எப்போதும் தூங்காமல் விழித்திருந்து கண்காணிக்கும் ‘வாட்ச்மேன்’

0

'ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ்' StomatoBot Technologies’ வாட்ச்மேனின் முக்கிய நோக்கமே தற்போது சிசிடிவிக்கள் செய்யத் தவறுவதை, அதாவது சம்பவ இடத்தை அவை கண்காணிப்பதில் ஏற்படும் முக்கிய குறைபாடுகளைக் களைவதே ஆகும்.

இரவுப் பணியில் உள்ள காவலர்கள் சமயங்களில் உறங்குவது தவிர்க்க இயலாததே. மனிதர்களே தவறு செய்யும் போது, சிசிடிவி கேமராக்களும் சமயங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முக்கிய தருணங்களை பதிவு செய்யத் தவறுவதை சொல்லிப் பிழையில்லை. ஏடிஎம் கொள்ளைகள் இதற்கு நல்ல உதாரணம். ஆனால், இந்த நிலை இனி நீடிக்கத் தேவையில்லை. அதற்கு நல்லத் தீர்வாக அமைந்துள்ளது தான் ‘வாட்ச்மேன்’.

ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் நிறுவனர்கள்
ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் நிறுவனர்கள்

வாட்ச்மேன் என்றதும் மனிதர்கள் என நினைக்க வேண்டாம். இது ஒரு கம்யூட்டர் விஷன் ப்ராடக்ட் ஆகும். சிசிடிவியில் பதிவுவாகும் காட்சிகளை உடனுக்குடன் செல்போனில் எச்சரிக்கைச் செய்தியாக பெற முடியும் என்பதே இந்த ‘வாட்ச்மேன்’-னின் தனிச்சிறப்பு.

நீண்டகால ஆய்வுக்குப் பின், ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் கடந்த 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே, மனிதர்களைவிட சிறப்பாக கண்காணிக்கும் வகையில் இயந்திரங்களை நிர்வகிப்பது தான்.

“எங்கள் வாட்ச்மேன் ஒருபோதும் தூங்குவதில்லை” என தங்களது சேவை குறித்து நம்பிக்கையுடன் பேசுகிறார் ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ்-ன் துணை நிறுவனர் ஆனந்த் முக்லிகர்.

மெடிக்கல் இமேஜ் பிராசசிங் மற்றும் கம்யூட்டர் துறையில் சுமார் எட்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர் ஆனந்த். மனித உயிர்களைப் பாதுகாக்கும் வேலை தொடர்பான நிறுவனத்தை தொடங்குவதே அவரது கனவாக இருந்தது. ஆனால், மருத்துவத்துறை தொடர்பான நிறுவன தொடக்கத்திற்கு பல்வேறு கட்ட அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்திருந்தார். எனவே, மனித உயிர்களைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு யோசனைகளை கனவாகக் கொண்டிருந்த அவர், தானியங்கி முறையில் சிசிடிவி மூலம் கண்காணிக்கும் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்குவது என முடிவெடுத்தார்.

அதன்மூலம், திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களின் போது ஆதாரமாக பயன்படக்கூடியதாக மட்டுமில்லாமல், முன்கூட்டியே அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்டவரை உஷார் படுத்த முடியும் என அவர் நம்பினார்.

“இந்தியாவில் சரிசமமான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லை என்பதை நான் தெரிந்து கொண்டேன். எனவே எனது சாப்ட்வேர் மூலம் இந்தியாவை ஒரே மாதிரியான பாதுகாப்பு கேடயத்திற்குள் கொண்டுவர வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் ஆனந்த்.

உடனடியாக செயலில் இறங்கிய ஆனந்த், தனது மனைவி ராஜஸ்ரீ முக்லிகருடன் இணைந்து தனது ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தொடங்கி, ‘வாட்ச்மேனை’ அறிமுகப்படுத்தினார்.

தானாக செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு மூலம் செல்போனில் உடனுக்குடன் எச்சரிக்கைகளை அனுப்பி, சாதாரண சிசிடிவி கேமராக்களையும் அதன் திறனைவிட அதிக மேம்பாட்டோடு செயல்பட வைத்ததற்காக, ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் நிறுவனமானது யுவர்ஸ்டோரியின் டெக்30 2017 பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்வான் இந்த ‘வாட்ச்மேன்’?

மற்ற சிசிடிவி கண்காணிப்புகளில் இருந்து பல்வேறு விதங்களில் வேறுபட்டது இந்த வாட்ச்மேன். அதேபோல், சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள அறையில் வெளிச்சம் குறைவாகும் போதும், சிசிடிவி லென்ஸ்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போதும் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் செல்போனிற்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். அதுமட்டுமின்றி மின்தடை, தொழில்நுட்ப கோளாறு, கேமரா வியூவில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும்கூட, இந்த வாட்ச்மேன் எச்சரிக்கை செய்வான்.

கண்காணிப்பு எல்லையை பயனீட்டாளரே நிர்ணயிக்கும் வகையில் இந்த செயலி வடிவகைப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டும்போது, பயனீட்டாளருக்கு எச்சரிக்கை செய்தி வந்துவிடும். இந்த வாட்ச்மேன் வாகனங்களை எண்ணுவது மட்டுமின்றி, அதை வகைபடுத்துவதிலும் கைத்தேர்ந்தவன். இவை அனைத்துக்கும் மேலாக, எந்த இடத்தில் இருந்தாலும், வாட்ச்மேன் செயலி வழியாக, சிசிடிவி காட்சிகளை நேரடியாக பார்க்கலாம்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், உடனுக்குடன் மொபைல் அலர்ட் செய்யும் வசதி வாட்ச்மேனில் மட்டுமே உள்ளது என்கின்றனர் இந்நிறுவனத்தினர். மேலும், பல சிக்கல்களை கொண்ட இந்தத் துறையில் கால்பதிப்பது மிகவும் கடினம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது இந்நிறுவனத்தில், இரண்டு துணை நிறுவனர்களும், ஏழு புதுமுக ஊழியர்களும் உள்ளனர். வாகன தணிக்கையில் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக, புனே அரசு நிர்வாகத்துடன் ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் பேச்சுவார்தையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால திட்டங்கள்

முக அடையாளம், வண்டி எண்ணைக் கண்டறிவது உள்ளிட்ட வசதிகளை எதிர்காலத்தில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது இந்நிறுவனம். அதேபோல், பதிவு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் காட்சிகளை சுருக்கமாக தரும் வசதியும் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

ஆரம்பகாலத்தில் ரூ.4 லட்ச முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு, இங்கிலாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு முறை நிதியுதவி கிடைத்துள்ளது. இந்தாண்டு மே மாதம் தனது இந்திய காப்புரிமைக் கோரி விண்ணப்பித்துள்ளது ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் நிறுவனம்.

பாதுகாப்பான உலகை உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதுபற்றி உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தும் பணியில் ஸ்டோமாடோபாட் டெக்னாலஜிஸ் ஈடுபட்டு வருகிறது.

ஆங்கில் கட்டுரையாளர்: ஹனி மேத்தா