ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ’ஐபோன் 7’ மற்றும் ‘ஐபோன் 7ப்ளஸ்’ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 

0

'ஆப்பிள்' அறிமுகப்படுத்தியுள்ள 'ஐபோன் 7' மற்றும் 'ஐபோன் 7ப்ளஸ்’- நேற்று வரை உலகமே இதற்காகக் காத்திருந்தது. இணையம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி என பார்த்த இடமெல்லாம் இதைப்பற்றிய விவாதங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தில் சிஇஒ டிம் குக், கலிபோர்னியாவின் 'தி பில் க்ராஹாம் சிவிக் ஆடிடோரியம்' மேடையில் ஏறியவுடன் உலகெங்கும் ஆர்ப்பரிப்பும், கரகோஷங்களும் எழுந்தன. சுமார் 2 மணி நேரத்திற்கு டிம் மற்றும் ஆப்பிள் நிறுவன மேலதிகாரிகள், தங்களது புதிய அறிமுக பொருட்களை வெளியிட்டு விளக்கினர். கடந்த ஆண்டு முழுதும் இந்த தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இவர்கள் நேற்று அதை சந்தையில் வெளியிட்டனர். இத்தனை கோலாகலம் கண்ட புதியவகை ஐபோன்'களில் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்...

புதிய 'ஐபோன்' களில் அதிநவீன கேமரா, அதிகநேரம் தாங்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட பேட்டரி பவர், அற்புதமான ஸ்பீக்கர்கள், பல வண்ணங்கள் வெளிப்படுத்தக்கூடிய கேமரா மற்றும் திரை, மாறுப்பட்ட டிசைன்கள் மற்றும் தண்ணீர்- தூசு தாங்கும் விதத்தில் புதிய வடிவமைப்பு. 'ஐபோன் 7' மற்றும் 'ஐபோன் 7ப்ளஸ்' உலகெங்கும் 25 நாடுகளில் செப் 16 முதல் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்:

மேம்படுத்தப்பட்ட கேமரா   

புதுவகை ஐபோன்கள் அதிநவீன, மேம்படுத்தப்பட்ட கேமராவை கொண்டுள்ளது. 12 மெகா பிக்செல் கொண்ட இந்த கேமரா, 'கண்களுக்கேற்ற படங்களை உறுதிப்படுத்தல்' (optical image stabilisation) முறை, 6 பகுதி லென்ஸ் மற்றும் 1.8 அபெர்ச்சர் என்று ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7ப்ளஸ் கொண்டுள்ளது.

ஐபோன் 7ப்ளஸ் போனில், வைட் ஆங்கில் கேமராவும், ஐபோன் 7' இல் டெலிபோட்டோ கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கண்களால் 2 முறை ஜூம் வசதியும், டிஜிட்டலில் 10முறைகள் அதிக ஜும் வசதியும் இதில் உள்ளது. 

டிஎஸ்எல்ஆர் கேமரா செய்யக்கூடிய முக்கிய செயல்பாடுகள் அனைத்தையும் புதுவகை ஐபோன்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் செய்யும் அளவு இந்த ஆண்டு இறுதியில் மேம்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். 

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஐபோனில் உள்ள கேமராக்கள் தெள்ளத்தெளிவான, பல வண்ணங்களையும் வெளிப்படுத்தக்கூடிய எச்டி தரத்தில் படங்களை எடுக்கும் என்றும், இது ஐபோன் 6' போன்களில் எடுத்த படங்களை காட்டிலும் 50சதவீதம் பளிச்சென்று இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். செல்பி எடுக்கும் போதும் தானாக படங்களை சரிசெய்து எடுக்கும் என்றனர். இதன்மூலம் சிறந்த செல்பி'க்களை, புதிய ஐபோன்களில் எடுக்கமுடியும் என்று தெரிகிறது. 

கூடுதல் பேட்டரி நேரம்

மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஏ10 வகை சிப்'களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்ட பேட்டரிகள் அதிகநேரம் உழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. இது ஐபோன் 6' விட, இரண்டு மடங்கு வேகமாக செயல்படும். கிராபிக் படங்கள் வரும்பொழுதும் திறம்பட இயங்கி, ஐபோன் 6 காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக செயல்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அதைவிட குறைந்த பேட்டரி செலவே இதற்கு ஆகும் என்பது கூடுதல் சிறப்பு. 

ஒலியின் சிறப்பம்சம்

புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 6’ விட இதில் இரண்டு மடங்கு சத்தம் அதிகமாக கேட்கும், குரலின் தரமும் சிறப்பாக இருக்கும் என்றுள்ளனர். இதனுடன் வரும் காதுகேள் கருவியும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள மற்றொரு கருவி- வயரற்ற காதுகேள் கருவி (wireless headphones). இது தொழில்நுட்ப அடிப்படையில் வயர்லெஸ் முறையில் உபயோகிக்க சுலபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெட்போன்கள் அதிகமாக உபயோகிப்போர் அதன் வயர்களுடன் கஷ்டப்படுவதை போக்க இந்த வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7ப்ளஸ்; வெள்ளி, தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய நிறங்களிலும், இரண்டுவகை கறுப்பு நிற வண்ணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

விலை மற்றும் விற்பனை

ஐபோன் 7, ஐபோன் 7ப்ளஸ் வெள்ளி, தங்கம், ரோஸ் கோல்ட் ஆகியவை 32ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி அளவுகளில், தொடக்க விலையாக 32ஜிபி- 649 அமெரிக்க டாலர்கள் அதாவது 44000 ரூபாய் விலையில் விற்கப்படும். கறுப்பு வண்ண போன்கள் 128ஜிபி மற்றும் 256ஜிபி அளவில் ஆப்பிள் இணையதளத்திலும், ஆப்பிள் கடைகளிலும், குறிப்பிட்ட டீலர்களிடமும் விற்பனைக்கு வரும். 

பொதுவாக ஐபோன்’கள் லாக் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும். அதை மேம்படுத்தி இம்முறை அமெரிக்கா, யுகே மற்றும் சைனாவில் அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்கள் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். 

ஐபோன்களுக்கான ஆர்டர் நாளை முதல் ஏற்கப்பட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி முதல் விற்கப்படும். ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவில் மட்டும் இது தற்போது கிடைக்கும். இந்தியாவில் கடந்த வாரம் முதல் புதியவகை ஐபோன்’கள் விற்பனைக்கு வந்தது.