ராஹுல் திராவிட் - விளையாட்டையும் தாண்டி ஒரு மரியாதைக்குரிய மனிதராக பார்க்கப்படுவது ஏன்?

3

ராஹுல் திராவிட். கிரிக்கெட் உலகில் நாம் அனைவரும் அறிந்த ஒரு எளிமையான பண்பான மனிதர். அவர் ஒரு சிறந்த ஜெண்டில்மேன் என்று தன் விளையாட்டு மூலமும், வாழ்க்கையின் மூலமும் நிரூபித்து வாழ்பவர். அவரது நேர்மை, உழைப்பு, திறமை கிரிக்கெட்டில் அவரை உயரிய இடத்திற்கு கொண்டு சென்றது. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின்னரும் இவரின் தன்னடக்கத்தால் பலரை திரும்பிப்பார்க்க வைப்பவர்.

விமான பயணத்தில் எக்கனாமிக் வகுப்பில் செல்வது முதல், தன் கேஸ் புக்கிங்கை ஏஜென்சிக்கு நேரடியாக சென்று அவரே செய்து கொள்வது வரை ஒரு சராசரி மனிதனைப் போல வாழ்ந்து வருகிறார் திராவிட். மேலும் வெளியூர் பயணம் செல்லும்போது இரண்டே சட்டைகளுடன் பயணித்து அதை மாறி மாறி பயன்படுத்தும் அளவிற்கு சிம்பிளான இவரை யாரும் வெறுக்கவே முடியாது. 

அண்மையில் ஒரு பெங்களூர் பல்கலைகழகம் ராஹுல் திராவிட்டுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்தது. ஆனால் அவரோ அதை மறுத்துவிட்டு, நான் விளையாட்டுத் துறையில் ஆராய்ச்சி செய்து நேரடியாக முனைவர் பட்டம் பெறவே விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார். 2014-ல் குல்பர்கா பல்கலைகழகத்தின் அதே கோரிக்கையையும் அவர் மறுத்தவர். இதுபற்றி மனம் திறந்து பேசிய திராவிட்,

“நானே ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பெற விரும்புகிறேன். என் தாயார் அவரது 55-வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றார், அறுவை சிகிச்சை மருத்துவரான என் மனைவி விஜேதா ஏழு ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பின் பட்டத்தை பெற்றார்.”

சொந்த அனுபவத்தின் காரணமாக முனைவர் பட்டத்தை ஒருவர் உழைத்து பெறவேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று விளக்கியுள்ளார் திராவிட். எனக்கு பலமுறை அந்த வாய்ப்பு வந்தும் நான் மறுத்ததற்கு இதுவே காரணம் என்றார்.

ராஹுல் திராவிட், பல சமூக முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர். அவரது தாய் புஷ்பா திராவிட் இது குறித்து தி ஹிந்து பேட்டியில் கூறியபோது,

“திராவிடின் முழு வாழ்க்கை கிரிக்கெட்டுடன் இணைந்துள்ளது. அதைத் தாண்டி அவர் தன் பங்கிற்கு சமூக தேவைக்காக நிதி சேர்ப்பதற்கு பணிகள் செய்வார். கிரிக்கெட்டை பொறுத்தவரை விளையாட்டை தவிர அவரால் அதைப்பற்றி நன்றாக எழுதமுடியும் மேலும் கமெண்டேட்டர் ஆகமுடியும். அவர் ஒரு அற்புதமான மனிதர், பல சமூக பணிகளை அவர் அமைதியாக செய்து கொண்டிருக்கிறார்,” என்றார்.

ஒரு முறை மைசூர் ஜூவிற்கு ஒரு லட்ச ரூபாய் நண்கொடையாக கொடுத்து, இரண்டு சீட்டாக்களை தத்தெடுத்துக் கொண்டார் திராவிட். பெங்களுரு போக்குவரத்து துறையில் சிறப்பு வார்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

“இது எனக்கு புதிய பொறுப்பு. என் பணியை சரியாக செய்வேன் என்று நம்புகிறேன். போக்குவரத்து துறையுடன் கைக்கோர்த்து அவர்களுக்கு உதவி புரிவேன்,” என்று தெரிவித்தார் திராவிட். 

விளையாட்டு மட்டுமின்றி வாழ்க்கையிலும் வெற்றிபெற்றவராக திகழ திராவிடின் நற்குணங்களே முக்கியக் காரணங்களாக இருக்கிறது. பிரபல கிரிக்கெட் வீரர் ப்ரெட் லீ ஒருமுறை திராவிடை பற்றி கூறுகையில், “திராவிட்டுடன் உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்,” என்றார். 

கட்டுரை: Think Change India