ஹாக்கிங் காட்டிய 'பாதை'யில் மெதுவாக பயணிக்கும் இந்தியா

0

2001... நம் நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு மிக மோசமான வாழிடமாக இருப்பதை அனுபவபூர்வமாக சுட்டிக்காட்டினார் ஸ்டீபன் ஹாக்கிங். தாஜ்மஹால், செங்கோட்டை, ஹுமாயூன் டோம், ஜந்தர் மந்தர் மற்றும் குதுப்மினார் முதலிய இடங்களை பார்வையிட விரும்பினார் அந்த மேதை. ஆனால், இந்த அற்புத இடங்களை எல்லாம் தன்னால் முழுமையாக கண்டு ரசிக்க முடியாத வகையில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுக முடியாத நிலையில் இருந்ததை அறிந்தார். இந்திய சரித்திரப் புகழ்மிக்க கட்டிடங்களைக் காண்பதற்காக படிகளில் ஏறுவது உள்ளிட்ட அனைத்துக்குமே பாதுகாவலர்களின் துணை தேவை என்ற நிலை.

ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோயை பொருட்படுத்தாமல், உடலியக்கத்தையும் பேசும் திறனையும் பறிகொடுத்த நிலையிலும், வாழ்நாள் முழுவதும் சக்கரநாற்காலியில் சுதந்திரமாகவும் உறுதியுடனும் வலம் வந்து உலகின் மிகச் சிறந்த இயற்பியல் அறிஞராக சாதித்த மேதை ஸ்டீபன் ஹாக்கிங். இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலின் அற்புதத்தை நேரில் காண வேண்டும் என்றால், அவரது சர்க்கரநாற்காலியைத் தூக்கிச் செல்வதற்கு உரிய பாதுகாவலர்களின் தேவை இருந்தது. ஒரே இரவில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறைக்கு விழிப்பு வந்தது. இந்தியாவில் இருந்து அவர் புறப்பட்டவுடன் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல்தன்மைக்கு ஏற்ற வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் அனைத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான 'அணுகல்தன்மை' கட்டமைக்கப்படும் என்று இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அறிவித்த பிறகுதான், இந்தப் பிரச்சனைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர ஆரம்பித்தன.

இந்திய மாற்றுத் திறனாளிகள் செய்தி மற்றும் தகவல் சேவை (DNIA) அமைப்பின் தோரோதி சர்மா கூறும்போது, 'அணுகல்தன்மை' என்ற சொல்லைப் புரிந்துகொள்ளவே இந்தியாவில் பல சதாப்தங்கள் ஆனது என்றும், அதுவும் உளவுபூர்வமாக அல்லாமல் தற்செயலாகவே உணரப்பட்டது என்றும் சொல்கிறார்.

மாற்றுத் திறனாளிகளை முடக்குவது எது?

ஹாக்கிங் வருகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 1995-ம் ஆண்டிலேயே நம் நாட்டில் மாற்றுத் திறனாளிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஒரே நாளில் நடவடிக்கைகளில் இறங்கிட வழிவகுத்திருக்கிறார் ஓர் உலகப் பிரபலம். இதைக் கண்டு ஆச்சரியப்படுவதா? அல்லது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு தமது 8 சதவீத மக்களுக்குத் தேவையான சிறப்பு வசதிகளை செய்யாமல் கண்மூடிக் கிடந்ததைக் கண்டு வியப்பதா?

குறிப்பாக, உடல் ஊனமுற்றவர்கள் மீதான இந்தியாவின் பொதுப் பார்வையையே இது பகிரங்கமாக வெளிப்படுத்தியது. மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் முழுவதும் துயரத்தை அனுபவிப்பதாக அவர்களைப் பாவத்துக்குரியவர்கள் என்று சிலர் பரிதாபப்படலாம். ஆனால், அவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை மட்டுமே கருத்தில்கொண்டு, சாதாரண மனிதர்களைப் போலவே முழு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதும், அப்படி வாழத்தான் விரும்புகிறார்கள் என்பதும்தான் உண்மை நிலை. அவர்களுக்கு நம்மால் இயன்ற தீர்வுகளையும், உறுதுணையையும், ஊக்கத்தையும் அளிக்காமல் வெறுமனே பரிதாப்படுவதுதான் பரிதாபத்துக்குரியது. இதுபோன்ற செயல்தான் அவர்களது உத்வேகத்தை சீர்குலைக்கும்.

