போன், லேப்டாப்பில் பழுதா? வீட்டிற்கே வரும் 'repairmygadget' சேவை!

0

அன்குர் குப்தா மாதத்திற்கு 10 போன்களையாவது உடைக்கக்கூடியவர். போனை சரி செய்ய டெல்லியிலுள்ள நேரு பகுதிக்கு அடிக்கடி சென்றதன் விளைவாக போனை சரி செய்யும் சூட்சுமம் இவருக்கே அத்துபடி ஆகியிருக்கிறது. இது இவரது நண்பர்கள் வட்டாரத்தில் நல்ல புகழை தேடியும் கொடுத்திருக்கிறது.

24 வயதாகும் அன்குர். 'ரிபேர்மைகேட்கெட்.இன்' RepairmyGadget.in நிறுவனத்தின் இணை இயக்குனராக இருக்கிறார். இந்நிறுவனம் பெங்களூரில் உள்ள கேட்ஜெட்டுகளை சரிசெய்யும் நிறுவனம் ஆகும். அமிதி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவிட்டு, பிறகு நார்சி மோன்ஜி பயிற்சியகத்தில் மேலாண்மை படித்திருக்கிறார். இதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்கிறார்.

அடிக்கடி ரிப்பேர் கடைகளுக்கு சென்ற அனுபவம் பெற்றவரான அன்குர் அதில் சில குறைபாடுகளை கண்டறிந்திருக்கிறார். அவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும், ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை வசூலிப்பதாகவும் தெரிவிக்கிறார். சமயங்களில் சின்ன பழுதுக்கெல்லாம் கூட மிக அதிக கட்டணம் வசூலிப்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறார். இதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக ரிபேர்மைகேட்கெட்.இன் நிறுவனத்தை தன் அறை நண்பரான அஸ்வானியுடன் இணைந்து துவங்கினார். அஸ்வானி இதற்கு முன்பு க்விக்சில்வர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

என் கேட்ஜெட் சேதம் அடைந்தபோது கட்டுப்படியாக கூடிய விலையிலான தரமான பழுதுநீக்கச் சேவையை வழங்கும் கடையை தேடினேன். ரிப்பேர் கடைகளில் 15 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு என் மொபைல் வீணானது தான் மிச்சம். ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் வெளிப்படையான சேவையை வழங்கக்கூடிய நிறுவனத்திற்கான தேவை இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நூற்றுக்கணக்கான நண்பர்களிடம் இந்த ஐடியாவை சொல்லி அவர்களும் உறுதிப்படுத்திய பிறகு தான் கேட்ஜெட் சரிசெய்யும் சந்தையில் இறங்க தீர்மானித்தேன்.

வேலைக்கு ஆள் தேடுவது அன்குருக்கு சிரமமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஓஎல்எக்ஸ் தளத்தில் இவரது விளம்பரத்தை பார்த்து ஜாகிர் ஹுசேன் என்ற பழுதுநீக்கி இவரை தொடர்புகொண்டார். அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர், பழுதுநீக்க தொழில்நுட்பத்தில் 17 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர்களோடு இணைய தீர்மானித்தார். இப்போதைக்கு இவர்களின் பெங்களூரு குழுவில் எட்டு பேர் இருக்கிறார்கள். ரோட்ரன்னர் மற்றும் பார்சல்ட்.இன் ஆகியவர்களின் மூலம் நகர் முழுவதிலும் சேவை செய்கிறார்கள்.

பழுதுநீக்குபவர் மிக சொற்பமான சம்பளத்தில் வேலை செய்கிறார், ஆனால் நிறுவன முதலாளியோ கொழுத்த பணம் பார்க்கிறார் என்பதை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. கேட்ஜெட் உலகத்தில் வாடிக்கையாளர் தன் பொருளை சரி செய்ய கட்டாயம் கடைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அங்கும் மிகப்பெரிய பணம் செலவிட வேண்டி இருக்கிறது. உள்ளூர் கடைகளில் பணம் மற்றும் தரத்தில் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக ஒரு புகார் அடிக்கடி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பழுதுநீக்கி பற்றிய எந்த வரலாற்றுத் தகவலும் இங்கே முறையாக இல்லை.

வாடிக்கையாளர் தன் கேட்ஜெட் விபரம் மற்றும் அதன் பாதிப்புகளை பற்றி ஆன்லைனில் பதிவு செய்தபிறகு அந்த தகவலை பார்க்கும் சேவை வழங்கி அந்த வாடிக்கையாளரை தொடர்புகொள்கிறார். வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று கேட்ஜெட்டை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தற்காலிகமான ஒரு போனை வழங்குகிறார்கள். அவரது பொருள் அடுத்த 48 மணிநேரத்திற்குள் சரிசெய்துத் தரப்படுகிறது அதுவும் 2 மாத வாரண்டியுடன். டெலிவரி செய்யும்போது பணம் செலுத்தும் வசதியையும் இவர்கள் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் மற்றும் லேப்டாப் உட்பட 1.5 மில்லியன் கேட்ஜெட்டுகள் இருக்கும் தேசத்தில் நாம் இருக்கிறோம். 90 சதவீத பிரச்சினைகள் போன்திரையில் சேதம் காரணமாக வருகிறார்கள், அதற்குச் சராசரியாக 1,500ரூபாய் வரை ஆகும். நிச்சயமாக இது பில்லியன் டாலர் சந்தை வாய்ப்பு என்பதை நாங்கள் அடித்து சொல்கிறோம். இந்த பி2பி சந்தை மிகப்பெரிய வாய்ப்பை கொண்டிருக்கிறது

வெறும் நான்கு மாதங்களில் 2,500க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்று பழுதுநீக்கம் செய்து தந்திருக்கிறார்கள். மாதந்தோறும் 40 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டுகளில் இரண்டாம்கட்ட மூன்றாம் கட்ட நகரங்களிலும் சேவையை விரிவாக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஈகாமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்து தங்கள் சேவையை வழங்கும் எண்ணத்திலும் இருக்கிறார்கள்.

ஒரு பொருள் பழுதாகிவிட்டால் பணத்தை மட்டும் பிரதானமாக யாரும் பார்ப்பதில்லை, அதை சரிசெய்ய எவ்வளவு காலம் ஆகும் என்பதும் மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே தான் 'ரிபேர்மைகேட்ஜெட்.இன்' தற்காலிகமாக பயன்படுத்த ஒரு கேட்ஜெட்டை வழங்குகிறார்கள். இவர்களின் இந்த சேவை வெற்றி பெறுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

இணையதள முகவரி : repairmygadget

ஆங்கிலத்தில் : ADITYA BHUSHAN DWIVEDI | தமிழில் : Swara Vaithee