகர்களை நீக்கி விட்டால் பிறகு எல்லோரும் பயன் பெறுவார்கள்” என்கிறார் மயன்க் ஒருவித நம்பிக்கையோடு...

தற்போது ஓரிகோ கமாடிட்டீஸ், 16 மாநிலங்களில் சுமார் 350க்கும் மேற்பட்ட கிடங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது. விதவிதமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதை நடத்துவதில் சவால்களும் இருக்கின்றன. “இது மிகவும் சவாலான தொழில். விவசாயத் தளவாடங்கள் சார்ந்த தொழில். தளவாடங்கள் சார்ந்த மற்ற தொழில்களைப் போலவே இதற்கும் தேவையான நடவடிக்கைகளை சரியான இடத்தில் செயல்படுத்துவதற்குரிய ஒரு வலிமையான செயல்முறை தேவை. சுயநலத்தை எதிர்த்து எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பிறருக்கான ஒரு பணியைச் செய்ய முயற்சிக்கிறோம். அதற்கான செயல்பாடுகளை முழுத் திறனோடு செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறோம். இந்த சுயநல சக்திகளோடு போராடுவது எப்போதுமே சவாலானதுதான். இந்த நடைமுறையை மாற்றுவது, ஒரு நீண்ட அதே சமயத்தில் கடினமான பயணம்” என்கிறார் மயன்க்.

எதிர்காலத் திட்டம் பற்றிப் பேசும் போது, “விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கும் சேவையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கச்சிதமான இணைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான சேவைகளை - உற்பத்திப் பொருட்களைப் பாதுகாப்பது, நிதி அல்லது இது போன்ற மதிப்பிற்குரிய சேவைகளை - பெறுவதற்குரிய கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அது சாத்தியமாகும். இந்தச் செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்து விட்டால், அதன்பிறகு தானாவே இடைத் தரகர்கள் நீக்கப்பட்டு விடுவார்கள். எது எப்படியாயினும் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது” என்கிறார் மயங்க்.