இதுபோன்ற தவறான செயல்களால், மாற்றுத் திறனாளிகள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சமூகத்தில் வெறும் பார்வையாளராக இருப்பதே நம்முடைய வேலை என்று நம்மில் பலரும் கருதுகிறோம். தங்கள் குறையைப் பொருட்படுத்தாமல் முன்னேறியதாக பாராட்டித் தள்ளுவது, முன்னேற முடியாமல் தவிப்பர்களுக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்வது, சாலையைக் கடப்பதற்கு அவர்களது கைகளைப் பிடித்து உதவுவது போன்றவைதான் நமது பங்கு என்று நினைப்பது மிகவும் தவறானது. உண்மையில், ஒரு மாற்றுத் திறனாளி யாருடைய துணையும் உதவியும் இல்லாமல் தன் பணிகளை தானே செய்வதற்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதுதான் சரியான உறுதுணையாக இருக்கும்.

"உடல் ஊனம்தான் திறமையின்மைக்கு வகை செய்கிறது என்று சமூகம்தான் ஒருவரை நினைக்கவைக்கிறது" என்கிறார் ஆக்ஸஸிபில் இந்தியா பிரச்சார இயக்கத்தின் செயலர் முகேஷ் ஜெயின். நடிகரும், நன்கொடையாளருமான விவேக் ஓபராய், "மகத்தான திறமைகள் கொண்ட போற்றப்படாத நாயகர்களாகவே இருக்கும் இவர்களுக்கு வெளிச்சம் தர வேண்டியது நம் கடமை" என்கிறார்.

கடந்த 2007-ல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. ஊனமுற்றோர் உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா கையெழுத்திட்டது. பொதுமக்கள் என்ற முறையில் சரியான சூழல், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் யு.என்.சி.ஆர்.பி.டி-யின் பிரிவு 9 கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால், நாம் இந்த நிபந்தனைகளை முற்றிலும் செயல்படுத்தத் தவறிவிட்டோம். 'ஆக்ஸஸ்எபிலிட்டி'யின் நிறுவனரும், இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல்தன்மைக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவருமான ஷிவானி குப்தா, தன்னைப் போன்ற 7 கோடி மக்களுக்கு உரியனவற்றை அரசு செய்யத் தவறிவிட்டதை விளக்குகிறார். "மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை 17 மாநிலங்கள் மட்டும்தான் செயல்படுத்தின. பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கண்டுகொள்ளவே இல்லை. அணுகல்தன்மையை உருவாக்க எல்லா மாநிலங்களுமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அணுகத்தக்க வசதிகள் இருந்தால் மட்டுமே எந்த ஒரு திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதால் மட்டுமே பலனில்லை. செயல்திட்டங்களை அரசு முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் சட்டம் என்று இல்லாமல், அனைத்து அம்சங்களும் அடங்கிய முழுமையான சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும். வேலைவாய்ப்பு, ஐ.சி.டி, ஒலிபரப்பு, போக்குவரத்து, கட்டமைப்பு, கல்வி உரிமைச் சட்டம் என அனைத்துக் கொள்கைகளிலும் அணுகல்தன்மையை கட்டமைக்க வேண்டும். தனியார் துறைகளில் கூட இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. உதாரணமாக, ஒரு கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும்போது, அந்தக் கட்டடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல்தன்மைக்கு எந்த வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்த பின்னரே ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்" என்கிறார் ஷிவானி.

வேற்றுமைகளை களைவதற்கான சூழலியலை உருவாக்குவதற்காக உள்ளார்ந்த தன்மை என்ற சொல்லை இப்போதெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்துவது உண்டு. ஆனால், இந்த விஷயத்தில் மாற்றுத் திறனாளிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது ஷிவானியின் கவனிக்கத்தக்க கவலையாக உள்ளது. இந்த அவல நிலையை மாற்றுவதற்கு, 'மாற்றுத் திறனாளிகளுக்கான உலகளாவிய வடிவமைப்பு' என்ற அம்சம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

