'செவாலியே கமல்ஹாசன்' - உலக நாயகன் சிறப்புக்கு இன்னொரு மகுடம்!

0

'உலக நாயகன் கமல்ஹாசன்' அவருக்கு மேலும் ஒரு மணி மகுடமாக பிரான்ஸ் நாடு, உயரிய விருதான 'செவாலியர்' (Ordre des Arts et des Lettres) விருதை அறிவித்துள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரை உலகுக்கு சிறப்பாக ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாரிஸ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பன்முக கலைஞன் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்படும்.

கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சாதனை மனிதர்களைத் தேடி வழங்குவதுதான் இந்த விருதின் சிறப்பு. 1957 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் செவாலியர் விருது, 1995 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அந்த விருதை தற்போது அவரது மனம் கவர்ந்த நடிகர் கமல் பெறப்போகிறார்.

தனது முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா' மூலம் திரையுலக பிரவேசம் செய்த கமல்ஹாசன், 6 வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக தேசிய விருதை பெற்றார். தற்போது 61 வயதாகும் கமலை செவாலியர் விருது தேடிவந்திருக்கிறது. தேசிய விருதுகள் உள்பட பல நூறு விருதுகளுக்கு சொந்தகாரரான கமலுக்கு 1990 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் 2014 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

நடிப்பு மட்டுமல்லாமல், இயக்கம், தயாரிப்பு, கதை, பின்னணிப் பாடல் என்று திரை உலகின் அனைத்து பிரிவுகளிலும் சாதனை புரிந்துவருபவர்தான் கமல். சபாஷ் நாயுடு, ஒரே இரவு, தலைவன் இருக்கின்றான், விஸ்வரூபம்-2 என்ற இவரது நான்கு படங்கள் அடுத்த வெளியீடாக வரிசைகட்டி நிற்கின்றன.

செவாலியர் கமலுக்கு யுவர் ஸ்டோரியின் வாழ்த்துகள்..!