இதனிடையே, நம்முடைய சூழலியல் அமைப்பு பற்றிய முழுமையான புரிதலுக்கான திட்டங்களிலும் அடிப்படைத் தவறுகள் நிறைந்திருப்பதை உணர முடிகிறது. ஆக்ஸஸபிலிட்டி (அணுகல்தன்மை) தொடர்பாக முறையான படிப்போ கல்வித் திட்டமோ இந்தியாவில் எதுவும் இல்லை என்ற நிலையைப் போக்க வேண்டும். இது தொடர்பான படிப்பை முடிப்பதற்காகவே லண்டன் சென்று திரும்பி, இந்தத் துறையில் ஷிவானி நிபுணத்துவத்தை எட்டினார். இந்தியாவில் ஆக்ஸஸபிலிட்டியை முறைப்படி அறிந்து, அதை செயல்படுத்துவதற்கு தொழில் ரீதியிலான நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டியதுதான் முழுமுதற் தேவையாக இருக்கிறது.

ஆக்ஸஸிபில் இந்தியா பிரச்சார இயக்கம்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 24, 2015 அன்று மும்பையில் 'அணுகல்தன்மை மிக்க இந்தியா' என்ற பொருள்தரும் ஆக்ஸஸிபில் இந்தியா பிரச்சார இயக்கம் (Accessible India Campaign - செளகம்ய பாரத் அபியான்) தொடங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு உலகளாவிய அணுகல்தன்மையை தேசம் முழுவதும் ஏற்படுத்தித் தருவதே இதன் உயரிய நோக்கம்.

இந்தப் பிரச்சார இயக்கத்தின் மூலம் 1995 சட்டத்தின் அம்சங்களை முழுவீச்சிலும் உறுதியுடனும் நடைமுறைப்படுத்துவதும் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'மேக் த ரைட் ரியல்' என்ற வாசகத்தை உள்ளத்தில் பதியச் செய்யவும், "பொதுப் போக்குவரத்து, அறிவுசார் நிலையங்கள், தகவல் தொடர்பு என அனைத்து முக்கிய துறைகளிலும் மாற்றுத் திறனாளிகள் அணுகல்தன்மையை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்" என்பதும் மத்திய அரசு உறுதிபூண்ட விஷயங்களில் குறிப்பிடத்தக்கவை. இந்த இயக்கத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பு, ஆக்கபூர்வ நலன்கள் மற்றும் மரியாதை கிடைத்திட வழிவகுக்கப்படும். இந்தியாவில் ஆக்கப்பூர்வமும் மரியாதையும் மிக முக்கிய அம்சங்கள். அதேவேளையில், மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை சரியாக அடையாளம் காணாமல், அவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு என்பதும் இன்னமும் நீடித்து வருகிறது. இவ்வாறாக, முன்முடிவுகளுடன் மாற்றுத் திறனாளிகளை எடைபோடுவதால், அவர்களது வாழ்க்கையே மீளாத் துயரத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறது.

நம்பிக்கையூட்டுகிறதா செயல் திட்டம்?

ஆக்ஸஸிபில் இந்தியா பிரச்சார இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 நகரங்களில் கவனம் செலுத்தப்படும். 50-ல் இருந்து 100 அரசு கட்டிடங்கள் வரை அல்லது அரசு இல்லங்கள் முதலானவற்றில், தலா ஒவ்வொரு நகரிலும் ஒரு ஆக்ஸஸபிலிடி ஃபேஸ்லிஃப்ட் (accessibility facelift) நிறுவப்படும். அத்துடன், மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லத்தக்க வகையிலான கட்டமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் 50 சதவீத அளவில் நிறைவடையும். குறிப்பாக, நாட்டிலுள்ள 75 பெரிய ரயில் நிலையங்களும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகள் யாருடைய துணையுமின்றி புழங்கத்தக்க வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய சலுகைகள் கிடைப்பதற்கான சான்றிதழ்கள் வழங்குவதில் கடந்த காலங்களில் பிழைகள் இருந்தன. இதனால், சலுகைப் பெறத்தக்கவர்கள் பலனடைய முடியாமல் தவித்தனர். இதை சரிசெய்யும் வகையில், அடுத்த பிப்ரவரிக்குள் 'யுனிவர்சல் அடையாள அட்டை'யை வழங்குதல் மற்றும் 12 வகையான மாற்றுத் திறனாளிகளை அங்கீகரித்தது ஆகிய நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.

கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிலும் உள்ளார்ந்த சமூகத்தை உருவாக்க, மாற்றுத் திறனாளிகளுக்கு சமஉரிமை கிடைத்திட வழிவகுப்பதே அரசின் நோக்கம் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார் சந்த் கெலோட் அறிவித்தார். "தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஒரு பெரிய சமூகம் புறக்கணிக்கப்படுவது என்பது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தடையாக அமைந்துவிடும்" என்றார் அவர்.

முதல் ஆண்டின் 3000 வலைதளங்களில் எழுத்துகளுடன் பேச்சு, ஒலி வர்ணனை மற்றும் சப்-டைட்டில்கள் வசதி உண்டாக்கப்படும் என்று அவர் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்களுக்காக, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

"1995-ல் திட்ட வரைவுகளை உருவாக்கினோம். ஆனால், அவற்றுக்கு செயல்வடிவம் தருவதற்கான நடைமுறைகள் போதவில்லை. எனவே, நமக்கு சரியான செயல்திட்டம் தேவைப்படுகிறது" என்றார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபதனாவிஸ். பிரச்சார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, மும்பை, புனே, நாசிக் மற்றும் நாக்பூரை அணுகல்தன்மை மிக்க நகரங்களாக மாற்றுவது தனது பொறுப்பு என்றார். "பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கட்டிடங்களில் ஆக்ஸஸிபிலிடி தேவையானவற்றைக் குறிப்பிட்டு படங்களைப் பகிரக் கூடிய செயலி ஒன்று விரைவில் தொடங்கப்படும். இது, அரசுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்" என்றார் அமைச்சகத்தின் இணைச் செயலர் முகேஷ்.

பிரச்சார யுக்தியால் இலக்கை எட்ட முடியாது!

அதேநேரத்தில், 'பிரச்சார யுக்தி'யால் ஆக்ஸஸிபிலிட்டி என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்று கருதுகிறார் ஷிவானி குப்தா. "ஆக்ஸஸிபிலிட்டிக்கு நீண்ட காலத் திட்டம் தேவை. இந்த அபியான் மூலம் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து தருவது என்பது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் கொள்கையிலும் கையாளப்பட வேண்டும். உலகளாவிய கட்டமைப்புக்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் அவர்.

சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவு. மாற்றுத் திறனாளிகள் சட்டத்தில், தனியார் வசமுள்ள மக்கள் புழங்கும் பொது இடங்களான உணவங்கள், சினிமா திரையரங்குகள் முதலானவை உட்பட்டவை அல்ல. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும் அதில் ஆக்ஸஸிபிலிட்டி கட்டாயம் என்பதில் ஒபாமா அரசு உறுதியாக உள்ளது. "மோடியும் அந்த வழியைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என நம்பலாம். உதாரணமாக, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆக்ஸஸிபிலிட்டியை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் லிஃப்ட் நிறுவவதற்கான ஒப்பந்தம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களையும் ஏன் இந்தச் சட்ட திட்டங்களுக்குள் சேர்க்கக் கூடாது" என்று வினவுகிறார் ஷிவானி.

ஒரு பிரச்சனையை ஆழமாகவே அணுக வேண்டும் என்று சொல்லும் அவர், "மாற்றுத் திறனாளிகள் சமூகம் முழு திருப்தி அடையும் கொள்கைகள் இல்லை என்பது உண்மை. 2014 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அவை முன்னேற்றம் தரவல்லதா? போதுமானதாக இல்லையே. எல்லாவிதமான கொள்கைகளும் நெறிமுறைகளும் அனைத்துத் தரப்பாலும் கட்டாயம் பின்பற்றக் கூடிய வகையில் உறுதி மிகுந்ததாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கும்போது, அவர்களுடனும் நேரடியாக விவாதித்தும் ஆலோசித்தும் செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.

அதேவேளையில், "இவை எல்லாம் பெரிய எண்ணிக்கைகள், பெருங்கனவுகள். ஆனால், நம் அச்சத்தைவிட மிகப் பெரியதாகவே கனவுகள் இருக்க வேண்டும். இன்று முதல் 25 ஆண்டுகள் கழித்து, இந்தியாவை அணுகல்தன்மை மிக்க நாடாக மாற்றுவதறு நாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தை முன்னெடுத்தோம் என்று நம்முடைய குழந்தைகளிடமும் பேரக்குழந்தைகளிடமும் பெருமிதத்துடன் சொல்ல வேண்டும்" என்று நம்பிக்கை தெரிவித்தார் முகேஷ்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்